சனி, 22 ஜூன், 2013

கடவுள் சுற்றுலா சென்று விட்டாரா?


பகுத்தறிவாதி : அய்யா நண்பரே, வட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குகிறதே, புண்ணிய பூமியான இறைவன் இருக்கும் இடத்தை தேடித்தானே பக்த கோடிகள் அனைவரும் யாத்திரை சென்றனர். ஏனப்பா அவர்களுக்கு இந்த சங்கடங்கள். இப்போது மக்களை காக்க வேண்டிய உங்கள் கடவுள் எங்கேயப்பா இருக்கிறார்?


ஆன்மிகவாதி : அவருக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.


பகுத்தறிவாதி : உங்கள் கடவுள் "வட இந்தியாவில் மழை அதிகம் பொழிகிறது, குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கிறது" என எண்ணி தென் இந்தியாவுக்கு இன்ப சுற்றுலா வந்து விட்டாரா?


பக்தர்களே,யோசிப்பீர்!!!

எயிட்ஸ் கர்ம வினைப்பயனா?

பகுத்தறிவாதி : அகிலமும் ஆளும் இறைவனை தரிசிக்க இமய மலைக்கு யாத்திரை வந்த பக்த கோடிகளை, கடவுள் ஏன் கை விட்டு விட்டார்? 

ஆன்மிகவாதி : அவர் அவர்களின் கர்ம வினைப்பயன் 


பகுத்தறிவாதி : கர்ம வினையென்றால் என்ன?


ஆன்மிகவாதி : அதாவது அவர்கள் தங்களுடைய முன் ஜென்மத்தில் செய்த செயல்களின் வினைப்பயனை இப்போது அனுபவிக்கிறார்கள்.


பகுத்தறிவாதி : சரி அய்யா, உங்களுக்கு உயிர்கொல்லி நோயான எயிட்ஸ்(AIDS) வந்தாலும் இப்படியே தான் சொல்வீரா? அதற்கு காரணம் கடந்த பிறவியில் நீங்கள் செய்த பாவத்தின் வெளிப்பாடா? அல்லது இந்த பிறவியில் நீங்கள் ஆடிய ஆட்டமா? எது காரணம் ?


பக்தர்களே,யோசிப்பீர்!!!


பின் குறிப்பு : எயிட்ஸ் நோய் 1981 ஆம் ஆண்டுதான் கண்டு பிடிக்கப்பட்டது.

புதன், 9 ஜனவரி, 2013

யார் தமிழர்?


யார் தமிழர்?
தமிழர்கள் என்றால் யார்? அவர்களை எப்படி இனம் காணலாம்?

”அட, இதில் யோசிக்க என்ன இருக்கிறது. தமிழ் நாட்டில் வாழும் எல்லோரும் தமிழர்கள் தான்,” என்று பட்டென சொல்ல தோன்றினால், “அப்படியானால் தமிழ் நாட்டில் வாழும் உருது பேசுபவர் தமிழரா?” “வெளி நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள் தமிழர்கள் இல்லையா?” என்ற கேள்வியும் வரும்.

அப்படியில்லை, அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் பேசுபவராக இருந்தால் அவர் தமிழரே, என்று விளக்கம் சொன்னலோ, அப்படியானால் நெதர்லாந்துகாரரான கமில் ஸ்வெலிபில் எனும் தமிழ் அறிஞரும் தமிழர் தானா? ஒரு சாராசரி தமிழனை விட, அதிகம் தமிழை பற்றி தெரிந்துவைத்திருக்கிறவர் ஆயிற்றே. அப்படியானால் அவர் தமிழர் தானே? என்று வாதிட்டாலோ, “அதெல்லாம் இல்லை, அவருக்கு எவ்வளவு தமிழ் தெரிந்திருந்தாலும், அவருடைய அசல் தாய் மொழி டச்சு தான், அவர் சொந்த விருப்பத்திற்க்காக அவர் தமிழ் கற்றார்…. தேர்சி பெற்றார். அவர் தமிழுக்காக, எவ்வளவு சாதித்திருந்தாலும் அவர் தமிழர் ஆக மாட்டார். காரணம், அவர் தாய் மொழி தமிழே இல்லை” என்று பதில் வரும்.

இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு வேளை, தமிழ் பெற்றோருக்கு பிறந்தும், பல காலம் வெளி நாட்டில் வாழ்ந்ததால் தலைமுறை தலைமுறையாக, ஆங்கிலம், ஜெர்மன், அல்லது, ஃபிரென்ஞ்ச் மட்டுமே பேசும் தமிழ் தெரியாத மனிதராக இருந்தால், அப்போது அவர் தமிழரில்லையா? உதாரணம்: இன்று ஃபிஜி, மொரீஷியஸ், செஷல்ஸ், தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தீஸில் வாழும் பல தமிழ் வம்சாவழியினருக்கு தமிழே தெரியாதே. அவர்களின் தாய் மொழி என்று அவர்கள் நினைப்பது, அந்தந்த ஊரின் மொழியை மட்டும் தானே.

அல்லது, வேலை நிமித்தமாக தமிழ் நாட்டில் வசிக்க நேர்ந்ததால், தொன்று தொட்டு பல தலை முறைகளாக தமிழையே பேசிக்கொள்கிறார்கள் …..உதாரணத்திற்கு இன்று தமிழ்நாட்டில் வாழும் பல ரெட்டிமார்கள் வீட்டிலும், மனதிற்குள்ளும் தமிழை தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தெலுங்கே தெரிவதில்லை…..அப்படியானால் அவர்கள் தமிழர்களா?

அப்படி இல்லை, தமிழ் தெரியுமோ தெரியாதோ, அது அவ்வளவு முக்கியம் இல்லை. அவர்களின் பெற்றோர்கள் எந்த மொழியை பேசும் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தான் முக்கியம். பெற்றோரின் பூர்வீக மொழி மட்டும் தான் அடையாளம் என்றால், என் தாய் தமிழச்சி இல்லை, வேற்றூ மொழிகாரி என்றால், நான் தமிழர் இல்லையா?

இல்லை, உன் தந்தை தமிழராக இருந்தால் போதும், யாராவது ஒரு பெற்றோர் தமிழராக இருந்தாலே தமிழர் என்ற அந்தஸ்த்தை பெறலாம், என்றாலோ, அடுத்து வரும் கேள்வி, “அப்படியானால் தமிழ் என்பது மொழியின் அடையாளமா? இனத்தில் அடையாளமா?”

தமிழ் எனும் மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொண்டு பேசலாம், காந்திகூடத்தான் தென் ஆப்பிரிக்கா சிறையில் இருந்த போது தமிழை கற்றுக்கொண்டார், அதற்காக அவர் தமிழராகிவிட முடியுமா? அதெல்லாம் இல்லை, தமிழ் என்பது ஒரு இனம்.

சரி, இனம் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து, ஒரே ஆரம்ப மொழியை பேசி, ஒருமித்த கலாச்சாரம், கருத்தாக்கம், மரபு, நம்பிக்கை, ஆகியவற்றை பின் பற்றும் ஒரு குழுவை தான் இனம் என்போம். இப்படி ஆரம்பித்த இனம், பிறகு வெவ்வேறூ பாதைகளை தேடி பிரிந்து போனாலும், அவர்கள் ஆரம்பத்தில் ஒரே குடும்பமாக இருந்ததால், கடைசி வரை அவர்கள் சகோதரர்களே…..அதனால் தான் தமிழர், தெலுங்கர், மலையாளி, துலு, கன்னடக்காரர், என்ற மேலோட்டமான பிரிவினைகளை தாண்டி, அனைத்து திடராவிடமொழி பேசுபவர்களும் ஒரே கூட்டம் தான். காரணம் இவரக்ள் எல்லோருமே ஆரம்ப காலத்தில் ஒரே மொழியை பேசி, ஒரே இடத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தவர் தான்.

அது சரி, ஆனால் இந்த திராவிட இனம் என்பது எங்கே, எப்போது, எப்படி தோன்றியதாம்? அது கல் தோன்றி மண் தோன்றும் காலத்துக்கு முன்னால் எல்லாம் தோன்றியது என்று நாம் மிகை படுத்தி, “முதலில் தோன்றிய மூத்த குடியாக்கும்” என்றெல்லாம் கதை விட்டுக்கொண்டிருக்க முடியாது. காரணம் இன்று எல்லா கூற்றூகளையும் அறிவியல் ரீதியாக பரிசோதிக்க முடியும்! மானுடம் என்ற ஜீவராசி தோன்றியே ஒரு மில்லியன் ஆண்டுகள் தான் ஆகின்றன, என்பது அறிவியல் உண்மை, அப்புறம், இந்த கல் தோன்றி, மண் தோன்றா காலத்து கதைகளை சொன்னால், அது அபத்தம் ஆகிவிடுமே!

கதை எல்லாம் எதுவுமில்லை, நிஜம் இது தான்: கிட்ட தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிந்து சமவெளியில் நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள். ஆஸ்கோ பார்போலா என்ற மொழியியல் புணரும், ஐராவதம் மஹாதேவன் அவர்களும் தெள்ள தெளிவாக சொல்லி இருக்கிறார், சிந்து சவவெளி காரர்களின் எழுத்து ஆதி திராவிட எழுத்துவடிவம் தானாம்! என்றாலும், அடுத்த கேள்வி எழுகிறது…..சிந்து சமவெளிக்கு திராவிடர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள், அதற்கு முன்னால் அவர்கள் எங்கே இருந்தார்கள்?

எல்லா மனிதர்களும் ஆரம்பத்தில் தென் கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான் தோன்றினார்கள். அங்கே தான் ஹொமினினே என்கிற ஒரு வாலற்ற குரங்கு இனம் பரிணாம வளர்ச்சியில் உரு மாறிக்கொண்டே இருந்தது. இந்த ஹோமினினே குரங்கு தான் கிட்ட தட்ட ஐந்தாறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சிம்பான்சி, போனோபோ, ஆஸ்திரலோபிதிகஸ் என்கிற மூன்று வகைகளாக பிரிந்தது. இதில் ஆஸ்திரலோபிதிகஸ் என்கிற வகை மேலும் மேலும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு, உருமாறிக்கொண்டே போய், கிட்ட தட்ட ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போது இருக்கும் மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் பேப்பியன்ஸ் என்கிற இனமாக உருவானது. இந்த இனம் தோன்றியது தென்கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான். ஆரம்பத்தில் இந்த இனத்தில் ஜனத்தொகை சில நூறுகளாக மட்டுமே இருந்தன. இவை ஒரே மொழியை பேசின. ஒரே விதமான நம்பிக்கைகளை கொண்டிருந்தன. ஒரே விதமான மரபுகளை பின்பற்றின. உணர்ச்சிகள், தேவைகள், ஆசைகள், எண்ணங்கள், அவ்வளவு ஏன், உடல் மற்றும் மனநலநோய்கள் கூட இவற்றுக்கு ஒரே மாதிரி தான் இருந்தன. இந்த இனம் உணவு தேடி, நாடோடிகளாய் பல புதிய திறந்தவெளிகளை நோக்கி பயணித்தன. இப்படி பரவிய இந்த மனித கூட்டம், கடந்த பத்தாயிரம் ஆண்களகாய், பல திக்குகளுக்கு பிரிந்து போயின. போன இடத்தில் புது புது உணவுகளை உட்கொண்டு, புது புது வாழ்க்கை முறைகளை பின்பற்றி, மொழியை மாற்றி மாற்றி பேசினாலும், இன்று வரை இவை அனைத்துமே ஒரு இனம் தான். உலகின் எந்த கோடியில் பிறந்த மனிதருக்கும், வேறு எந்த கோடியில் பிறந்த அடுத்தவர் ரத்த/உருப்பு தானம் செய்ய முடியும், இருவரது திசுகளும் பொருத்தமாய் இருந்தால். இதை விட பெரிய அதிசயம், இன்றும் மனிதர்களுக்கும் போனோபோ குரங்குகளுக்கு மரபணுக்கள் கிட்ட தட்ட 98% ஒரே மாதிரி இருக்கின்றனவாம், பொனோபோக்களின் உதிரத்தை மனிதர்களுக்கு செலுத்த முடியுமாம். பொனோபோக்களுக்கு மனிதர்களுக்கு இனகலப்பு செய்தால் குழந்தைகூட பிறக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஐந்தாறு மில்லியன் வருடங்களுக்கு முன்பே பிரிந்து போன சகோதர இனக்களான பொனோப்போவும் மானுடமும் இத்தனை ஒற்றூமைகள் இன்னும் இருக்கின்றன என்றால், பத்தே பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உணவை தேடி போனதில் பிரிந்து போன மனித வர்கம் இன்னும் எத்தனை நெருக்கமானதாக இருக்க வேண்டும்!

அதனால் தான் எத்தனை மொழிகளை நாம் பேசினாலும் எல்லா மொழிகளுமே தாயை, “மா” என்று தான் அழைக்கின்றன. அதனால் தான் நெதர்லாந்தில் பிறந்தாலும் கமில் ஸ்வெலிபில், மாதிரியான ஆசாமிகளுக்கு தமிழ் மீது ஆர்வம் வருகிறது. ஆக, எல்லா மனிதரக்ளும் அடிப்படையில் ஒன்று தான் என்றால் தமிழர்கள் என்பவர்கள் யார்?

ஆஃப்ரிக்காவில் தோன்றி, சிந்துசமவெளியில் நாகரீகம் கண்டு, திராவிட மொழியையும், கலாச்சாரத்தையும் தோற்றூவித்து, பல ராஜியங்கள் கண்டு, இன்னும் இன்னும் பல புதிய நிலபறப்புகளுக்கு பரவிக்கொண்டு இருக்கும் அந்த இனம் தான் தமிழ் இனம். இந்த பெரிய பயணத்தில் அவர்களின் மொழி மாறி இருக்கலாம், அவர்களின் வாழ்க்கை முறை மாறி இருக்கலாம்….ஆனால் தொடர்ந்து பயணிப்பதும், பிழைப்பதும், புதிய சூழலுக்கு தக்கபடி தங்களை மாற்றிக்கொண்டே போவதும் தான் இவர்களின் அடையாளங்கள். இவற்றை வைத்து இவர்களை நீங்கள் இனம் காணலாம்…..இப்பது சொல்லுங்கள் பார்ப்போம், தமிழர்கள் என்றால் யார்?

--மருத்துவர் ஷாலினி.

சனி, 5 ஜனவரி, 2013

சாதியம் என்ற கருவறையின் சாவி பெண்ணின் கர்ப்பப்பையினுள் உள்ளது

சாதியம்  என்ற கருவறையின் சாவி பெண்ணின் கர்ப்பப்பையினுள் உள்ளது.
அப்போ சாதியை எப்படி உடைப்பது? இங்கதான் பெரியார் உதவிசெய்கிறார்.  அவர் பெண்களை கர்ப்பத்தடை செய்ய சொன்னார்  பெண்கள் கர்ப்பத்தடை பண்ணினால் ஆண்மை ஒழியும், ஆண்மை ஒழிந்தால் பெண்கள் விடுதலை பெறுவார் என்றார். இந்த வாதத்தை கொஞ்சம் விரிவு படுத்தி பாருங்கள் . பெண்  விடுதலை பெற்றால் சாதியம்  ஓயும்.  ஆகவே என் இனிய பெண் சமுகமே அனைவரும் கர்ப்பத்தடை செய்யுங்கள். 

சிலர் கேட்க கூடும். ஏன் பெண்களே கேட்கக்கூடும். பெண்  கர்ப்பத்தடை செய்தால் உலகம் எவ்வாறு  விருத்தி அடையும் என்று?. இதற்கும் பெரியார் விடை அளிக்கிறார்,  உலகம் விருத்தி அடையாவிட்டால் பெண்களுக்கு என்ன நட்டம்? விருத்தி  அடைந்தால் என்ன இலாபம்?  உலகம் தோன்றியதில் இருந்து மனித வர்க்கம் இதுவரை பெருகிகொண்டுவருகிறது. இதனால் என்ன லாபம் வந்துவிட்டது? .  இன்று பொருளாதார மேதைகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளுபவர்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவேண்டும் என்றும் அது நன்மை அல்ல என்றும் வாதிடுகிறார்கள். ஜனநாயக  அரசாங்கங்கள்  என்று பீத்திக்கொள்ளும் போலி அரசுகளும் இந்த அறிவு ஜீவிகளுக்கு பெரும் பொருள் செலவழித்து மக்கள் தொகை பெருக்கம் நன்மையா தீமையா என்று கண்டுபிடிக்க சொல்கிறது. இதைத்தானே அன்று பெரியார் சொன்னார். அப்போது தலைகால் புரியாமல் குதித்தீர்கள். இப்போது எங்கே போயிற்று அந்த வீரம்?

போலி பொருளாதார மேதைகளே, இருபத்தைந்து ரூபாய் செலவில் பெரியார் என்ற சமுக விஞ்ஞானி சொன்னதை வாங்கி படிங்கள். இலவமாகவும் இணையத்தில் கிடைக்கிறது . ஏழை மக்களின் காசாவது மிச்சமாகட்டும். 

புதன், 17 அக்டோபர், 2012

வடை போச்சே, பிள்ளையார்


இன்று வீட்டில் (பருப்பு)வடை சுட்டேன்.  நானும் என் நண்பரின் மனைவியும் அப்போது  பேசிக்கொண்டு இருந்தோம். நண்பரின் மனைவி இந்து மத பாரம்பரியத்தில் வளர்ந்த, பின்பற்றி கொண்டு இருக்கும் பெண்.   அவர் சட்டியில் மாவை பிசைந்து போட, நான் அதை வடையாக எடுத்து கொண்டு இருந்தேன்.  அப்போது நடந்த உரையாடல்

தோழி(நண்பரின் மனைவி) :  இன்னைக்கு எப்படியாவது முதல் வடையை கடவுளுக்கு படைத்து விட வேண்டும், அதன் பின்புதான் நாம் சாப்பிட வேண்டும்
நான் : ????
தோழி(நண்பரின் மனைவி) : (நான் சுயமரியாதைக்காரன் என்பது அவருக்கு வெட்ட வெளிச்சம், ஆகவே என்னுடைய உணர்வை  புரிந்து கொண்டு), என் அம்மா அவ்வாறு சொல்வார்கள். ஆகவே நானும் அதை செய்ய முற்படுகிறேன்.
நான் :  அட முட்டாளே, உங்களது நீங்கள் இன்று செய்யும் தொழிலை நேற்று உங்கள் அம்மா செய்தாரா? நீங்கள் (Msc) படித்துள்ளீர்கள், உங்கள் அம்மா படித்துள்ளாரா?
தோழி(நண்பரின் மனைவி)  : இல்லை
 நான் : ஏன் அறிவை மட்டும் காலத்திற்கு ஏற்ப, பாகம் பிரித்து கொள்கின்றிர். மூடத்தனத்தை மட்டும் எக்காலமும் பாகப்பிரிவினை செய்யாமல் அப்படி அறுவடை செய்து கொள்கின்றிர்?
தோழி(நண்பரின் மனைவி) :  பதில் இல்லை.
நான் : உங்களை மத நம்பிக்கை கைவிட்டு, இன்றே பகுத்தறிவாளியாக மாறிவிடுங்கள் என்று நான் சொல்லவில்லை. தனி அறைக்குள்ளோ அல்லது கோயில்களுக்கோ வழிபாடு செய்வதோடு நிறுத்தி கொள்ளலாமே?  மற்றபடியான மூட நம்பிக்கையான செயல்களை விட்டு விடலாமே? அதுதானே அறிவிற்கு அழகு? படித்த அறிவை பயன் படுத்தவே மாட்டேன் என்று கங்கணம் கட்டி கொண்டு அலைவது ஏனோ?

கடைசியில், அவர் கடவுளுக்கு வடையை படைக்கவே இல்லை, ஒரு வேளை "பிள்ளையார் வடை போச்சே", இந்த படுபாவி நாசமாக போக என்று சாபம் விட்டு இருப்பாரோ?

பின்குறிப்பு  1: பல நிமிடங்கள் ஏன் இவ்வாறான மூட நம்பிக்கைகளை கைவிட வேண்டும் என்று அவருக்கு பகுத்தறிவு புகட்டினேன். மாற்றம் எதாவது தென்படுகிறதா என்பது அடுத்த முறை வடை சுடும் போது தெரிய வரலாம்.

பின் குறிப்பு 2 : இதற்கு முன்னர்  பல நேரங்களில் நான் முதலில் சட்டியில் இருந்து எடுத்தவுடன் தின்று இருக்கிறேன், ஆகவே இன்று அவர் அதை தடுத்து விட வேண்டும் என்று நினைத்து  இருக்கலாம். ஆனால் கடைசியில் நடந்தது எதிர்மாறானதே!!!

பின்குறிப்பு 3: இந்த குறையை (பிள்ளையார் சாபத்தில் இருந்து விடுபட)  நிவர்த்தி செய்ய எதாவது பரிகாரம் இருக்காஇருந்தா சொல்லுங்கள் தோழர்களே!!!

திங்கள், 10 செப்டம்பர், 2012

உயர்திரு பட்டா கத்தி வீரர் ஞாநி அவர்களே


என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய  மூத்த பத்திரிக்கையாளர்,  அரசியல் விமர்சகர்,  எழுத்தாளர்  திரு ஞாநி அவர்களே,  உங்களை போன்ற பட்டா கத்தி வீரர்களின் செய்திகளை வெளியிட தமிழகத்தின்  உண்மையான நடுநிலை இதழ்/தொலைக்காட்சி   புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் உள்ளன.  அட்டைக்கத்தி வீரன் வைகோவின் செய்தியை வெளியிட அப்படி வேற எதுவும் நடுநிலை ஊடகங்கள் இல்லையே இந்த இந்திய திருநாட்டில்.

தினமலம் போன்ற தமிழகத்தின் சாபகேட்டு பத்திரிக்கைக்கு கல்லில்(சிலை) இருந்து பால் வடிந்தது, ஒரு ஆப்பத்தை சாய் பாபா இரண்டாக்கினார் என்ற ஆன்மிக குப்பைகளையும்,  வாலு  நடிகர் காலு நடிகையின் கையை பிடித்து இழுத்து  கலாட்டா பண்ணினார் என்று காம கதைகளை வெளியிடவும் மட்டுமே நேரமும் இடமும் உள்ளது.   ndtv/headlines today போன்ற வட இந்திய ஆங்கில ஊடகங்களுக்கு தமிழ்நாடு என்றால் அது எதோ துபாய் பக்கம் தூத்துக்குடி பக்கம் உள்ள எதோ ஒரு ஊரு. அவர்களுக்கு "who looks sexy priyanka chopra or katrina kaif?"  என்று   கண்டுபிடிக்கவே  நேரம் இல்லை. அப்படியே மிஞ்சி போய் எதோ கொஞ்சம் நேரம் கிடைத்தால் முகமுடி போன்று உலகமகா காப்பியங்களின் திரை விமர்சனங்களையும், நீ தானே என் பொன்வசந்தம் போன்ற சமுக சீர்திருத்த, புரட்சி படைப்புகளின் பாடல் விமர்சனங்களையும் regional section பகுதியில்  போட மட்டும்தான்  நேரம்  இருக்கிறது. மக்கள் தொலைக்காட்சி  போய் பாருங்கள் இராமதாஸ் பற்றிய செய்திகள் இருக்கும். தெருவில் போய் பாருங்கள் வைகோ எதோ ஒரு மூலையில் தொண்டை கிழிய கத்திக்கொண்டு இருப்பார்.அதாவது உங்கள் பார்வையில்  அவரின்  அரசியல் ஆதாரத்திற்காக மட்டுமாவது எதாவது அட்டகத்தி வசனங்களை பேசிகொண்டிருப்பார். உலகம் உருண்டை ஞாநி அவர்களே. பின்னாலும் முன்னாலும் பக்கவாட்டிலும் திரும்பி பாருங்கள், புதிய தலைமுறையில் மட்டுமே தலையை நுழைத்து தேடிக்கொண்டு இருந்தால் கிடைக்காது

என்னை போன்றவர்கள் தேடித்தேடி  பார்த்தால், நடுநிலையாக  இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அல்லது விருப்பம் கொண்ட   வைத்தி மாமா போன்றோரின் ஊடகங்களில் எதாவது ஒரு மூலையில் வைகோ என்ற அட்டைக்கத்தி வீரனின் செய்திகள் இடம் பெற்று இருக்கும்.  நீங்கள் தமிழகத்தின் ஒரே நடுநிலை ஊடகம் புதிய தலைமுறையில் மட்டுமே பார்த்தால் எப்படி கிடைக்கும். அப்படியே அவர்கள் வைகோவை தேடி சென்று அவர்கள் செய்தி சேகரித்து வெளியிட்டால் உங்களை போன்ற நடுநிலையார்கள் எங்கே போய் பேசுவீர்கள்? வெளிநாட்டில் இருந்தாலும், நானும் நீங்கள்  நடுநிலை நடுநிலை சொல்கிறீர்களே என்று புதிய தலைமுறையின் காணொளிகளை youtube முழுவதும்  கடந்த ஒருவருடமாக தேடிவிட்டேன். தன்மான தலைவன், முத்தமிழ் அறிஞர், மூதறிஞர், செம்மொழிபுலவர் கலைஞர் கருணாநிதியின் அக்கிரமங்களையும்,  புரட்சி தலைவி, தமிழகத்தின் ஒரே அம்மா, செல்வி கொடநாட்டு கோமளவல்லி ஜெயலலிதாவின் கூத்துகளையும் காணவே இல்லை.

புதிய தலைமுறை தொலைக்காட்சி கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்தும், அதன் போராட்டம் பற்றியும் செய்திகளை தமிழக பாசிச அரசுக்கு எதிராக செய்து வெளியிட தயாராக இருக்கிறதா? இருந்தால் கேட்டு சொல்லுங்கள். நான் வைகோவை புதிய தலைமுறை செய்தி நிலையத்திற்கு வந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டத்தை ஆதரித்து  ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேலாகவும் தொண்டை கிழிய பேச ஏற்பாடு பண்ணுகிறேன்.அப்படி பேசும் போது  தண்ணீர் கூட கொடுக்க வேண்டாம், அவரே ஏற்பாடு செய்து கொள்வார்.  அவருக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுத்து பிக் அப் பண்ணவும் வேண்டாம். அவரே தன் சொந்த செலவில் வந்து பேசுவார்.

நீங்கள் தயாரா ஞாநி அவர்களே?.


பின்குறிப்பு: ஞாநி அவர்களே உங்களின் மீது என்னைபோன்ற ஒரு சில இளைஞர்கள் மிகுந்த மதிப்பும்,  நீங்கள் கூறும் நல்ல கருத்துகளை பகுத்தறிந்து செயல்படவும் இருக்கிறோம். அதை கெடுத்துவிட வேண்டாம்.

சனி, 1 செப்டம்பர், 2012

யார் போராளி ?


கணக்கிலடங்காத  ஊழல்களும்   எண்ணிலடங்கா முறைகேடுகளும் முற்றிய இந்தியாவில் யார் போராளி என்ற கேள்வி எல்லாருடைய (ஒரு சிலருடைய மனதிலாவது) இருக்கலாம். அமீர்கான் ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) அனுப்பினால் போராளி என்றார். ஊடகங்களும் மற்றும் பலரும் அண்ணா ஹசாரே ஜந்தர் மந்திரில் உண்ணாவிரதம் இருக்கும் போதோ அல்லது அவருக்கு ஆதரவாகவோ ஒரு மெழுகுவர்த்தி ஏந்துபவரும் போராளியே என்றன(ர்). பெரும்பான்மையான பத்திரிக்கைகளும் மற்றும் திரைப்பட பார்வையாளர்களும் ஷங்கர் போன்ற இயக்குனர்கள் வியாபார ரீதியில் சில சமுக பிரச்சினைகளை படமாக்கினால் அவர்களும் போராளி என்றன(ர்). பேஸ்புக், ட்விட்டர் மற்றும் சமூகவலைதளங்களில் பதிவிடுவது, லைக் பண்ணுவது, ஷேர் பண்ணுவது போன்ற செயல்களால் பலர் (என்னையும் சேர்த்துதான்) போரளியானோம். வினவு என்ற வலைத்தளமோ நக்சல் பாரி பாதையில் தெருவீதியில் போராடுபவனும், தான் கொண்ட கொள்கையின்  பால் வழிதவறாமல் செயல்படுவனும் மட்டுமே போராளி என்கிறது.

இப்போது நம்ம கதைக்கு வருவோம்.  அண்மையில் நீயா நானா நிகழ்ச்சியில் பேசிய இளங்கோ கல்லணை என்ற எழுத்தாளன் தன்  ஐந்து வயது மகன் (i am selfish for my own reason) என்னுடைய சொந்த காரணங்களுக்காக நான் ஒரு சுயநலவாதியாக இருக்கிறேன் என்பதை இன்றைய இந்தியா  எவ்வாறு இருக்கிறது என்பதற்கு  அடையாளமாக எடுத்துகொள்ளலாம். நான் பேசிய அல்லது பழகிய பலர் இளம் வயதினர் (ஏனெனில் நானும்).  அவர்கள் அனைவரும் தன் வேலை, தன் குடும்பம், தன் முன்னேன்றம் என்ற நிலையை தாண்டி சிந்திக்க நேரமே இல்லை. அப்படியே இருந்தாலும் கிரிக்கெட், திரைப்படம் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் அவர்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து கொண்டன. பிறகு எங்க போராளியாக ஆவது? ஆனாலும் எப்படியாவது போராளியாக வேண்டுமே.? எங்கே அதற்கான வழிமுறை இன்றைய இந்தியாவின் புதிய தலைமுறைக்கு ?

வணிக மேலாண்மைவியல் (எம்.பி.ஏ) படித்த பெண்மணிக்கு பாஸ்போர்ட்  விண்ணப்பம் எப்படி செய்வது என்று தெரிய வில்லை. பொறியியல் படித்து, தகவல் தொழிநுட்ப துறையில் பொறியாளனாக வேலை செய்யும், இருபத்தி ஏழு வயது நிரம்பிய (சில பல முறை ஓட்டு போட்ட) ஒரு இளைஞனுக்கு    குடியரசு தலைவர் எவ்வாறு தேர்தெடுக்க படுகிறார் என்று தெரிய வில்லை. சமூக பார்வையாளர்கள் இந்த மெத்த படித்தவர்கள் ஓட்டு போடாத வராத காரணத்தினால் தான் கேடுகெட்ட தலைவர்களை முதன்மை அமைச்சர்களாகவும், பாராளுமன்ற , சட்டமன்ற  உறுப்பினர்களாகவும்,தேர்ந்து எடுக்க படுகின்றனர் குற்றம் சாட்டுகின்றனர்.  ஆனால் நான் கூறுகிறேன் "அந்த ஓட்டை போடுவதற்கு  முன்பு அரசியல் பற்றிய அடிப்படை ஞானமும், கருத்துக்களும், அதைப்பற்றி நண்பர்கள், உறவினர்கள்  மற்றும் குடும்பத்தினருடன் பேசினாலே " நீங்களும் போராளியே. (எப்படிப்பட்ட பேச்சுபேச வேண்டும், எந்த மாதியான கருத்தாக்கம் இருக்க வேண்டும் என்பது வேற தனிக்கதை).   குறைந்த பட்சம் எது அரசியல் என்றும், அரசியல் பற்றி படிப்பதும், பேசுவதும், தெரிந்து வைத்து இருப்பதும்  போராளிக்கான அடிப்படை குணங்கள் என்று நான் முடிக்கிறேன்.