புதன், 29 ஆகஸ்ட், 2012

கடவுளும் என் கேள்விகளும்கல்லே கல்லே என் மேலே விழாதே


இந்து பாரம்பரியத்தில் வாழும் ஐம்பது வயதை கடந்த என் தாயின் வயதை ஒத்த ஒரு  அம்மையாரிடம்  இன்று பேசிக்கொண்டு இருந்தேன். அவருக்கு என்னுடைய நாத்திக சிந்தனைகளிலும் பகுத்தறிவு செயல்பாடுகளிலும் அவருக்கு ஐயப்பாடு இருந்தது. என்னுடைய திருமண நிகழ்வை எவ்வாறு செயல்படுத்த போகிறேன் என்று என்னிடம் சில நடைமுறை சிக்கல்கள் தொடர்பான சில கேள்விகளை அவர் எழுப்பினார். அந்த உரையாடலின் ஒரு பகுதி இங்கே.

அம்மா: தம்பி நீ கடவுளை நம்ப மாட்டாய், அதெல்லாம் சரி, எப்படி திருமணதிற்கு சோதிடம் பார்க்காமல் எப்படி?
நான் : நான் சோதிடத்தையே நம்ப மாட்டேன், பிறகு எதற்கு அதை பார்க்க போகிறேன்?
அம்மா : பெண் வீட்டில் பார்ப்பார்களே?
நான் : அவர்கள் பார்க்கட்டும். நான் பார்க்க மாட்டேன், என்னை நம்ப சொல்லி வற்புறுத்த வேண்டாம் என்று சொல்லுவேன்.
அம்மா : தாலியாவது கட்டுவாயா?
நான் : எனக்கு நம்பிக்கை இல்லை, திருமண பதிவு அலுவலகத்தில் ஒரு கையொப்பமே போதுமானது. மணப்பெண் விரும்பினால் தாலி கட்டுவேன். கயிறுதானே கழுத்தில் கட்டினால் என்ன, இடுப்பில் கட்டினால் என்ன?
அம்மா : கட்டு கட்டு, பெண் அனுமதித்தால் எங்கு வேண்டுமானாலும் கட்டு, சரி அதை விடு. சாமி கும்பிட கோயிலுக்கு அழைப்பார்களே?
நான் : போவேன், அது என் வீட்டை போல் இன்னொரு கட்டிடம் மட்டும் தானே.
அம்மா : கோயிலுக்கு சென்று மணப்பெண் மட்டும் சாமி கும்பிட்டால் பார்க்க நன்றாக இருக்காது தம்பி.
நான் : சரி நான் கும்பிடுவேன் இப்படி, "கல்லே கல்லே, என் காலில் விழாதே, விழுந்தாலும் வலிக்காதே, வலித்தாலும் புண் வராதே, புண் வந்தாலும் தயவு செய்து சிக்கிரம் ஆறிவிடு" என்று கும்பிடுவேன்.
அம்மா: ஹாஹா ஹாஹா ஹாஹா, என்னை ரொம்ப நாட்களுக்கு பின்னர் நல்ல சிரிக்க வச்சுட்ட தம்பி.

சாதியும் தமிழரும்


நான் கடந்த இரண்டு வருடங்களாக சிங்கப்பூரில் பணி நிமித்தமாக வசித்து வருகிறேன். சிங்கப்பூரில் உள்ள தமிழர்களிடையே தமிழகத்தில் இருப்பதை போன்ற பெரிய அளவுக்கு சாதிய வேறுபாடுகளை நான் உணரவில்லை, (பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதவர் என்ற வேறுபாட்டை தவிர வேறு பெரிய வேற்றுமையை நான் காணவில்லை, இந்த வேறுபாடு இந்து மதம் அழியும் வரை இருக்கும் என்பது ), இருப்பினும் எவ்வாறு சாதியை ஒழிப்பது என்ற என் கேள்வி, என் ஆழ்மனதில் இருந்து கொண்டு இருக்கிறது.

சமிபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக தமிழ் இளையர் மாநாட்டில் நான் கலந்துகொண்டேன். எப்படி சாதியை ஒழிப்பது என்ற நம்முடைய நீண்ட நாள் கேள்விக்கு எனக்கு அங்கே பதில் கிடைத்தது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கல்லூரி மாணவி, இலங்கை தமிழர்கள் தங்களுடைய அடையாளங்களை, உணர்வுகளை எவ்வாறு வெளிபடுத்துகிறார்கள் என்று ஒரு ஆய்வுக்கட்டுரை ஒன்றை படைத்தார். அந்த கட்டுரைக்காக, இலங்கையில் உள்ள தமிழர்களிடம், எதை அவர்கள் தங்களின் அடையாளமாக கருதுகிறார்கள் என்று ஒரு சிறிய களப்பணி செய்து, அதன் முடிவை வெளியிட்டார்.

அந்த களப்பணி முடிவுகள் தான் எனக்கு உண்மையை புலபடுத்தியது.

சாதியை எவருமே தங்களுடைய அடையாளமாக கருத வில்லை என்பது தான் ஆய்வுக்கட்டுரை முடிவு. அதே நேரத்தில் தமிழும்(37) தமிழன்(27) என்ற அடையாளமும் அவர்களிடையே மேலோங்கி இருந்ததது. ஒருவேளை தாய் தமிழகத்திலும் அந்த  சூழல் வந்தால் தங்கள் சாதிய அடையாளங்களை மறப்பார்கள் என்ற பதில் கிடைத்தது. இன்னொரு கேள்வியும் எழுந்தது எனக்கு, ஆங்கிலயன் நம்முடைய வளங்களை மட்டுமே சூறையாடுவதில் இருந்தான். ஆனால் சிங்களவன் நம்முடைய இனத்தையும், அடையாளங்களையும் அளிப்பதில் அக்கறை காட்டுகிறான், ஆகவே அங்கு மக்கள் தமிழும், தமிழரும் என்ற அடையாளத்தை காப்பதே நமது தலையாய கடமை என்று புரிந்து வைத்துள்ளனர் என்பது பசுமரத்தாணி போல் என் நெஞ்சில் பதிந்தது.

ஆகவே சிங்களனே, உனக்கு ஒரு வேண்டுகோள், வா, தமிழகம் வந்து என் தமிழ் இனத்தை அடிமைபடுத்து, அப்படியாவது என் மக்கள் சாதியை மறக்கட்டும்.
என் ஆசை கொடுமையானது தான். ஆனால எனக்கு வேறு வழி தெரியவில்லை. மிச்சம் இருக்கும் ஒரு சில தமிழர்களாவது சாதியை மறக்கட்டும்.

இன்னொரு வேண்டுகோள், உடனே வந்து விடாதே, ஏனெனில் எனக்கு இன்னொரு ஆசையும் உள்ளது, நான் இப்போது மேற்கொண்டு இருக்கும் படிப்பை முடிக்கும் வரை என்னால் தமிழகம் வர இயலாது. இன்னும் இரண்டு வருடங்கள் பொறுமை கொள். நானும் தமிழகம் வந்து சாதியை ஒழிக்கும் அந்த வேள்வியில் கலந்து கொள்கிறேன்.

"சாதிதான் சமூகம் என்றால்,வீசும் காற்றில் விஷம் பரவட்டும்' - சட்ட மாமேதை அம்பேத்கார்"

தமிழரின் அடையாளம்


ஜூலை முதல் வரை மூன்று நாட்கள் நடைபெற்ற உலக தமிழ் பல்கலைகழக இளையர் மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. அதில் நான் கலந்துகொண்டேன். மூன்று நாள் மாநாட்டில் முக்கியஅம்சம் தமிழரின் அடையாளத்தை தேடுவது. எது தமிழரின் அடையாளம் நண்பர்களே?

மாநாட்டில் பேஸ்புக், சினிமா, இலக்கியங்கள், மதம், உடை, சாதி, நிறம் ஆகிய பொருட்களில் தமிழருடைய அடையாளம் தேடப்பட்டது.

தமிழரின் அடையாளம் எது?

நண்பர்களே, உங்கள் கருத்தை கேட்க நான் ஆவலுடன் இருக்கிறேன்.