திங்கள், 28 அக்டோபர், 2013

மதுவும் மது சார்ந்த இடமும்!

'மதம் ஓா் அபின்' என்றார் மார்க்ஸ். 'மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்' என்றார் வடலூர் வள்ளலார்.
இறை எதிர்ப்பாளர்கள் இன்றும் என்றும் பயன்படுத்தக்கூடிய வாசகங்களாக மேற்கூறியவை அமைந்தன. அந்த சொற்றொடரை இன்றைய காலகட்டத்தில் புகுந்திருக்கும் புதிய நோயான மதுவை உள்ளடக்கி, மது ஓா் மனநோய், மதுவான பேய் பிடியாது இருக்க வேண்டும்' என்று திருத்தி எழுத வேண்டியது அவசியமாகிறது.
மது எனும் அரக்கன் பற்றிய உரையாடல்களும் கவலைகளும் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பத்திரிகை ஊடகங்களில் மதுவின் தீமை குறித்த கட்டுரைகள் அச்சாகின்றன. 24 மணி நேர தொலைக்காட்சி சேனல்களில் ஆங்காங்கே சில பல விவாதங்கள் நடந்தேறின.
மூத்த அரசியல்வாதி தமிழருவி மணியன் மதுவை ஒழிக்க கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார். மதிமுக தலைவர் உவரியில் இருந்து மதுரை வரை 350 கிலோமீட்டர் நடந்தார். காந்தியவாதி சசி பெருமாள் சாப்பிடாமல் 34 நாட்கள் சென்னைக் கடற்கரையோரம் கிடந்தார். பாமக தலைவர் ராமதாஸ் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தினார்.
இதுபோல “அவர் அது நடத்தினார்”, “இவர் இது நடத்தினார்” என பற்பல செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டு இருக்கின்றன. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க நீதிமன்றமும் தன்பங்குக்கு நெடுஞ்சாலையோரங்களில் உள்ள கடைகளை பூட்டசொல்லி அரசுக்கு உத்தரவு போட்டது. அந்த உத்தரவு எந்நிலையில் இருக்கிறது என யாம் அறியேன் பராபரமே.
நடப்பவை நடக்கட்டும், நான் என்பாட்டுக்கு என் பாதையில் நடக்கிறேன் என அரசும் தன் பங்கிற்கு உயர்ரக மதுக்கடைகளை வணிக வளாகங்களில் வெற்றிகரமாக திறந்து வருகிறது. மதுக்கடைகள் மூலம் வரும் வருமானம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வருகிறது. நாய் விற்ற காசு குரைக்காது. உப்பு விற்ற காசு உவர்க்காது. புளி விற்ற காசு புளிக்காது. மது விற்ற காசு போதை தராது. குருட்டுக்கோழி குழம்பு ருசிக்காமல இருந்துவிடும்?. மது குடித்தவன் போதையால் தள்ளாடுகிறான். விற்றவன் தள்ளாடாமல் இருக்கிறான். இன்னும் சொல்லப்போனால் மதுவிற்ற காசினால் தான் அரசே தள்ளாடாமல் இருக்கிறது எனலாம்.
காடும், காடு சார்ந்த நிலமும் முல்லை, மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி, இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை, வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் என ஐந்திணைகளாக பண்டைத் தமிழர் வாழ்ந்த நிலங்கள் அவர்தம் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப பகுக்கப்பட்டன. இன்றோ அவை ஐந்தையும் ஒன்றிணைத்து மதுவும் மதுசார்ந்த இடமும் தமிழகம் எனலாம்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில், ஏன் உலகளாவிய அளவில் மிக வேகமாக வளர்ந்த அரசுத்துறை நிறுவம் எது என கேள்வி எழுமானால், சந்தேகத்திற்கு இடமில்லாமல் டாஸ்மாக் எனலாம். டாஸ்மாக் இணைய தளத்திற்கு (http://tasmac.tn.gov.in/) சென்று பார்த்தால் அரசு மது விற்பனையைக் கையில் எடுத்த பின்னர் டாஸ்மாக்கின் விற்பனைத்திறன் 53.85 சதம் வளர்ந்திருக்கிறது. மதுவின் மூலம் வரும் வருமானம் 115.23 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு குறுகிய காலத்திற்குள் இவ்விதமான அதீத வளர்ச்சியை அடைந்திருக்குமா என்ற கேள்விக்கு எவ்வித ஆதாரங்களும் நமக்கு காணக்கிடைப்பது அரிதினும் அரிது.
பெரும்பாலான வெற்றிகரமான நிறுவனங்கள் 10 முதல் 20 சதவித வளர்ச்சியை எட்டவே ஏதேதோ செய்து திக்கு முக்காடுகின்றன. எவராலும் பெறமுடியாத வெற்றியை நாம் பெற்றுவிட்டோம் என அரசு புளகாங்கிதம் அடைய முடியுமா என்றதொரு கேள்வி ஒருபுறம். ஏன் மது விற்பனையைக் குறைக்கக்கூடாது என்ற சமுக ஆர்வலர்களின் கேள்விக்கு “கள்ளச் சாராயம் பெருகிவிடும்” என்றவொரு பதில் மறுபுறம். விற்றவனோ மேனி நிமிர்ந்து வீறு நடை போட, குடித்தவனோ மேனி அழுகி தள்ளாடி சீரழிகிறான். அப்படி சீரழிந்து கொண்டிருக்கும் ஒருவனின் உண்மைக் கதையை இங்கே நான் கவலை தோய்ந்த முகத்துடன் எழுத விரும்புகிறேன்.
எனது உறவினர் ஒருவர் ஆந்திரத் தலைநகரம் ஹைதராபாத்தில் உணவகம் நடத்தி வருகிறார். ஒரு சொட்டு மது கூட அருந்தாதவர். கடின உழைப்பாளி, விளைவு இருபதாண்டுகளில் அவர் கோடிகளுக்கு சொந்தக்காரர். அவர் ஆரம்பப் பள்ளிகூட கடக்காதவர். ஆனால் வெற்றிக்கனியை எட்டிப் பறித்துவிட்டவர். அவரிடம் ஒருவர் தன் சிறுவயது முதல் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றுத்திறனாளிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் தனியாக உணவகம் நடத்தும் ஆசை வந்தது. தன் முதலாளியிடம் தெரிவித்தார். நீண்டகால விசுவாசிக்கு பலனாக தன்னிடம் இருந்த கடைகளில் ஒன்றை சகாய விலைக்குத் தந்தார். மாதமொன்றுக்கு இலட்ச ரூபாய்க்கும் மேல் வருமானம் பெற்றுத்தந்த அட்சய பாத்திரமது. கைமாறியது பாத்திரம். ஒரு கையில் அட்சயபாத்திரத்தை ஏந்தியவர் மறு கையில் மதுக்கோப்பையை ஏந்தினார். வருமானம் சரிந்தது. ஆனாலும் அவர் கோப்பையிலே குடி இருந்தார். மனைவியின் தங்க நகைகள் சேட்டுக்கடை நோக்கி நடந்தன. குந்திக் குடித்தால் குன்றும் மாளும். கழுத்தில் இருந்த நகைகளும், வீட்டில் இருந்த நகைகளும் இல்லாது போயின. இல்லாது இருந்த கடன்கள் வந்தேறின. அள்ளித்தந்த அட்சயபாத்திரம் முதலாளியைப் போலவே தள்ளாடியது. இரண்டு ஆண்டுகளுக்குள் பாரம் தாங்காது கடை இழுத்து மூடப்பட்டது.
மதுவினால் அவரும் கடையும் தள்ளாடிய வேளையில் தாம்பத்தியம் சிறந்தது. ஒருவயது குழந்தை கையில். அடுத்த குழந்தைக்கும் அச்சாரம் போடப்பட்டு விட்டது. கையிலே காசு இல்லை. கர்ப்பப் பையிலே குழந்தை உள்ளது. கடன் கழுத்தை நெரித்தது. மது மூளையை மழுங்கடிக்கச் செய்துவிட்டது. கடை மூடப்பட்டது. அள்ளித்தந்த அட்சயபாத்திரத்துடன் இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து சென்றவர் பிச்சைப் பாத்திரத்துடன் மீண்டும் பிரிந்த இடத்திற்கே வந்து சேர்ந்தார். ஒருவயது கைக்குழந்தையும், கர்ப்பிணி மனைவியும் கூடுதல் இணைப்பு இப்போது. சேர்ந்த இடத்தில வேலையைத் தொடர்ந்தார், மதுவையும் தான்.
வாங்கும் சம்பளத்தில் பாதிக்கும் மேல் மது எனும் அரக்கனால் குடிக்கப்பட்டது. கர்ப்பிணியான மாற்றுத்திறனாளி மனைவி என்ன மன நிலையில் இருந்திருப்பார்? போராட்டமே அவர் வாழ்க்கையானது. செய்வதறியாது திகைத்தார். உண்ண காசு இல்லை. மருந்து செலவிற்கு பணம் இல்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு காந்தி சிரிக்கும் தாள் இல்லை. அந்தோ பரிதாபம், தலைவிரி கோலம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடுப்பில் ஒரு குழந்தையுடனும், கர்ப்பப் பையில் இன்னும் இரு குழந்தைகள் (உள்ளே இருப்பது இரண்டு என முன்னரே தெரிந்துவிட்டது) என மூவர் கூட்டத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டு யாரிடமும் சொல்லாது குடிகார கணவனின் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது அவர் நிறைமாதக் கர்ப்பிணி. அவர் (ஒரு கால் ஊனமான) மாற்றுத் திறனாளி என்பதும் கூடுதல் கவலை. கடந்த பத்து நாட்களாக அவரைக் காணவில்லை. தேடுதல் வேட்டை ஒருபுறம் நடக்க, மது அரக்கன் தலைக்கேறிய கணவனோ இன்னும் மதுக்கோப்பையை கீழே போடாது இருக்கிறான்.
என் சகோதர சகோதரிகளே ஹைதராபாத் மாநகரிலோ, ஆந்திராவின் ஏதோவொரு மூலையிலோ அல்லது தாய்த் தமிழகத்தின் தெருக்களிலோ மாற்றுத்திறனாளிப் பெண்ணொருவர் கையிலும் கர்ப்பப் பையிலும் குழந்தையோடு திரிந்து கொண்டிருக்கலாம். இன்னும் சில நாட்களில் அவர் பிரசவ நாட்களை எதிர் நோக்கியுள்ளார் என்பது தாங்க முடியாத வேதனை. நாம் என்ன செய்ய முடியும்?
மது எனும் மன நோய் குடிமக்களை கூண்டோடு அழிக்கிறது என உரக்கக் கூறும் நேரமிது. மனிதனைப் பிடித்துவிட்ட மதுவெனும் பேயை விரைந்து அடித்து விரட்ட வேண்டிய காலமிது. மது எனும் அரக்கனை உடனே சூரஹம்சாரம் பண்ண வேண்டிய வேளையிது. நாம் என்ன செய்யப்போகிறோம்?
மதுவை மனிதன் குடிக்கிறானா, மனிதனை மது குடிக்கிறதா? இதை இன்னும் நாம் புரிந்து கொள்ள மறுத்தால், எதிர்காலம் புதிர்காலமாகும்... நிகழ்காலம் இருளாகிப் போகும்!

தி ஹிந்துவில்  (தமிழ்)  வெளியான எனது கட்டுரை. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக