புதன், 17 அக்டோபர், 2012

வடை போச்சே, பிள்ளையார்


இன்று வீட்டில் (பருப்பு)வடை சுட்டேன்.  நானும் என் நண்பரின் மனைவியும் அப்போது  பேசிக்கொண்டு இருந்தோம். நண்பரின் மனைவி இந்து மத பாரம்பரியத்தில் வளர்ந்த, பின்பற்றி கொண்டு இருக்கும் பெண்.   அவர் சட்டியில் மாவை பிசைந்து போட, நான் அதை வடையாக எடுத்து கொண்டு இருந்தேன்.  அப்போது நடந்த உரையாடல்

தோழி(நண்பரின் மனைவி) :  இன்னைக்கு எப்படியாவது முதல் வடையை கடவுளுக்கு படைத்து விட வேண்டும், அதன் பின்புதான் நாம் சாப்பிட வேண்டும்
நான் : ????
தோழி(நண்பரின் மனைவி) : (நான் சுயமரியாதைக்காரன் என்பது அவருக்கு வெட்ட வெளிச்சம், ஆகவே என்னுடைய உணர்வை  புரிந்து கொண்டு), என் அம்மா அவ்வாறு சொல்வார்கள். ஆகவே நானும் அதை செய்ய முற்படுகிறேன்.
நான் :  அட முட்டாளே, உங்களது நீங்கள் இன்று செய்யும் தொழிலை நேற்று உங்கள் அம்மா செய்தாரா? நீங்கள் (Msc) படித்துள்ளீர்கள், உங்கள் அம்மா படித்துள்ளாரா?
தோழி(நண்பரின் மனைவி)  : இல்லை
 நான் : ஏன் அறிவை மட்டும் காலத்திற்கு ஏற்ப, பாகம் பிரித்து கொள்கின்றிர். மூடத்தனத்தை மட்டும் எக்காலமும் பாகப்பிரிவினை செய்யாமல் அப்படி அறுவடை செய்து கொள்கின்றிர்?
தோழி(நண்பரின் மனைவி) :  பதில் இல்லை.
நான் : உங்களை மத நம்பிக்கை கைவிட்டு, இன்றே பகுத்தறிவாளியாக மாறிவிடுங்கள் என்று நான் சொல்லவில்லை. தனி அறைக்குள்ளோ அல்லது கோயில்களுக்கோ வழிபாடு செய்வதோடு நிறுத்தி கொள்ளலாமே?  மற்றபடியான மூட நம்பிக்கையான செயல்களை விட்டு விடலாமே? அதுதானே அறிவிற்கு அழகு? படித்த அறிவை பயன் படுத்தவே மாட்டேன் என்று கங்கணம் கட்டி கொண்டு அலைவது ஏனோ?

கடைசியில், அவர் கடவுளுக்கு வடையை படைக்கவே இல்லை, ஒரு வேளை "பிள்ளையார் வடை போச்சே", இந்த படுபாவி நாசமாக போக என்று சாபம் விட்டு இருப்பாரோ?

பின்குறிப்பு  1: பல நிமிடங்கள் ஏன் இவ்வாறான மூட நம்பிக்கைகளை கைவிட வேண்டும் என்று அவருக்கு பகுத்தறிவு புகட்டினேன். மாற்றம் எதாவது தென்படுகிறதா என்பது அடுத்த முறை வடை சுடும் போது தெரிய வரலாம்.

பின் குறிப்பு 2 : இதற்கு முன்னர்  பல நேரங்களில் நான் முதலில் சட்டியில் இருந்து எடுத்தவுடன் தின்று இருக்கிறேன், ஆகவே இன்று அவர் அதை தடுத்து விட வேண்டும் என்று நினைத்து  இருக்கலாம். ஆனால் கடைசியில் நடந்தது எதிர்மாறானதே!!!

பின்குறிப்பு 3: இந்த குறையை (பிள்ளையார் சாபத்தில் இருந்து விடுபட)  நிவர்த்தி செய்ய எதாவது பரிகாரம் இருக்காஇருந்தா சொல்லுங்கள் தோழர்களே!!!

திங்கள், 10 செப்டம்பர், 2012

உயர்திரு பட்டா கத்தி வீரர் ஞாநி அவர்களே


என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய  மூத்த பத்திரிக்கையாளர்,  அரசியல் விமர்சகர்,  எழுத்தாளர்  திரு ஞாநி அவர்களே,  உங்களை போன்ற பட்டா கத்தி வீரர்களின் செய்திகளை வெளியிட தமிழகத்தின்  உண்மையான நடுநிலை இதழ்/தொலைக்காட்சி   புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் உள்ளன.  அட்டைக்கத்தி வீரன் வைகோவின் செய்தியை வெளியிட அப்படி வேற எதுவும் நடுநிலை ஊடகங்கள் இல்லையே இந்த இந்திய திருநாட்டில்.

தினமலம் போன்ற தமிழகத்தின் சாபகேட்டு பத்திரிக்கைக்கு கல்லில்(சிலை) இருந்து பால் வடிந்தது, ஒரு ஆப்பத்தை சாய் பாபா இரண்டாக்கினார் என்ற ஆன்மிக குப்பைகளையும்,  வாலு  நடிகர் காலு நடிகையின் கையை பிடித்து இழுத்து  கலாட்டா பண்ணினார் என்று காம கதைகளை வெளியிடவும் மட்டுமே நேரமும் இடமும் உள்ளது.   ndtv/headlines today போன்ற வட இந்திய ஆங்கில ஊடகங்களுக்கு தமிழ்நாடு என்றால் அது எதோ துபாய் பக்கம் தூத்துக்குடி பக்கம் உள்ள எதோ ஒரு ஊரு. அவர்களுக்கு "who looks sexy priyanka chopra or katrina kaif?"  என்று   கண்டுபிடிக்கவே  நேரம் இல்லை. அப்படியே மிஞ்சி போய் எதோ கொஞ்சம் நேரம் கிடைத்தால் முகமுடி போன்று உலகமகா காப்பியங்களின் திரை விமர்சனங்களையும், நீ தானே என் பொன்வசந்தம் போன்ற சமுக சீர்திருத்த, புரட்சி படைப்புகளின் பாடல் விமர்சனங்களையும் regional section பகுதியில்  போட மட்டும்தான்  நேரம்  இருக்கிறது. மக்கள் தொலைக்காட்சி  போய் பாருங்கள் இராமதாஸ் பற்றிய செய்திகள் இருக்கும். தெருவில் போய் பாருங்கள் வைகோ எதோ ஒரு மூலையில் தொண்டை கிழிய கத்திக்கொண்டு இருப்பார்.அதாவது உங்கள் பார்வையில்  அவரின்  அரசியல் ஆதாரத்திற்காக மட்டுமாவது எதாவது அட்டகத்தி வசனங்களை பேசிகொண்டிருப்பார். உலகம் உருண்டை ஞாநி அவர்களே. பின்னாலும் முன்னாலும் பக்கவாட்டிலும் திரும்பி பாருங்கள், புதிய தலைமுறையில் மட்டுமே தலையை நுழைத்து தேடிக்கொண்டு இருந்தால் கிடைக்காது

என்னை போன்றவர்கள் தேடித்தேடி  பார்த்தால், நடுநிலையாக  இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அல்லது விருப்பம் கொண்ட   வைத்தி மாமா போன்றோரின் ஊடகங்களில் எதாவது ஒரு மூலையில் வைகோ என்ற அட்டைக்கத்தி வீரனின் செய்திகள் இடம் பெற்று இருக்கும்.  நீங்கள் தமிழகத்தின் ஒரே நடுநிலை ஊடகம் புதிய தலைமுறையில் மட்டுமே பார்த்தால் எப்படி கிடைக்கும். அப்படியே அவர்கள் வைகோவை தேடி சென்று அவர்கள் செய்தி சேகரித்து வெளியிட்டால் உங்களை போன்ற நடுநிலையார்கள் எங்கே போய் பேசுவீர்கள்? வெளிநாட்டில் இருந்தாலும், நானும் நீங்கள்  நடுநிலை நடுநிலை சொல்கிறீர்களே என்று புதிய தலைமுறையின் காணொளிகளை youtube முழுவதும்  கடந்த ஒருவருடமாக தேடிவிட்டேன். தன்மான தலைவன், முத்தமிழ் அறிஞர், மூதறிஞர், செம்மொழிபுலவர் கலைஞர் கருணாநிதியின் அக்கிரமங்களையும்,  புரட்சி தலைவி, தமிழகத்தின் ஒரே அம்மா, செல்வி கொடநாட்டு கோமளவல்லி ஜெயலலிதாவின் கூத்துகளையும் காணவே இல்லை.

புதிய தலைமுறை தொலைக்காட்சி கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்தும், அதன் போராட்டம் பற்றியும் செய்திகளை தமிழக பாசிச அரசுக்கு எதிராக செய்து வெளியிட தயாராக இருக்கிறதா? இருந்தால் கேட்டு சொல்லுங்கள். நான் வைகோவை புதிய தலைமுறை செய்தி நிலையத்திற்கு வந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டத்தை ஆதரித்து  ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேலாகவும் தொண்டை கிழிய பேச ஏற்பாடு பண்ணுகிறேன்.அப்படி பேசும் போது  தண்ணீர் கூட கொடுக்க வேண்டாம், அவரே ஏற்பாடு செய்து கொள்வார்.  அவருக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுத்து பிக் அப் பண்ணவும் வேண்டாம். அவரே தன் சொந்த செலவில் வந்து பேசுவார்.

நீங்கள் தயாரா ஞாநி அவர்களே?.


பின்குறிப்பு: ஞாநி அவர்களே உங்களின் மீது என்னைபோன்ற ஒரு சில இளைஞர்கள் மிகுந்த மதிப்பும்,  நீங்கள் கூறும் நல்ல கருத்துகளை பகுத்தறிந்து செயல்படவும் இருக்கிறோம். அதை கெடுத்துவிட வேண்டாம்.

சனி, 1 செப்டம்பர், 2012

யார் போராளி ?


கணக்கிலடங்காத  ஊழல்களும்   எண்ணிலடங்கா முறைகேடுகளும் முற்றிய இந்தியாவில் யார் போராளி என்ற கேள்வி எல்லாருடைய (ஒரு சிலருடைய மனதிலாவது) இருக்கலாம். அமீர்கான் ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) அனுப்பினால் போராளி என்றார். ஊடகங்களும் மற்றும் பலரும் அண்ணா ஹசாரே ஜந்தர் மந்திரில் உண்ணாவிரதம் இருக்கும் போதோ அல்லது அவருக்கு ஆதரவாகவோ ஒரு மெழுகுவர்த்தி ஏந்துபவரும் போராளியே என்றன(ர்). பெரும்பான்மையான பத்திரிக்கைகளும் மற்றும் திரைப்பட பார்வையாளர்களும் ஷங்கர் போன்ற இயக்குனர்கள் வியாபார ரீதியில் சில சமுக பிரச்சினைகளை படமாக்கினால் அவர்களும் போராளி என்றன(ர்). பேஸ்புக், ட்விட்டர் மற்றும் சமூகவலைதளங்களில் பதிவிடுவது, லைக் பண்ணுவது, ஷேர் பண்ணுவது போன்ற செயல்களால் பலர் (என்னையும் சேர்த்துதான்) போரளியானோம். வினவு என்ற வலைத்தளமோ நக்சல் பாரி பாதையில் தெருவீதியில் போராடுபவனும், தான் கொண்ட கொள்கையின்  பால் வழிதவறாமல் செயல்படுவனும் மட்டுமே போராளி என்கிறது.

இப்போது நம்ம கதைக்கு வருவோம்.  அண்மையில் நீயா நானா நிகழ்ச்சியில் பேசிய இளங்கோ கல்லணை என்ற எழுத்தாளன் தன்  ஐந்து வயது மகன் (i am selfish for my own reason) என்னுடைய சொந்த காரணங்களுக்காக நான் ஒரு சுயநலவாதியாக இருக்கிறேன் என்பதை இன்றைய இந்தியா  எவ்வாறு இருக்கிறது என்பதற்கு  அடையாளமாக எடுத்துகொள்ளலாம். நான் பேசிய அல்லது பழகிய பலர் இளம் வயதினர் (ஏனெனில் நானும்).  அவர்கள் அனைவரும் தன் வேலை, தன் குடும்பம், தன் முன்னேன்றம் என்ற நிலையை தாண்டி சிந்திக்க நேரமே இல்லை. அப்படியே இருந்தாலும் கிரிக்கெட், திரைப்படம் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் அவர்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து கொண்டன. பிறகு எங்க போராளியாக ஆவது? ஆனாலும் எப்படியாவது போராளியாக வேண்டுமே.? எங்கே அதற்கான வழிமுறை இன்றைய இந்தியாவின் புதிய தலைமுறைக்கு ?

வணிக மேலாண்மைவியல் (எம்.பி.ஏ) படித்த பெண்மணிக்கு பாஸ்போர்ட்  விண்ணப்பம் எப்படி செய்வது என்று தெரிய வில்லை. பொறியியல் படித்து, தகவல் தொழிநுட்ப துறையில் பொறியாளனாக வேலை செய்யும், இருபத்தி ஏழு வயது நிரம்பிய (சில பல முறை ஓட்டு போட்ட) ஒரு இளைஞனுக்கு    குடியரசு தலைவர் எவ்வாறு தேர்தெடுக்க படுகிறார் என்று தெரிய வில்லை. சமூக பார்வையாளர்கள் இந்த மெத்த படித்தவர்கள் ஓட்டு போடாத வராத காரணத்தினால் தான் கேடுகெட்ட தலைவர்களை முதன்மை அமைச்சர்களாகவும், பாராளுமன்ற , சட்டமன்ற  உறுப்பினர்களாகவும்,தேர்ந்து எடுக்க படுகின்றனர் குற்றம் சாட்டுகின்றனர்.  ஆனால் நான் கூறுகிறேன் "அந்த ஓட்டை போடுவதற்கு  முன்பு அரசியல் பற்றிய அடிப்படை ஞானமும், கருத்துக்களும், அதைப்பற்றி நண்பர்கள், உறவினர்கள்  மற்றும் குடும்பத்தினருடன் பேசினாலே " நீங்களும் போராளியே. (எப்படிப்பட்ட பேச்சுபேச வேண்டும், எந்த மாதியான கருத்தாக்கம் இருக்க வேண்டும் என்பது வேற தனிக்கதை).   குறைந்த பட்சம் எது அரசியல் என்றும், அரசியல் பற்றி படிப்பதும், பேசுவதும், தெரிந்து வைத்து இருப்பதும்  போராளிக்கான அடிப்படை குணங்கள் என்று நான் முடிக்கிறேன்.

புதன், 29 ஆகஸ்ட், 2012

கடவுளும் என் கேள்விகளும்கல்லே கல்லே என் மேலே விழாதே


இந்து பாரம்பரியத்தில் வாழும் ஐம்பது வயதை கடந்த என் தாயின் வயதை ஒத்த ஒரு  அம்மையாரிடம்  இன்று பேசிக்கொண்டு இருந்தேன். அவருக்கு என்னுடைய நாத்திக சிந்தனைகளிலும் பகுத்தறிவு செயல்பாடுகளிலும் அவருக்கு ஐயப்பாடு இருந்தது. என்னுடைய திருமண நிகழ்வை எவ்வாறு செயல்படுத்த போகிறேன் என்று என்னிடம் சில நடைமுறை சிக்கல்கள் தொடர்பான சில கேள்விகளை அவர் எழுப்பினார். அந்த உரையாடலின் ஒரு பகுதி இங்கே.

அம்மா: தம்பி நீ கடவுளை நம்ப மாட்டாய், அதெல்லாம் சரி, எப்படி திருமணதிற்கு சோதிடம் பார்க்காமல் எப்படி?
நான் : நான் சோதிடத்தையே நம்ப மாட்டேன், பிறகு எதற்கு அதை பார்க்க போகிறேன்?
அம்மா : பெண் வீட்டில் பார்ப்பார்களே?
நான் : அவர்கள் பார்க்கட்டும். நான் பார்க்க மாட்டேன், என்னை நம்ப சொல்லி வற்புறுத்த வேண்டாம் என்று சொல்லுவேன்.
அம்மா : தாலியாவது கட்டுவாயா?
நான் : எனக்கு நம்பிக்கை இல்லை, திருமண பதிவு அலுவலகத்தில் ஒரு கையொப்பமே போதுமானது. மணப்பெண் விரும்பினால் தாலி கட்டுவேன். கயிறுதானே கழுத்தில் கட்டினால் என்ன, இடுப்பில் கட்டினால் என்ன?
அம்மா : கட்டு கட்டு, பெண் அனுமதித்தால் எங்கு வேண்டுமானாலும் கட்டு, சரி அதை விடு. சாமி கும்பிட கோயிலுக்கு அழைப்பார்களே?
நான் : போவேன், அது என் வீட்டை போல் இன்னொரு கட்டிடம் மட்டும் தானே.
அம்மா : கோயிலுக்கு சென்று மணப்பெண் மட்டும் சாமி கும்பிட்டால் பார்க்க நன்றாக இருக்காது தம்பி.
நான் : சரி நான் கும்பிடுவேன் இப்படி, "கல்லே கல்லே, என் காலில் விழாதே, விழுந்தாலும் வலிக்காதே, வலித்தாலும் புண் வராதே, புண் வந்தாலும் தயவு செய்து சிக்கிரம் ஆறிவிடு" என்று கும்பிடுவேன்.
அம்மா: ஹாஹா ஹாஹா ஹாஹா, என்னை ரொம்ப நாட்களுக்கு பின்னர் நல்ல சிரிக்க வச்சுட்ட தம்பி.

சாதியும் தமிழரும்


நான் கடந்த இரண்டு வருடங்களாக சிங்கப்பூரில் பணி நிமித்தமாக வசித்து வருகிறேன். சிங்கப்பூரில் உள்ள தமிழர்களிடையே தமிழகத்தில் இருப்பதை போன்ற பெரிய அளவுக்கு சாதிய வேறுபாடுகளை நான் உணரவில்லை, (பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதவர் என்ற வேறுபாட்டை தவிர வேறு பெரிய வேற்றுமையை நான் காணவில்லை, இந்த வேறுபாடு இந்து மதம் அழியும் வரை இருக்கும் என்பது ), இருப்பினும் எவ்வாறு சாதியை ஒழிப்பது என்ற என் கேள்வி, என் ஆழ்மனதில் இருந்து கொண்டு இருக்கிறது.

சமிபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக தமிழ் இளையர் மாநாட்டில் நான் கலந்துகொண்டேன். எப்படி சாதியை ஒழிப்பது என்ற நம்முடைய நீண்ட நாள் கேள்விக்கு எனக்கு அங்கே பதில் கிடைத்தது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கல்லூரி மாணவி, இலங்கை தமிழர்கள் தங்களுடைய அடையாளங்களை, உணர்வுகளை எவ்வாறு வெளிபடுத்துகிறார்கள் என்று ஒரு ஆய்வுக்கட்டுரை ஒன்றை படைத்தார். அந்த கட்டுரைக்காக, இலங்கையில் உள்ள தமிழர்களிடம், எதை அவர்கள் தங்களின் அடையாளமாக கருதுகிறார்கள் என்று ஒரு சிறிய களப்பணி செய்து, அதன் முடிவை வெளியிட்டார்.

அந்த களப்பணி முடிவுகள் தான் எனக்கு உண்மையை புலபடுத்தியது.

சாதியை எவருமே தங்களுடைய அடையாளமாக கருத வில்லை என்பது தான் ஆய்வுக்கட்டுரை முடிவு. அதே நேரத்தில் தமிழும்(37) தமிழன்(27) என்ற அடையாளமும் அவர்களிடையே மேலோங்கி இருந்ததது. ஒருவேளை தாய் தமிழகத்திலும் அந்த  சூழல் வந்தால் தங்கள் சாதிய அடையாளங்களை மறப்பார்கள் என்ற பதில் கிடைத்தது. இன்னொரு கேள்வியும் எழுந்தது எனக்கு, ஆங்கிலயன் நம்முடைய வளங்களை மட்டுமே சூறையாடுவதில் இருந்தான். ஆனால் சிங்களவன் நம்முடைய இனத்தையும், அடையாளங்களையும் அளிப்பதில் அக்கறை காட்டுகிறான், ஆகவே அங்கு மக்கள் தமிழும், தமிழரும் என்ற அடையாளத்தை காப்பதே நமது தலையாய கடமை என்று புரிந்து வைத்துள்ளனர் என்பது பசுமரத்தாணி போல் என் நெஞ்சில் பதிந்தது.

ஆகவே சிங்களனே, உனக்கு ஒரு வேண்டுகோள், வா, தமிழகம் வந்து என் தமிழ் இனத்தை அடிமைபடுத்து, அப்படியாவது என் மக்கள் சாதியை மறக்கட்டும்.
என் ஆசை கொடுமையானது தான். ஆனால எனக்கு வேறு வழி தெரியவில்லை. மிச்சம் இருக்கும் ஒரு சில தமிழர்களாவது சாதியை மறக்கட்டும்.

இன்னொரு வேண்டுகோள், உடனே வந்து விடாதே, ஏனெனில் எனக்கு இன்னொரு ஆசையும் உள்ளது, நான் இப்போது மேற்கொண்டு இருக்கும் படிப்பை முடிக்கும் வரை என்னால் தமிழகம் வர இயலாது. இன்னும் இரண்டு வருடங்கள் பொறுமை கொள். நானும் தமிழகம் வந்து சாதியை ஒழிக்கும் அந்த வேள்வியில் கலந்து கொள்கிறேன்.

"சாதிதான் சமூகம் என்றால்,வீசும் காற்றில் விஷம் பரவட்டும்' - சட்ட மாமேதை அம்பேத்கார்"

தமிழரின் அடையாளம்


ஜூலை முதல் வரை மூன்று நாட்கள் நடைபெற்ற உலக தமிழ் பல்கலைகழக இளையர் மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. அதில் நான் கலந்துகொண்டேன். மூன்று நாள் மாநாட்டில் முக்கியஅம்சம் தமிழரின் அடையாளத்தை தேடுவது. எது தமிழரின் அடையாளம் நண்பர்களே?

மாநாட்டில் பேஸ்புக், சினிமா, இலக்கியங்கள், மதம், உடை, சாதி, நிறம் ஆகிய பொருட்களில் தமிழருடைய அடையாளம் தேடப்பட்டது.

தமிழரின் அடையாளம் எது?

நண்பர்களே, உங்கள் கருத்தை கேட்க நான் ஆவலுடன் இருக்கிறேன்.