வெள்ளி, 14 நவம்பர், 2014

டவுசர் கிழிய கிழிய ஓட ஓட விரட்டி அடிக்கிறது எப்படி!!!!

"சிறந்த பேச்சாளார் ஆவது எப்படி" என்ற கேள்விக்கு சிரிக்க வைத்து சிந்திக்க வைக்க வேண்டும் என்று ஆண்டாண்டு காலமாக பதில் சொல்லப்பட்டு வருகிறது. இதில் நமக்கு முழுமையாக உடன்பாடு இல்லையெனிலும் தோழர் மதிமாறனின் "பெரியாரை எதிர்க்கும் புதிய தமிழ் தேசியங்கள்" உரை மீதான விமர்சனத்தை சிரித்துக் கொண்டே எழுதுகிறேன். தமிழ் தேசியர்களுக்கு கொடுக்கப்பட்ட அடி அப்படி!!!

"எனக்கு தலைப்பு கொடுத்திருக்காங்க, பெரியாரை எதிர்க்கும் புதிய தமிழ் தேசியங்கள்"இந்த புதியதமிழ் தேசியங்கள் அப்படிங்கறதுக்கு ரொம்ப பழைய உதாரணம் ஒன்று சொல்றேன், அது புதிய மொந்தை பழைய கள்" என்று தான் தனது பேச்சை ஆரம்பித்தார் தோழர் மதிமாறன்.   அட என்னங்கடா, தமிழ்தேசியமாவது, அதில என்னடா புதுசு பழசு உங்க தேசியம் எல்லாம் சாதியதேசியம் தான்டா, இந்த சாதிய விளக்கமாத்துக்கு எதுக்கு பட்டுக்குஞ்சம்  எதுக்குடான்னு எடுத்தஎடுப்பிலே தமிழ் தேசியர்களின் சாதிய அபிமானத்தை அம்பலப் படுத்தினார் தோழர்.

தமிழ் தேசியர்களின் சாதிய வெறியை  இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லனும்னா, ஒரு உதாரணம் கொடுக்கிறேன்.  உலகத் தமிழர் பேரவை, உள்ளூர்த் தமிழர் கூட்டமைப்பு, அண்டார்டிக்கா தமிழர் மாநாடு, ப்ளுட்டோ, நெப்டியூன் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ன்னு தன்னாலே எண்ணவியலாத அளவிற்கு இயக்கம் ஆரம்பித்து ஈழத் தமிழர்களை கழுத்தறுத்த    அய்யா 
பழ நெடுமாறனின் தமிழ் தேசியம், முக்குலத்தோர் சாதிய வெறியை உருவாக்கிய மன்னார்குடி நடராஜன்  (சசிகலா கணவர்) காலடியில் வீழ்த்து கிடப்பதே இதற்கு ஒரு உதாரணம். சீமான், ராமதாஸ் ன்னு  இந்த மாதிரி பட்டியல் போட்டால் டன் கணக்கில பேப்பர் வேணும்.

"சிறந்த பேச்சாளர்களாக உருவாவது எப்படி" என்ற கேள்விக்கு  பதிலை மதிமாறன் தனதுபேச்சினூடே நேரடியாக சொல்லாமல் தன்  முழுப் பேச்சால் உணர்த்திச் சென்றார். அந்தப் பதில்உண்மையை தைரியமாக பேசுவது”.  எடுத்துக்கொண்ட தலைப்பை ஒட்டி, நீட்டி முழக்கி பேசாமல்,உண்மையை தைரியமாக பேசுவது மதிமாறனின் சிறப்பு. அதற்கு சிறந்த உதாரணம், இன்று திராவிடர்கழகத்தால் நீதிக்கட்சியின் முப்பெரும் தலைவர்களில் ஒருவராக கொண்டாடும் தியாகராய செட்டியார் போன்றோரின் பார்ப்பன சடங்கு அடிமைத்தனத்தை திராவிடர் கழகத்தின் விடுதலைவாசகர் வட்ட பேச்சரங்கில் அம்பலப்படுத்தியது தான். 

பெரியார் அரசியல் அரங்குக்குள் வருமுன்  திருவிக, வரதராஜுலு நாயுடு
ஆர் கே சண்முகம் செட்டியார், மறைமலை அடிகள் போன்றோர் எப்படிப்பட்ட அரசியலை மேற்கொண்டனர், பெரியாரின் வருகைக்குப் பின்னர் அவர்களின் அரசியல் முகம் என்பதை மாறினது என்பதை வரலாற்று உண்மைகளுடன் தோழர் எடுத்துக்காட்டியது அவரின் உண்மையை மறைக்காது எடுத்தியம்பும் இயல்புக்கு ஒரு எடுத்துக்காட்டு.


காங்கிரஸ் அந்தக்காலத்தில் இருந்தே கைக்கூலிகளாக, அடிமைகளாக பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு எதிராக பார்ப்பனர் அல்லாதவர்களையே   தன் கையை வைத்து தன் கண்களை குத்தும் நயவஞ்சக  வேலையை செய்ய முயன்றது என்றும் அந்த முயற்சியின் ஒருபகுதிதான் ராமசாமி நாயக்கர் (அதாங்க நம்ம பெரியார்)  ராஜாஜியினால், காந்தி மீது கொண்ட பாசத்தினால்காங்கிரஸ் கட்சிக்குள் வந்தார் என்பதை மறைக்காமல் சொன்னது தோழர் மதிமாறனின் நேர்மையின் சிறப்பு. 

ஆனால் காங்கிரஸ் கட்சியின் பார்ப்பன அடிமைத்தனத்தை புரிந்து கொண்ட பின்னர் பெரியார்கட்சியை விட்டு வந்தார் என்பதை அக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை வரலாற்றுஉண்மைகளுடன் எடுத்து சொல்லியது நன்று.

பெரியார் ஒன்றும் தானாக வானில் இருந்து தலைவராக குதித்து வந்துவிடவில்லை, அன்றிருந்த பார்ப்பன ஆதிக்க சமுக சூழல்தான் பெரியாரை போராட தூண்டியது என்று வெற்றிடத்தை காற்று நிரப்பும்என்ற இயங்கியல் தத்துவத்தை நேர்மையுடன் எடுத்துரைக்கிறார் தோழர்.

பாரதிதாசன் பாரதியின் உண்மையான தாசனாக இருந்தபோது எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாடினான். அதைப்போல, அன்று இருந்த "எங்கெங்கு காணினும் பார்ப்பன ஆதிக்கமே",  "ராமசாமி நாயக்கரை" முதலில் "ராமசாமியாகவும்"  பின்னர் "பெரியாராகவும்" மாற்றியது என்ற வரலாற்று உண்மையை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் தோழர்.

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, நூறு ஆண்டுகளுக்கு முந்தைய திருவிக, மறைமலை அடிகள் போன்ற அன்றைய தமிழ் தேசியர்கள்தொட்டு, இன்றைய காசி ஆனந்தன்,  
பழ நெடுமாறன், மணியரசன் போன்ற புதிய தமிழ் தேசியர்களின்சாதிய அபிமானத்தை, பார்ப்பன அடிவருடித்தனத்தை ஒப்பிட்டுத்தான்  புதிய மொந்தையில்  பழையகள்என்று தோழர் தனது பேச்சை ஆரம்பித்த தோழர்ஆண்டுகள்  ஆயிரம் ஆனாலும், “தமிழ்தேசியமும் பார்ப்பனிய அடிமைத்தனமும்  சாதிய உணர்வும்நகமும் சதையும் போல ஒன்றுடன் ஒன்றை பிரிக்க இயலாதவை என்று அடித்து நொறுக்கினார்.

சாதியத்தை சமரசம் இல்லாமல் எதிர்க்கும் பெரியாரின் நேர்மையின்  முன்னால் இன்று பெரியாரை எதிர்க்கும் புதிய தமிழ் தேசியங்களின் சாதிய அபிமானம் எங்கே என்று அனல் பறந்தது தோழரின் பேச்சு.

கிரேக்கம், ஏதென்ஸ், ஸ்பார்ட்டகஸ், கரிபால்டி”,  தம்பி பிரபாகரன், வைகோ.  அய்யகோ வைகோவின் நிலை பரிதாபம் !!! வெற்றுப் பேச்சாளர்களின் நிலை அதுவாகத்தான் இருக்கமுடியும்!!!  "பாரதீ" யும் தப்பவில்லை! ஆனால் மபொசி, ஜீவா போன்றோர் தப்பிவிட்டனர்.

தமிழ் தேசியர்களின் தமிழ் உணர்வு என்பதே பார்ப்பன அடிமைப் புத்திதான் என்பதை தலையில்கொட்டி சொன்னது அழகு. ஜீவா, மாபொசி என்று அன்றிலிருந்து, ரவிக்குமார்,நெடுமாறன்,மணியரசன், சீமான் போன்ற தமிழ் தேசிய அபிமானிகளால் என்றும்  பெரியாரின் தாடி மயிரைக் கூட அசைக்க முடியாது என்ற சவாலுடன் தன் பேச்சை முடித்தது சிறப்பு.


டவுசர் கிழிய கிழிய ஓட ஓட விரட்டி அடிக்கிறது எப்படின்னு தோழரின் பேச்சை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பேச்சின் தன்மை கெட்டுவிடாது இருக்கவேண்டும் என்பதற்காக நான் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.  இன்னும் பலவித சிறப்புகள் தோழர் மதிமாறனின் பேச்சில் உள்ளன.

 நீங்களும் கேட்டு பலரிடம் பகிருங்கள்.

செவ்வாய், 4 நவம்பர், 2014

பெரியார் ஏன் பெரியார் என் பார்வையில்!!!

 மார்பில் விழும் வெண்தாடியோடு
தள்ளாடாமல் நடக்க ஊன்றி வரும் தடியோடு
கையில் மூத்திரச்சட்டியோடு
 
 தமிழர் மானத்திற்கு சுயமரியாதைக்கு
பகுத்தறிவுத்  துணையோடு
 
ஊரெங்கும் நாடெங்கும்
நீக்கமற நிறைந்திருக்கும் மூடர் கூட்டத்தோடு

தன் அறிவுச் சொற் கோடரியால் போராடும்
கிழவன் ஒருவன்  தமிழ்நாட்டுத்
தெருக்கள் எங்கும் தட்டுப்பட்டதைக் கண்டோம்
 
எது உன் ஊர் எனக் கேட்டோம்?
பதில் கிடைத்தது ஈரோடு
பெற்றெடுத்த அறிவுக்களஞ்சியம் நீ என
 
என்ன செய்கிறாய் எனத் தெரிந்துகொள்ள
ஆசைப்பட்டோம் அறிவுத் தேடலோடு

சட்டெனப் பதில் வந்தது
சாதியினை அறுத்தெறிந்தாய் வேரோடு
 
நாங்கள் கேட்டோம் என்னசெய்ய
வேண்டும் உன்னோடு சேர்ந்து கொள்ள
 
மானமும் அறிவும் பெற எங்களையும்
உன்னோடு சேர்ந்து போராடு எனச் சொன்னாய் 
 
அறிவு பெற்றோம் தெளிவு பெற்றோம்
உரிமை பெற்றோம் இழிவுநீங்கப் பெற்றோம்
 
உன் கடன் அடைக்க ஏது வழி
என யோசிக்கப் பெற்றோம்
 
அதனால் தான் பெரியார் என இணைத்தோம்
உன் பேரோடு
 
சாதியோடு சடங்கோடு போராடி
மண்ணோடு பெயர்த்த உன்னை
 
யாரோடு சமம்நீ என நினைத்துப்பார்க்க
இயலாமல் திக்குமுக்காடுகிறது அறிவுலகம்

சு.விஜயபாஸ்கர் - Nov 05 2014
 

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

எதையெதயோ கேட்ட.. இதை கேட்டயாடா?

நம்ம கதாநாயகன் ஒருநாள் வழக்கறிஞரிடம் சென்று எனக்கு திருமணமுறிவு வேண்டும், நீங்கள் தான் பெற்றுத்தரவேண்டும் ன்னு சொல்றாரு.
வழக்கறிஞரோ, "அதனாலே என்னப்பா, பீஸ் கொடுப்பா, என்ன வேணுனாலும் வாங்கி தாரேன்" ன்னு தனது வேலையில் குறியா இருக்குறார்.
தயங்காத நம்ம நாயகன் சட்டைப்பையில் இருந்து சில ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து "சார், நீங்கதான் என்னை காப்பாத்தனும், இந்தாங்க சார், அஞ்சாயிரம் ரூபாய் இருக்கு, மிச்சத்தை பின்னாடி  தர்றேன்" ன்னு சொல்லி  கையை நீட்ட முயற்சி செய்யும் போதே,  நம்ம டுபாக்கூர் வக்கீல் வண்டுமுருகன், பாய்ஞ்சு போய் பணத்தை புடுங்கி, "கவலையை விடுங்க, எல்லாம் நான் பாத்துகிடுறேன்"  சொல்லிட்டு "திருமண முறிவு வாங்கலாம், ஆனால் எதுக்குப்பா? கல்யாணம் முடிஞ்சு மூணு மாசம் தான் ஆகுது, அதுக்குள்ள கசந்து போச்சா? என்ன ஆச்சு" ன்னு கொஞ்சம் அக்கறையோடு விசாரித்தார்.

"அதுவந்து சார், சார்",
அதான் வந்துட்டல்ல, சொல்லுப்பா,

"அதுவந்து, இதுவந்து சார், அத எப்படி சொல்ல சார், நான் எப்படி சார்  அத சொல்ல".
என்னப்பா, வாடகைக்கு ஆள் வச்சா சொல்ல முடியும், உன் வாயை வச்சுதான் சொல்லனும்ப்பா. தயங்காம சொல்லு,

ஆனாலும் நம்ம நாயகன் தயங்கிதயங்கி, வக்கீல் காதுக்குள்ள ரகசியமா சொன்ன விஷயத்தை நான் ஓட்டுகேட்டு உங்களுக்கு சொல்றேன், கீழே படிச்சு பார்த்துக்கோங்க.

நம்ம கதாநாயகன் ஒரு நாளில் நம்ம கதாநாயகியை ஒரு அழகான தெருவோரத்தில் சந்திக்கிறார்.  அது ஒரு நொடிப்பொழுதில் நடந்துவிடுகிறது, ஆனால் அண்ணலும் நோக்க அவளும் நோக்க, கண்கள் சந்தித்தன.  காதலும் கனிவும் கவிதையும் செல்பேசி எண்ணும் நொடிப்பொழுதில் பரிமாறப்பட்டன.

பிறகென்ன பேச்சுதான். காலையில் பேச்சு, மாலையில் பேச்சு, இரவில் பேச்சு, கழிவறையில் ஓய்வெடுக்கும் போதும் பேச்சு, தூங்காமலும் பேச்சு. தின்னாமலும் பேச்சு. முழித்தால் பேச்சு,  விழித்தால் பேச்சு, நின்றால் பேச்சு, நடந்தால் பேச்சு,  செல்போன் சார்ஜ் தீர்ந்தாலும், சார்ஜ் ஏத்தியபின்னும் பேச்சு, அப்படி என்னதான் பேசினார்கள்


உனக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்,
நான் சப்பாத்திதான் சாப்பிடுவேனாக்கும், டயட் கான்சியஸ்.

ப்ளூ கலர் டிரஸ் பிடிக்குமா?
எனக்கும் ப்ளுவும்  பிடிக்கும், பிங்க்கும் பிடிக்கும், எல்லாம் பிடிக்கும், நீ எனக்கு டிரஸ் எடுத்து  கொடுத்தா சாணி கலர் கூட பிடிக்கும்.

எனக்கு சிவகார்த்திகேயந்தான்ப்பா பிடிக்கும், அவன் அழகே தனிப்பா. அவன்னா பொண்ணுகளுக்கு செம கிரேஸ்பா. என் ஆபீஸ்ல எல்லாரும் சிவா பேன்ஸ்..
எனக்கு எல்லா நடிகையும் பிடிக்கும்    பொம்மைக்கு சேலைகட்டி விட்டாலும்
நான் நாள் முழுவதும் பார்ப்பேன். எனக்கு அதுல பாரபட்சமே கிடையாது, பட் இனிமே நீதான் எனக்கு பிடிச்ச ஹீரோயின்,  சாகுற வரைக்கும் உன் மூஞ்சை பார்த்துக்கிட்டே சந்தோசமா சாவேன். ஐ லவ் யு சோ மச் மி டியர்.

நீ சார் வச்சு இருக்கியா, எனக்கு ஆடி கார்ல லாங் ஜர்னி போறது பிடிக்கும்ப்பா
வாங்கிரலாம் டியர்.

ஹனிமூன் ஐரோப்பியன் கன்ட்ரீஸ் போலாமா டியர்?
நீ என்கூட வரும்போது நரகத்துக்கு கூட நான் வர தயார் டியர்.

நம்ம பர்ஸ்ட் சைல்டுக்கு நான்தான் பேர் சூஸ் பண்ணுவேன்.
யுவர் சாய்ஸ் இஸ் மை சாய்ஸ் ஹனி.

பட் நான் சொல்ற ஸ்கூல்லதான் சேக்கணும் டியர்,
ஓகே மச்சான், அறிவுக்கும் எனக்கு ராசி இல்லை அத்தான்.,  நீயே அந்த டிபார்ட்மென்ட் மேனேஜ் பண்ணுங்க அத்தான்.


இப்படி உள்ளூர் அரசியல் தொடங்கி, உலக அரசியல் வரை பேசினாங்க நம்ம ஐடியல் ஜோடி. இவன் கேக்காத விஷயம் இல்லை, அவ சொல்லாத விஷயம் இல்லை, இவங்க பேசினது போதாதுன்னு, ரெண்டு பேரு அப்பா அம்மாவும் சொந்தகாரங்க முதற்கொண்டு பேசி பந்தக்கால் நட்டுனாங்க. நாளும் கிழமையும் பார்த்து கல்யாணமும் முடிச்சு வச்சாங்க.

பிறகு என்னப்பா பிரச்சினைன்னு கேக்குரீங்கதானே?

நம்ம நாயகன் மெதுவா, சங்கட்டப்பட்டு, தயக்கப்பட்டு  வக்கீல் வண்டு முருகன் காதில சொன்ன விஷயம் இதுதான் மக்களே.

"சார் என் வைப் வயசுக்கு வரல, சார்"


நம்ம வண்டுமுருகனுக்கு வந்ததே கோபம், கால்ல போட்டு இருந்த ஷூவை கழட்டி, செம அடி.  என்னை கலாய்க்கனும்னே  வருவீங்களாட ராஸ்கல்ஸ்.
"பிறக்காத குழந்தையை எந்த ஸ்கூல் ல சேக்கணும் கேட்ட நாதாரி, கேக்க வேண்டிய மேட்டரை கேட்டயாடா"

தப்பிச்சேன், பிழைச்சேன்னு, பின்னங்கால் பிடதியில்  அடிக்க ஓடிய நம்ம ஹீரோ, நெக்ஸ்ட் விழுந்த இடம், விவாகரத்து ஸ்பெசலிஸ்ட் வக்கீல் வனஜா


### கதை சொல்லும் நீதி ###  திருமணத்திற்கு முன்னர் மருத்துவ பரிசோதனை தேவை, அவசியம், கட்டாயம்.

பின்குறிப்பு : "திருமணமாகுமுன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை: - நீதியரசர் என். கிருபாகரன்" என்ற செய்தியை படித்த பாதிப்பில் எழுதப்பட்டது. பெண்களை அவமதிக்கும்  நோக்கில் எழுதப்படவில்லை. இன்னும் சிலதினங்களில் ஆண் வெர்சன் கதையும் சங்கத்தால் வெளியிடப்படும்.

திங்கள், 28 அக்டோபர், 2013

மதுவும் மது சார்ந்த இடமும்!

'மதம் ஓா் அபின்' என்றார் மார்க்ஸ். 'மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்' என்றார் வடலூர் வள்ளலார்.
இறை எதிர்ப்பாளர்கள் இன்றும் என்றும் பயன்படுத்தக்கூடிய வாசகங்களாக மேற்கூறியவை அமைந்தன. அந்த சொற்றொடரை இன்றைய காலகட்டத்தில் புகுந்திருக்கும் புதிய நோயான மதுவை உள்ளடக்கி, மது ஓா் மனநோய், மதுவான பேய் பிடியாது இருக்க வேண்டும்' என்று திருத்தி எழுத வேண்டியது அவசியமாகிறது.
மது எனும் அரக்கன் பற்றிய உரையாடல்களும் கவலைகளும் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பத்திரிகை ஊடகங்களில் மதுவின் தீமை குறித்த கட்டுரைகள் அச்சாகின்றன. 24 மணி நேர தொலைக்காட்சி சேனல்களில் ஆங்காங்கே சில பல விவாதங்கள் நடந்தேறின.
மூத்த அரசியல்வாதி தமிழருவி மணியன் மதுவை ஒழிக்க கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார். மதிமுக தலைவர் உவரியில் இருந்து மதுரை வரை 350 கிலோமீட்டர் நடந்தார். காந்தியவாதி சசி பெருமாள் சாப்பிடாமல் 34 நாட்கள் சென்னைக் கடற்கரையோரம் கிடந்தார். பாமக தலைவர் ராமதாஸ் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தினார்.
இதுபோல “அவர் அது நடத்தினார்”, “இவர் இது நடத்தினார்” என பற்பல செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டு இருக்கின்றன. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க நீதிமன்றமும் தன்பங்குக்கு நெடுஞ்சாலையோரங்களில் உள்ள கடைகளை பூட்டசொல்லி அரசுக்கு உத்தரவு போட்டது. அந்த உத்தரவு எந்நிலையில் இருக்கிறது என யாம் அறியேன் பராபரமே.
நடப்பவை நடக்கட்டும், நான் என்பாட்டுக்கு என் பாதையில் நடக்கிறேன் என அரசும் தன் பங்கிற்கு உயர்ரக மதுக்கடைகளை வணிக வளாகங்களில் வெற்றிகரமாக திறந்து வருகிறது. மதுக்கடைகள் மூலம் வரும் வருமானம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வருகிறது. நாய் விற்ற காசு குரைக்காது. உப்பு விற்ற காசு உவர்க்காது. புளி விற்ற காசு புளிக்காது. மது விற்ற காசு போதை தராது. குருட்டுக்கோழி குழம்பு ருசிக்காமல இருந்துவிடும்?. மது குடித்தவன் போதையால் தள்ளாடுகிறான். விற்றவன் தள்ளாடாமல் இருக்கிறான். இன்னும் சொல்லப்போனால் மதுவிற்ற காசினால் தான் அரசே தள்ளாடாமல் இருக்கிறது எனலாம்.
காடும், காடு சார்ந்த நிலமும் முல்லை, மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி, இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை, வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் என ஐந்திணைகளாக பண்டைத் தமிழர் வாழ்ந்த நிலங்கள் அவர்தம் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப பகுக்கப்பட்டன. இன்றோ அவை ஐந்தையும் ஒன்றிணைத்து மதுவும் மதுசார்ந்த இடமும் தமிழகம் எனலாம்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில், ஏன் உலகளாவிய அளவில் மிக வேகமாக வளர்ந்த அரசுத்துறை நிறுவம் எது என கேள்வி எழுமானால், சந்தேகத்திற்கு இடமில்லாமல் டாஸ்மாக் எனலாம். டாஸ்மாக் இணைய தளத்திற்கு (http://tasmac.tn.gov.in/) சென்று பார்த்தால் அரசு மது விற்பனையைக் கையில் எடுத்த பின்னர் டாஸ்மாக்கின் விற்பனைத்திறன் 53.85 சதம் வளர்ந்திருக்கிறது. மதுவின் மூலம் வரும் வருமானம் 115.23 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு குறுகிய காலத்திற்குள் இவ்விதமான அதீத வளர்ச்சியை அடைந்திருக்குமா என்ற கேள்விக்கு எவ்வித ஆதாரங்களும் நமக்கு காணக்கிடைப்பது அரிதினும் அரிது.
பெரும்பாலான வெற்றிகரமான நிறுவனங்கள் 10 முதல் 20 சதவித வளர்ச்சியை எட்டவே ஏதேதோ செய்து திக்கு முக்காடுகின்றன. எவராலும் பெறமுடியாத வெற்றியை நாம் பெற்றுவிட்டோம் என அரசு புளகாங்கிதம் அடைய முடியுமா என்றதொரு கேள்வி ஒருபுறம். ஏன் மது விற்பனையைக் குறைக்கக்கூடாது என்ற சமுக ஆர்வலர்களின் கேள்விக்கு “கள்ளச் சாராயம் பெருகிவிடும்” என்றவொரு பதில் மறுபுறம். விற்றவனோ மேனி நிமிர்ந்து வீறு நடை போட, குடித்தவனோ மேனி அழுகி தள்ளாடி சீரழிகிறான். அப்படி சீரழிந்து கொண்டிருக்கும் ஒருவனின் உண்மைக் கதையை இங்கே நான் கவலை தோய்ந்த முகத்துடன் எழுத விரும்புகிறேன்.
எனது உறவினர் ஒருவர் ஆந்திரத் தலைநகரம் ஹைதராபாத்தில் உணவகம் நடத்தி வருகிறார். ஒரு சொட்டு மது கூட அருந்தாதவர். கடின உழைப்பாளி, விளைவு இருபதாண்டுகளில் அவர் கோடிகளுக்கு சொந்தக்காரர். அவர் ஆரம்பப் பள்ளிகூட கடக்காதவர். ஆனால் வெற்றிக்கனியை எட்டிப் பறித்துவிட்டவர். அவரிடம் ஒருவர் தன் சிறுவயது முதல் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றுத்திறனாளிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் தனியாக உணவகம் நடத்தும் ஆசை வந்தது. தன் முதலாளியிடம் தெரிவித்தார். நீண்டகால விசுவாசிக்கு பலனாக தன்னிடம் இருந்த கடைகளில் ஒன்றை சகாய விலைக்குத் தந்தார். மாதமொன்றுக்கு இலட்ச ரூபாய்க்கும் மேல் வருமானம் பெற்றுத்தந்த அட்சய பாத்திரமது. கைமாறியது பாத்திரம். ஒரு கையில் அட்சயபாத்திரத்தை ஏந்தியவர் மறு கையில் மதுக்கோப்பையை ஏந்தினார். வருமானம் சரிந்தது. ஆனாலும் அவர் கோப்பையிலே குடி இருந்தார். மனைவியின் தங்க நகைகள் சேட்டுக்கடை நோக்கி நடந்தன. குந்திக் குடித்தால் குன்றும் மாளும். கழுத்தில் இருந்த நகைகளும், வீட்டில் இருந்த நகைகளும் இல்லாது போயின. இல்லாது இருந்த கடன்கள் வந்தேறின. அள்ளித்தந்த அட்சயபாத்திரம் முதலாளியைப் போலவே தள்ளாடியது. இரண்டு ஆண்டுகளுக்குள் பாரம் தாங்காது கடை இழுத்து மூடப்பட்டது.
மதுவினால் அவரும் கடையும் தள்ளாடிய வேளையில் தாம்பத்தியம் சிறந்தது. ஒருவயது குழந்தை கையில். அடுத்த குழந்தைக்கும் அச்சாரம் போடப்பட்டு விட்டது. கையிலே காசு இல்லை. கர்ப்பப் பையிலே குழந்தை உள்ளது. கடன் கழுத்தை நெரித்தது. மது மூளையை மழுங்கடிக்கச் செய்துவிட்டது. கடை மூடப்பட்டது. அள்ளித்தந்த அட்சயபாத்திரத்துடன் இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து சென்றவர் பிச்சைப் பாத்திரத்துடன் மீண்டும் பிரிந்த இடத்திற்கே வந்து சேர்ந்தார். ஒருவயது கைக்குழந்தையும், கர்ப்பிணி மனைவியும் கூடுதல் இணைப்பு இப்போது. சேர்ந்த இடத்தில வேலையைத் தொடர்ந்தார், மதுவையும் தான்.
வாங்கும் சம்பளத்தில் பாதிக்கும் மேல் மது எனும் அரக்கனால் குடிக்கப்பட்டது. கர்ப்பிணியான மாற்றுத்திறனாளி மனைவி என்ன மன நிலையில் இருந்திருப்பார்? போராட்டமே அவர் வாழ்க்கையானது. செய்வதறியாது திகைத்தார். உண்ண காசு இல்லை. மருந்து செலவிற்கு பணம் இல்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு காந்தி சிரிக்கும் தாள் இல்லை. அந்தோ பரிதாபம், தலைவிரி கோலம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடுப்பில் ஒரு குழந்தையுடனும், கர்ப்பப் பையில் இன்னும் இரு குழந்தைகள் (உள்ளே இருப்பது இரண்டு என முன்னரே தெரிந்துவிட்டது) என மூவர் கூட்டத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டு யாரிடமும் சொல்லாது குடிகார கணவனின் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது அவர் நிறைமாதக் கர்ப்பிணி. அவர் (ஒரு கால் ஊனமான) மாற்றுத் திறனாளி என்பதும் கூடுதல் கவலை. கடந்த பத்து நாட்களாக அவரைக் காணவில்லை. தேடுதல் வேட்டை ஒருபுறம் நடக்க, மது அரக்கன் தலைக்கேறிய கணவனோ இன்னும் மதுக்கோப்பையை கீழே போடாது இருக்கிறான்.
என் சகோதர சகோதரிகளே ஹைதராபாத் மாநகரிலோ, ஆந்திராவின் ஏதோவொரு மூலையிலோ அல்லது தாய்த் தமிழகத்தின் தெருக்களிலோ மாற்றுத்திறனாளிப் பெண்ணொருவர் கையிலும் கர்ப்பப் பையிலும் குழந்தையோடு திரிந்து கொண்டிருக்கலாம். இன்னும் சில நாட்களில் அவர் பிரசவ நாட்களை எதிர் நோக்கியுள்ளார் என்பது தாங்க முடியாத வேதனை. நாம் என்ன செய்ய முடியும்?
மது எனும் மன நோய் குடிமக்களை கூண்டோடு அழிக்கிறது என உரக்கக் கூறும் நேரமிது. மனிதனைப் பிடித்துவிட்ட மதுவெனும் பேயை விரைந்து அடித்து விரட்ட வேண்டிய காலமிது. மது எனும் அரக்கனை உடனே சூரஹம்சாரம் பண்ண வேண்டிய வேளையிது. நாம் என்ன செய்யப்போகிறோம்?
மதுவை மனிதன் குடிக்கிறானா, மனிதனை மது குடிக்கிறதா? இதை இன்னும் நாம் புரிந்து கொள்ள மறுத்தால், எதிர்காலம் புதிர்காலமாகும்... நிகழ்காலம் இருளாகிப் போகும்!

தி ஹிந்துவில்  (தமிழ்)  வெளியான எனது கட்டுரை. 


சனி, 7 செப்டம்பர், 2013

பாலியல் வன்புணர்வும் பெண்ணின் ஆடையும் : ஒரு புள்ளி விவரம்நேற்று பெண்களின் மீதான் ஆடைக்கட்டுப்பாடு குறித்த ஒரு விவாதத்தை புதிய தலைமுறையின் நேர்பட பேசு எனும் நிகழ்வில் கண்டேன்.

கொற்றவையும், மாணவி சுசிந்த்ராவின் பேச்சும் மிகத் துல்லியமாக "என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன, எப்படிப்பட்ட ஆடைகள் அணியவேண்டும், யார் அதை முடிவு செய்ய வேண்டும்" என்பதை தெளிவுபடுத்தின. மனுஷ்யபுத்திரன் பேச்சு சரியானதாக இருந்தது அவருடைய கோவமும் மிகச்சரியானதே. சுசிந்த்ரா எந்த வகுப்பில் (முதுநிலையா/இளநிலையா/ஆய்வு மாணவியா) படிக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் பேச்சு மிகத் தெளிவான பார்வையுடன் இருந்தது. அவர் கேட்ட கேள்விகளுக்கு விடை ஆணாதிக்க சமூகச் சிந்தனையை உடைப்பதில்தான் இருக்கிறது. கொற்றவையும், மனுஷ்யபுத்திரனும் தொழில்முறைப் பேச்சாளர்கள், ஆகவே அவர்கள் பேச்சு சரியாக இருந்ததில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை. பேராசிரியர் ரேவதி கிருபாகரன் மற்றும் பானு கோம்ஸ் ஆகியோரின் பேச்சு எவ்வாறு மனுஷ்யபுத்திரனை கோபப்படுத்தியதோ, அதே உணர்வுடன் தான் நானும் இருந்தேன். பெண்ணின் ஆடை தான் ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டுகின்றன, அவைதான் பெண்களின் மீதான வன்புணர்வுகளுக்கு காரணம் என அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகள் கூறுகின்றன என பானு கோம்ஸும், ரேவதி கிருபாகரனும் ஒருமித்த குரலில் கூறினர். அதை மறுக்கவே இந்த பதிவு. தேசிய குற்ற பதிவு துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தை எனது துணைக்கு அழைத்துள்ளேன். காவல் நிலையங்களில் பதிவான முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து தேசிய குற்ற பதிவு துறை குற்றங்களுக்கான புள்ளிவிவரங்களை சேகரிக்கிறது. பெண்கள் மீது இழைக்கப்படும் குற்றங்களையும் தனியாக பதிவு செய்துள்ளது.
அதாவது பாதிக்கப்பட்ட பெண்கள், காவல் நிலையங்களுக்கு சென்று அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு தேசிய குற்ற பதிவு துறை இயங்குகிறது. தேசிய குற்ற பதிவு துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களை தற்போது பார்ப்போம்.

பெண்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதால் இந்திய தண்டனைச் சட்டப்படி
பெண்கள் மீதான குற்றதிற்கென சில சிறப்புச் சட்டங்களும், தண்டனைகளும் உள்ளன. பெண்கள் மீதான் குற்றத்தை இருவகைப்படுத்தலாம்.

ஒன்று இந்திய குற்றவியல் சட்டத்தின் (IPC) கீழுள்ள குற்றங்கள்
இவற்றில் எழு உப பிரிவுகள் உள்ளன.

1) கற்பழிப்பு (குற்றவியல் பிரிவு 376 : IPC 376 )
2) குறிப்பிட்ட காரணங்களுக்காக கடத்தல் (குற்றவியல் பிரிவு 363 -
373 IPC )
3) வரதட்சணை, வரதட்சணைக் கொலை அல்லது அவ்வாறான முயற்சிகளின் போது நிகழ்த்தப்பட்ட கொலை (குற்றவியல் பிரிவு 302/304-B IPC): இது கணவன் அல்லது உறவினர்களால் இழைக்கப்பட்ட குற்றங்கள்
4) மன மற்றும் உடல் ரீதியான சித்திரவதை (குற்றவியல் பிரிவு 498-A IPC)
5) பெண் உணர்வுகளை அல்லது பெண்ணை தாக்கும் நோக்குடன் செய்யப்படும் குற்றங்கள் (குற்றவியல் பிரிவு 354 IPC)
6) பெண்களை அல்லது பெண் உணர்வுகளை அவமதித்தல் (குற்றவியல் பிரிவு 509 IPC)
7) வெளிநாட்டு நாட்டில் இருந்து 21 வயதுக்கு உட்பட்ட பெண்களை இறக்குமதி செய்தல் (குற்றவியல் பிரிவு 366-B IPC)

மேற்கூறிய அனைத்தும் பெண்ணினம் சார்ந்த குற்றங்கள். அதாவது பெண்ணுக்கென இருக்கும் குற்றச் தடுப்பு சட்டங்கள். அதாவது ஆணைப் பெண் வீட்டார் வரதட்சினை கேட்டு துன்புறுத்துகின்றனர் என எந்த ஒரு ஆணும் புகார் அளிக்க இயலாது

இரண்டாவதாக வருவது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின் கீழே வரும் குற்றங்கள்:

இவற்றின் கீழ் வரும் அனைத்து சட்டங்களும் ஒரு குறிப்பிட்ட பாலினம் சார்த்து அல்ல. அதாவது (ஒருசில சட்டங்கள்) அனைவருக்கும் பொருந்தும்.

1) பரத்தமை தடுப்பு சட்டம் 1956, அதாவது பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக பலவந்தமாக வன்கொடுமைக்கு ஆளக்குவதை தடுக்க வந்த சட்டம் இதுவாகும்
2) வரதட்சணை தடை சட்டம், 1961
3) பெண்ணை அநாகரிகமான வகையில் காட்டுவதை தடுக்கும் சட்டம் 1986
அதாவது விளம்பரங்கள்,பத்திரிக்கைகள், ஊடகங்கள் போன்றவற்றில் பெண்ணை தவறாக காண்பித்தல் போன்ற குற்றங்களை தண்டிக்கும் சட்டம்
4) சதி (உடன்கட்டை ஏற்றுதல்) தடுப்பு சட்டம் 1987, இது இப்போது சுத்தமாக இருக்காதுன்னு நான் தப்பு கணக்கு போட்டுவிட்டேன்.

இவைகளை தவிரவும் பெண்களுக்கு பணியிடங்களில் இழைக்கப்படும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான விசாகா குழுவின் பரிந்துரைகள் போன்றவைகள் இருக்கின்றன. நான் தவற விட்ட மேலும் பல்வேறு குற்றப்பிரிவுகள் இருக்கலாம். நான் சட்டத்துறை வல்லுநர் அல்ல.

இப்போது தேசிய குற்ற பதிவு துறையின் புள்ளிவிவரங்கள்:

முதல் படத்தைப் பாருங்கள்மேலே உள்ள அட்டவணையில் இருந்து 2012 ஆம் ஆண்டில் மொத்தம் 244,270

புகார்கள் பெண்கள் மீதான குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் (106,527+ 8,233+9,038) = 123798 புகார்கள் அனைத்தும் குடும்ப உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்டவை. ஆக குடும்பமும் குடும்ப அமைப்பும் தான் பெண்ணுக்கு முதல் எதிரி. ஆனால் ரேவதியும், பானுவும் பெண்கள் குடும்பத்திற்குள் பாதுகாப்பாக இருப்பதாகவும் சொல்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல பெரும்பாலானோர் கருத்தும் அதுவே. நான் ஒரு சக ஆணாக இருந்து சொல்கிறேன். தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கையில் எந்தப்பெண்ணையும் உடனடியாக அவர்களுடன் புணர்வு செய்து விடவேண்டும் என்று எனக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. ஆனால் தெரிந்த பெண்கள் என்ற வகையில் பார்க்கும் போது நான் இதில் மாறுபடுகிறேன். ஒருவேளை நான் சரியான விதத்தில் அணுகினால் அவர்களை என் வலைக்குள் வீழ்த்திவிடலாம் என எனக்குள் எண்ணங்கள் தோன்றியுள்ளன என்பதை நான் இங்கே தெளிவு படுத்த வேண்டும். நானும் கல்லூரியில் படித்தவன் தான், பெண்களுடன் ஒருசேர பணியிடங்களில் வேலை பார்த்தவன் தான். எனக்கு தெரிந்து ஒரு முறை கூட அங்கே வன்புணர்வு நடந்தது இல்லை. ஆனால் என் கிராமத்தில், வாழிடங்களில் இது போன்ற நிறைய நடந்துள்ளன.
சுசிந்த்ரா சொன்னது போல் ஒரு பெண்ணைக் கண்டவுடன் அவள் மார்பைத் தான் ஆண் நோக்குகிறான் என்பது உண்மையே (அனைத்தும் ஆண்களும் இதில் உடன்படுவார்கள் என்பது என் எண்ணம்). ஆனால் அவன் உடனடியாக பாய்ந்து விடுவதில்லை. திட்டம் போடுகிறான். பழகுகிறான். அவள் எனக்கானவள் என நோக்கம் கொண்டு செயல்படுகிறான். மேற்கண்ட குற்றங்களை ஒப்பிட்டு அளவில் பார்த்தால் குடும்ப உறுப்பினர்களால் தான் அதிக குற்றம் நடைபெறுவதையும் பார்த்தோம். அதை தற்போது வரைபடம் ஊடாக பார்ப்போம்.

இரண்டாவது படத்தைப் பாருங்கள்


இந்த குற்றங்கள் ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டு வருகின்றன என்பதை பின்வரும் அட்டவணை காட்டுகிறது. உண்மையில் தற்போது அதிகப்படியான பெண்கள் புகார் அளிக்கின்றனர் என்பதே மிகச்சரியாக இருக்கும் என்பது என் கணிப்பு.

மூன்றாவது படத்தைப் பாருங்கள்இப்போ நாம் ரேப்புக்கு வருவோம்.

முறையற்ற உறவினர் மீதான கற்பழிப்பு (அதாவது மகள்/அம்மா/அக்கா/தங்கை/அத்தை) வழக்கில் 2012 ஆம் ஆண்டில் 392 புகார்கள் பதிவாகியுள்ளன.

2012 ஆம் ஆண்டில் பதிவான 24,923 புகார்களில் 24,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிச்சம் எட்டுப்பேர் தவறான புகார் கொடுத்து இருக்கலாம். அல்லது ஒருவர் ஒரு புகாருக்கு மேலாகவும் பதிவு செய்து இருக்கலாம். கற்பழிக்கப்பட்டவர்களில் 12.5 விழுக்காட்டினர் அல்லது 3,125


பெண்கள் 14 வயதுக்கு உட்பட்டோர். அதாவது கற்பழிக்கப்பட்ட 100 பேரில் 12.5 பேர் குழந்தைகள். இவர்கள் குழந்தைகள் அதிலும் 902 பேர் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். இவர்களுக்கு என்ன உடைக்கட்டுப்பாடு போட? அடுத்து கற்பழிக்கப்பட்டவர்களில் 23.9 சதவிதமானோர் அல்லது 5,957 பேர் 14-18 வயதுக்கு இடைப்பட்டோர். இவர்களும் சட்டப்படி குழந்தைகளே. இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி செல்லும் குழந்தைகள். அதாவது கற்பழிக்கப்பட்ட 100 பேரில் 24 பேர் கொஞ்சம் பெரிய குழந்தைகள். 125 பேர் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்.

அடுத்து குற்றவாளி பட்டியலுக்கு வருவோம்

மொத்த குற்றவாளிகளில் 98.2 விழுக்காட்டினர் அல்லது 24,923 பேரில் 24,470 குற்றவாளிகள் பெண்ணுக்கு தெரிந்தவர்கள் தான். இன்னும் விளக்கமாக பார்த்தோமானால் 393 குற்றவாளிகள் பெற்றோர் உட்பட நெருங்கிய உறவினர்கள், இவர்கள் 1.6 விழுக்காடு. பக்கத்துக்கு விட்டுக்காரங்க, தெரிஞ்சவங்க 34.7 விழுக்காட்டினர் அல்லது 8,484 பேர்கள். அதாவது மூணுல ஒருத்தன் பக்கத்துக்கு வீட்டுக்காரன்தான்.
அடுத்து சொந்தகாரர்கள் 6.5 விழுக்காட்டினர் அல்லது 1,585 பேர்கள். மற்றபடி 13652 குற்றவாளிகள் கொஞ்சம் தெரிஞ்சவங்க, அதாவது எதாவது ஒரு வகையில் பெண்ணுக்கு தெரிந்தவர்கள்தான். உடையைப் பார்த்து உடனடியாக மேகி நூடுல்ஸ் மாதிரி பாய்ந்தவர்கள் அல்ல. திட்டம் போட்டு கற்பழித்தவர்கள் தான் அதிகம்.
5-6 மணி நேரம் கல்லூரியில் இருக்கும் போது கோணிப்பைக்குள் பெண்களை உக்கார வச்சா கற்பழிப்பு குறைஞ்சுரும் சொன்னா, மிச்ச நேரம் யாரு காப்பாத்துவது? சொன்னாக் கேளுங்கப்பா வீட்டுக்குள்ளதான் அதிக கற்பழிப்பு நடக்கு. மேற்கண்ட கற்பழிப்பு குற்றங்கள் அனைத்தும் கணவனால் செய்யப்படாதவைன்னு நினைக்கிறேன், Marital Rape ன்னு எதுவும் பதிவாகிருப்பது போல எதுவும் தெரியவில்லை. முதலில் Marital Rape சட்டமாக்கபடவேண்டும். வர்மா குழு இந்த பரிந்துரையை சொன்னது. என்ன நிலைமையில் இருக்குன்னு தெரியல.

நான்காவது படத்தை பாருங்கள், மாநில வாரியாக


இன்னொரு விஷயம் மாநிலங்களில் மத்திய பிரதேசம் தான் இதுல முதல் இடம். நகரங்களில் டெல்லிக்கு முதல் இடம். மும்பைக்கு இரண்டாவது இடம். அதற்குபின் மத்திய பிரதேச மாநிலங்கள் வருது. சென்னை கொஞ்சம் பரவாயில்லை. அதே மாதிரி தமிழ்நாடும் பரவாயில்லை, குறைவுதான். தேனாறும் பாலாறும் ஓடக்கூடிய மோடியின் குஜராத்தும் இந்த பட்டியலில் வருது.

பதிவு ரொம்ப பெருசா போகுது, முடிக்கணும். ஆகவே ஆண்களின் கண்களையும் கைகளையும் கால்களையும் மற்ற எல்லாவற்றையும் அடக்க நாம் கற்றுகொடுக்க வேண்டும். பாலியல் சமத்துவம் பற்றியும் பாலியல் சுதந்திரம் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும். முதலில் பெண் என்பவள் உன்னைப்போல் ஒரு சக உயிர் என ஆணுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அதுக்கெல்லாம் பெரியார் சொன்னவற்றை அனைத்தையும் சட்டமாக்கவேண்டும். கல்விமுறையில் மாற்றவேண்டும், குடும்ப, சமுக அமைப்பு முறையில் மாற்றம் வேண்டும். ஊடகங்களில் குறிப்பாக திரைப்படங்கள் பெண்ணை போகப் பொருளாக காட்டுவதை நிறுத்த வேண்டும். இப்படி நிறைய மாற்றம் வேண்டும் அப்போதுதான் இந்த குற்றங்கள் நிற்கும்.

அடுத்தபடி வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மாணவிகள் கட்டுப்பாட்டோடுதான் உடை அணிகிறார்கள் எனச் சொன்னார்கள், எனக்குத் தெரிந்து முழுக்க முழுக்க தவறு, சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் நேரில் பார்த்தவன் நான். எனக்கு ஒருமுறை பாடம் எடுக்க வந்த ஒரு பேராசிரியை முழங்கால்வரை தெரியும் ஸ்கர்ட்(Skirt) போட்டு தான் பாடம் எடுக்கவே வந்தார். பேராசிரியையே இவ்வாறு என்றால் மாணவிகள் எவ்வாறு என்று நீங்கள் கற்பனை பண்ணிக்கொள்ளலாம்.

ஆக சிந்தனை மாற்றம் தேவை. மாறுங்கள் ஆண்களே. பெரியாரைப் படியுங்கள், தன்னாலே மாறிவிடலாம்.

ஆகமொத்தம் கற்பழிப்பு தெரியாதவனால் கொஞ்சம் தான் நடக்கின்றன. ஒட்டுமொத்த கற்பழிப்பும் தெரிஞ்சவர்களால் தான் நடக்கின்றன என்பது மேற்கண்ட புள்ளிவிவரங்கள் மூலம் வெட்ட வெளிச்சம்.

இது தவிர சொந்தக்காரன், மன்னிச்சு விட்ருவோம், அல்லது புகார் கொடுக்காமல் நிறைய பேர் இருக்காங்க என்பதயும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் தலித் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எவிடென்ஸ் கதிரை கேட்டால் மிகத் தெளிவாக சொல்வார்.

சனி, 22 ஜூன், 2013

மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டவை?

ஆத்திகன்: மதங்கள் கடவுள்களால் உண்டாக்கப்பட்டவை
பகுத்தறிவுவாதி: அல்ல; அவை மனிதர்களால் உண்டாகியவை.
பகுத்தறிவுவாதி: மதங்கள் எத்தனை உண்டு?
ஆத்திகன்: பல மதங்கள் உண்டு
பகுத்தறிவுவாதி: உதாரணமாகச் சில சொல்லும்.
ஆத்திகன்: எடுத்துக்காட்டாக இந்து மதம், புத்தமதம், கிருத்துவ மதம்,
முகமது மதம், சீக் மதம், பார்சி மதம், சவுராட்டிர மதம் முதலியவைகளும்
இவற்றுள் பல உட்பிரிவுகளும் உண்டு.
பகுத்தறிவுவாதி: கடவுள்கள் எத்தனை உண்டு?
ஆத்திகன்: ஒரே கடவுள்தான் உண்டு
பகுத்தறிவுவாதி: இவ்வளவு மதங்களும் யாருக்காக உண்டாக்கப்பட்டவை
ஆத்திகன்: மனித வர்க்கத்துக்காகத்தான்.
பகுத்தறிவுவாதி: மதத்தால் ஏற்படும் பயன் என்ன?
ஆத்திகன்: மனிதன். கடவுளை அறியவும், கடவுளுக்கும், தனக்கும் சம்பந்தம்
ஏற்படுத்திக் கொள்ளவும், ஆத்ம ஞானம் பெறவும் கடவுள் கருணைக்குப்
பாத்திரனாகவும் பயன்படுவதாகும்.
பகுத்தறிவுவாதி: அப்படியானால் ஒரே கடவுள் மனித வர்க்கத்துக்கு இத்தனை
மதங்களை ஏற்படுத்துவானேன்?
ஆத்திகன்: அது மிகவும் சிரமமான கேள்வியாக இருக் கிறது. பிறகு பதில் சொல்லுகிறேன்.
பகுத்தறிவுவாதி: அதுதான் போகட்டும். இந்துமதம் என்பது என்ன? அது கடவுளால்
எப்படி ஏற்படுத்தப்பட்டது.
ஆத்திகன்: இந்து மதம் என்றால் வேதமதம் என்றும் பெயர்.
பகுத்தறிவுவாதி: வேதம் என்றால் என்ன?
ஆத்திகன்: ரிக், யசுர், சாமம், அதர்வணம் என 4 வேதம் உண்டு. அவ்வேத
முறைதான் இந்து மதம் என்பது.
பகுத்தறிவுவாதி: இவ்வேதங்கள் யாரால் ஏற்படுத்தப் பட்டவை?
ஆத்திகன்: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை
பகுத்தறிவுவாதி: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்வை என்று யார்
சொன்னார்கள்?
ஆத்திகன்: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை என்று வேதம் சொல்லுகிறது.
வேதம் கடவுள் வாக்கு என்று வேதம் சொல்லுகிறது.
பகுத்தறிவுவாதி: இதற்கு ஏதாவது சாட்சியோ ஆதாரமோ உண்டா?
ஆத்திகன்: வேதத்துக்கும், கடவுள் வாக்குக்கும் ஆதார மோ, சாட்சியோ கேட்பது
என்றால் அது பாபமான காரியமேயாகும்.
பகுத்தறிவுவாதி: அது பாபமாக இருக்கலாம். ஆனால் ஆதாரம் ருசு இல்லாமல்
ஒன்றை ஒருவர் நம்புவது என்றால் அது குற்றமாகாதா?
ஆத்திகன்: இதுவும் கடினமான பிரச்சினையாகத்தான் இருக்கின்றது.
பெரியவர்களைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.
பகுத்தறிவுவாதி: புத்தமதம் என்றால் என்ன?
ஆத்திகன்: புத்தர் என்கிறவர் காலத்தில் ஏற்பட்டது.
பகுத்தறிவுவாதி: அதற்கு என்ன ஆதாரம்?
ஆத்திகன்: புத்தர் என்கிறவர் சொன்னதாகச் சொல்லப் படும் வாக்குகள்தான்.
பகுத்தறிவுவாதி: புத்தர்தான் சொன்னார் என்பதற்கு ஆதாரம் என்ன?
ஆத்திகன்: புத்தர் சங்கதி சரித்திரத்தில் பட்டதாய் இருக் கிறது.
அன்றியும் அதில் இன்றைய நிலையில் மற்ற மதங் களைப் போலக் கடவுள், கடவுள்
வாக்கு, பல அற்புதங்கள் முதலியவை இல்லை என்பதோடு ஆலோசனைக்கும்,
அறிவுக்கும் பொருத்தமானதை எடுத்துக் கொண்டு மற்றவைகளைத் தள்ளி விடுவதில்
பாவமோ, குற்றமோ, கடவுள் தண்டனையோ இல்லை. ஆகையால், அதற்கு ஆதாரம் தேடிக்
கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
ப-தி: சரி மிக நல்ல மாதிரி சமாதானம் சொன்னீர்கள். அப்படியானால்
அம்மதத்தைப் பற்றி நமக்குக் கவலை இல்லை.
ப-தி: கிருத்துவ மதம் என்பது என்ன?
ஆ-ன்: கிருத்துவ மதம் என்பது கிருத்துவால் சொல்லப்பட்ட கொள்கை.
ப-தி: அது எது?
ஆ-ன்: பைபிள்
ப-தி: கிருத்து என்பவர் யார்?
ஆ-ன்: கிருத்து கடவுள் குமாரர்.
ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?
ஆ-ன்: கிருத்து சொல்லி இருக்கிறார்
ப-தி: ஒருவர் தன்னை இன்னான் என்று நிரூபிக்க அவரது வாக்கு மூலமே
போதுமா?
ஆ-ன்: ஏன் போதாது?
ப-தி: அப்படியானால் இப்போது ஒருவன் வந்து உம்மிடம் தான் கடவுள் என்று
சொன்னால் ஒப்புக் கொள்ளுவீரா?
ஆ-ன்: இதுவும் கடினமான பிரச்சினைதான் பெரியவர் களைக் கேட்க வேண்டும்!
முகமதிய மதம்
ப-தி: முகமதிய மதம் என்றால் என்ன?
ஆ-ன்: முகமது நபி என்பவரால் சொல்லப்பட்ட கொள்கைகள்.
ப-தி: அதற்கு என்ன ஆதாரம்?
ஆ-ன்: குரான் என்னும் வாக்கியம்.
ப-தி: அது யாரால் சொல்லப்பட்டது?
ஆ-ன்: கடவுள்களால் முகம்மது நபி அவர்கள் மூலம் வெளியாக்கப்பட்டது.
ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?
ஆ-ன்: நபி அவர்கள் சொன்னார்.
ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?
ஆ-ன்: குரான் வாக்கியங்களில் இருக்கிறதுடன், வேறுபல
சாட்சியங்களுமிருக்கின்றன.
ப-தி: வேறு பல சாட்சியங்கள் என்பது எவை?
ஆ-ன்: அந்தக் காலத்தில் நபி அவர்களுடன் இருந்த பல பெரியவர்கள் வாக்கு
இருக்கிறது.
ப-தி: அவை உண்மை என்பது ஆதாரம் என்ன?
ஆ-ன்: அந்தப்படி இருக்கும் ஆதாரங்களை நம்ப வேண்டியது தான்.
ப-தி: மற்ற மதங்களும் இதுபோல் தானே?
ஆ-ன்: ஆம்!
ப-தி: அனேகமாக கடவுள் வாக்கு. கடவுளால் அனுப்பப் பட்டவர்கள். கடவுள்
அவதாரங்கள் என்பவர்கள் அவர் களது வாக்குகள் சம்பந்தப்பட்ட மதங்கள் ஆகிய
எல்லோரையும், ஒரே கடவுள் சொன்னார் சிருட்டித்தார் என்பதும் நியாயமாகுமா?
ஆதலால் இதுமாதிரி மதம் என்பது வியாபாரம் மதகர்த்தர் வேதம் புராணம் என்பவை
வியாபாரச்சரக்குகள் என்பது பகுத்தறிவுக்காரர் களுக்கும் படும் விடயம்.
இது ஒரு சமயம் தப்பாக இருந்தாலும் இருக்கலாம்.
ஆ-ன்: ஆம் எல்லாம் இப்படிப்பட்டதுதான்.
ப-தி: அப்படியிருக்க இவ்வளவு மதங்களையும் ஒரே கடவுள் உண்டாக்கி இருப்பார்
என்று நீரே நம்புகிறீரா? அதனால் தான் இவை ஒவ்வொரு
சீர்திருத்தக்காரர்களால் அறிவாளி களால் முன்பின் ஆராய்ந்து பார்த்து மனித
சமூகத்துக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற கவலை கொண்டவர் களால்
(மனிதர்களால்) உண்டாக்கப்பட்டது என்று எண்ண வேண்டியிருக்கிறது.
அப்படிக்கில்லாமல் ஒரே கடவுள் இருந்து அவரே இவ்வளவு மதத்துக்கும்,
மதகர்த்தருக்கும் ஆதார புருடர் என்றால் அப்போது கடவுளின் மேன்மைக் குணம்
பாதிக்கப்படவில்லையா? யாரோ சில மனிதர் களுக்கு மேன்மை கொடுப்பதற்காகக்
கடவுளை முட்டா ளாக்குவதும் பல கடவுள்களைச் சிருட்டிப்பதும் பல வேதங்
களைச் சிருட்டிப்பதும் சரியா?
நாம் இருவரும் இவ்விசயங்களில் ஒரே கருத்துடையவர் களாகி இவை எல்லாம் சற்று
நேரத்துக்கு உண்மை என்றே ஒப்புக் கொள்வோம். அதாவது இந்துமதம் கடவுளால்
உண்டாக்கப்பட்டது என்பதையும், வேதம் கடவுள் வாக்கு என்பதையும், முகமது
நபி கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதையும், குரானையும் மற்ற மதத்தையும்
ஒப்புக் கொள்வோம். ஆனால் அவை எல்லாம் இன்று ஒன்றாய் இல்லாமல் வேறு
அபிப்பிராயங்களாகவும் சில முரணானவையாகவும் ஒரு மத தத்துவத்துக்கும்
மற்றத் தலைவருக்கும் மாறாக இருப்பானேன்? ஒன்றுக்கொன்று இன்றைய
அனுபவத்தில் அதிருப்தி: வெறுப்பு துவேசம் உடையவைகளாக இருப்பானேன்?
ஆ-ன்: இதுவும் சிரமமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. பெரியவர்களை கேட்க
வேண்டும்.
ப-தி: சாவகாசமாய்ப் பெரியவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால்
இன்று நாம் எதை நம்பி எப்படி நடந்து கொள்வது?
ஆ-ன்: இவை எல்லாம் உண்மை என்றோ அல்லது உண் மை அல்லது என்றோ எப்படியோ
இருக்கட்டும். அதற்கு ஆக நாம் கவலைப்பட வேண்டா. உலகில் மனிதன் உயி
ருள்ளவரை நல்லது எண்ணு நல்லது செய் அவ்வளவு தான்.
ப-தி: நல்லது எது? தீயது எது? என்பதற்கு அளவு கருவி என்ன?
ஆ-ன்: இது மிகவும் கடினமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. ஆனாலும்
பெரியவர்கள் நடந்து காட்டியது, சொல்லியிருப்பது இவைகளைக் கொண்டு தெரிந்து
கொள்ள வேண்டியதுதான்.
ப-தி: பெரியவர் யார் என்பதற்கு அளவு கருவி என்ன? ஒருவர் ஒருவரைப்
பெரியவர் என்றால் மற்றொருவர் அவரை ஒப்புக் கொள்வதில்லை. அவருக்கு மாறாக
அல்லது வேறொன்றைச் சொன்னவர்களைப் பெரியவர் என்கிறான் இதற்கு ஒரு பரீட்சை
குறிப்பு வேண்டுமே?
ஆ-ன்: இதுவும் கடினமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. இதற்கெல்லாம்
உம்முடைய சமாதானம்தான் என்ன சொல்லு பார்ப்போம்.
ப-தி: என் சமாதானம் என்ன? நான்தான் மதத்துவேசி. பார்ப்பனத்துவேசி,
நாத்திகன், சுயமரியாதைக்காரன் என்றெல்லாம் பெயர் வாங்கினவனாய் விட்டேனே,
என் பேச்சை யார் கேட்பார்கள். நீர் ஆத்திகராயிற்றே. உமக்குத்
தெரியுமென்றும், தெரியாவிட்டாலும் உம்முடைய உள்ளத் தில் சதா
குடிகொண்டிருக்கிற கடவுள் உணர்த்துவார் என்றும் கருதி உண்மையான
சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காகக் கேட்டேன். நல்ல வேளையாக நீர்
பதில் சொல்லாவிட்டாலும் என்னை வையாமல் பெரியவர்களைக் கேட்டுச்
சொல்லுகிறேன் என்று சொன் னீரே. அதுவே எனக்கு மிகவும் திருப்தி
ஆத்திகர்களில் இப்படிப்பட்டவர்கள் அருமை மிக மிக அருமை: சந்தேகம்
கேட்டால் அடி, உதை, நாத்திகன், பிராமண துவேசி, ஆரிய துவேசி என்றெல்லாம்
வெறி பிடித்தவர்கள் போல் ஆடுவார்கள். ஆதலால், உம்மைப் பற்றிக் கூட எனக்கு
சந்தேகம்தான்.
ஆ-ன்: என்ன சந்தேகம்?
ப-தி: நீர் ஆத்திகரோ என்னவோ என்று.
ஆ-ன்: நான் உண்மையில் ஆத்திகன்தான். அதாவது ஒரு கடவுள் இருப்பார் என்று
நம்புகிறவன். ஆனால் இத்தனை மதங்களையும், மத கர்த்தாக்களையும், அந்தந்த
மதவேதங்களையும், அவையெல்லாம் கடவுளால் சொல்லப் பட்டவை என்பதிலும்
அவ்வேதக்கதைகள், புராணங்கள் ஆகியவை உண்மை என்பவைகளையும் பற்றி அவ
நம்பிக்கை கொண்டவன்தான்.
ப-தி: அப்படியானால் நீர். இருப்பார் என்ற கடவுள் நம்பிக்கையை யார் எந்த
ஆத்திகர் இலட்சியம் செய்வார்? ஒரு குறிப்பிட்ட கடவுள் அல்லது ஒரு
குறிப்பிட்ட மதகர்த்தா அல்லது ஒரு குறிப்பிட்ட மதம் என்பவைகளை ஏற்றுக்
கொள்ளாதவர் நம்பாதவர் எல்லோரும் மற்ற மதக் காரனுக்கு நாத்திகனே -
நம்பிக்கை யற்றவனே யாவான் நாத்திகம் என்பதும் நம்பிக்கையற்றது என்பதாக
எல்லாம் ஆத்திகர்களுக்கும் ஒரே பொருள்தான்.
ஆ-ன்: யாரோ எப்படியோ போகட்டும் எனக்கென்ன? என் புத்திக்கு சரி என்று
பட்டதை செய்து விட்டு செத்துப் போகிறேன்.
ப-தி: ஏன் சாகிறீர். உயிருடன்தான் இருமே உமக்கு சரி என்று பட்டதைத்தான்
செய்யுமே எனக்கென்ன கவலை? எப்படி இருந்தாலும் ஆத்திகர்கள் வைது கொண்டு
தானிருப்பார்கள்.
---------------- தந்தைபெரியார் -- ”குடிஅரசு”, 20.3.1938