சனி, 7 செப்டம்பர், 2013

பாலியல் வன்புணர்வும் பெண்ணின் ஆடையும் : ஒரு புள்ளி விவரம்நேற்று பெண்களின் மீதான் ஆடைக்கட்டுப்பாடு குறித்த ஒரு விவாதத்தை புதிய தலைமுறையின் நேர்பட பேசு எனும் நிகழ்வில் கண்டேன்.

கொற்றவையும், மாணவி சுசிந்த்ராவின் பேச்சும் மிகத் துல்லியமாக "என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன, எப்படிப்பட்ட ஆடைகள் அணியவேண்டும், யார் அதை முடிவு செய்ய வேண்டும்" என்பதை தெளிவுபடுத்தின. மனுஷ்யபுத்திரன் பேச்சு சரியானதாக இருந்தது அவருடைய கோவமும் மிகச்சரியானதே. சுசிந்த்ரா எந்த வகுப்பில் (முதுநிலையா/இளநிலையா/ஆய்வு மாணவியா) படிக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் பேச்சு மிகத் தெளிவான பார்வையுடன் இருந்தது. அவர் கேட்ட கேள்விகளுக்கு விடை ஆணாதிக்க சமூகச் சிந்தனையை உடைப்பதில்தான் இருக்கிறது. கொற்றவையும், மனுஷ்யபுத்திரனும் தொழில்முறைப் பேச்சாளர்கள், ஆகவே அவர்கள் பேச்சு சரியாக இருந்ததில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை. பேராசிரியர் ரேவதி கிருபாகரன் மற்றும் பானு கோம்ஸ் ஆகியோரின் பேச்சு எவ்வாறு மனுஷ்யபுத்திரனை கோபப்படுத்தியதோ, அதே உணர்வுடன் தான் நானும் இருந்தேன். பெண்ணின் ஆடை தான் ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டுகின்றன, அவைதான் பெண்களின் மீதான வன்புணர்வுகளுக்கு காரணம் என அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகள் கூறுகின்றன என பானு கோம்ஸும், ரேவதி கிருபாகரனும் ஒருமித்த குரலில் கூறினர். அதை மறுக்கவே இந்த பதிவு. தேசிய குற்ற பதிவு துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தை எனது துணைக்கு அழைத்துள்ளேன். காவல் நிலையங்களில் பதிவான முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து தேசிய குற்ற பதிவு துறை குற்றங்களுக்கான புள்ளிவிவரங்களை சேகரிக்கிறது. பெண்கள் மீது இழைக்கப்படும் குற்றங்களையும் தனியாக பதிவு செய்துள்ளது.
அதாவது பாதிக்கப்பட்ட பெண்கள், காவல் நிலையங்களுக்கு சென்று அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு தேசிய குற்ற பதிவு துறை இயங்குகிறது. தேசிய குற்ற பதிவு துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களை தற்போது பார்ப்போம்.

பெண்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதால் இந்திய தண்டனைச் சட்டப்படி
பெண்கள் மீதான குற்றதிற்கென சில சிறப்புச் சட்டங்களும், தண்டனைகளும் உள்ளன. பெண்கள் மீதான் குற்றத்தை இருவகைப்படுத்தலாம்.

ஒன்று இந்திய குற்றவியல் சட்டத்தின் (IPC) கீழுள்ள குற்றங்கள்
இவற்றில் எழு உப பிரிவுகள் உள்ளன.

1) கற்பழிப்பு (குற்றவியல் பிரிவு 376 : IPC 376 )
2) குறிப்பிட்ட காரணங்களுக்காக கடத்தல் (குற்றவியல் பிரிவு 363 -
373 IPC )
3) வரதட்சணை, வரதட்சணைக் கொலை அல்லது அவ்வாறான முயற்சிகளின் போது நிகழ்த்தப்பட்ட கொலை (குற்றவியல் பிரிவு 302/304-B IPC): இது கணவன் அல்லது உறவினர்களால் இழைக்கப்பட்ட குற்றங்கள்
4) மன மற்றும் உடல் ரீதியான சித்திரவதை (குற்றவியல் பிரிவு 498-A IPC)
5) பெண் உணர்வுகளை அல்லது பெண்ணை தாக்கும் நோக்குடன் செய்யப்படும் குற்றங்கள் (குற்றவியல் பிரிவு 354 IPC)
6) பெண்களை அல்லது பெண் உணர்வுகளை அவமதித்தல் (குற்றவியல் பிரிவு 509 IPC)
7) வெளிநாட்டு நாட்டில் இருந்து 21 வயதுக்கு உட்பட்ட பெண்களை இறக்குமதி செய்தல் (குற்றவியல் பிரிவு 366-B IPC)

மேற்கூறிய அனைத்தும் பெண்ணினம் சார்ந்த குற்றங்கள். அதாவது பெண்ணுக்கென இருக்கும் குற்றச் தடுப்பு சட்டங்கள். அதாவது ஆணைப் பெண் வீட்டார் வரதட்சினை கேட்டு துன்புறுத்துகின்றனர் என எந்த ஒரு ஆணும் புகார் அளிக்க இயலாது

இரண்டாவதாக வருவது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின் கீழே வரும் குற்றங்கள்:

இவற்றின் கீழ் வரும் அனைத்து சட்டங்களும் ஒரு குறிப்பிட்ட பாலினம் சார்த்து அல்ல. அதாவது (ஒருசில சட்டங்கள்) அனைவருக்கும் பொருந்தும்.

1) பரத்தமை தடுப்பு சட்டம் 1956, அதாவது பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக பலவந்தமாக வன்கொடுமைக்கு ஆளக்குவதை தடுக்க வந்த சட்டம் இதுவாகும்
2) வரதட்சணை தடை சட்டம், 1961
3) பெண்ணை அநாகரிகமான வகையில் காட்டுவதை தடுக்கும் சட்டம் 1986
அதாவது விளம்பரங்கள்,பத்திரிக்கைகள், ஊடகங்கள் போன்றவற்றில் பெண்ணை தவறாக காண்பித்தல் போன்ற குற்றங்களை தண்டிக்கும் சட்டம்
4) சதி (உடன்கட்டை ஏற்றுதல்) தடுப்பு சட்டம் 1987, இது இப்போது சுத்தமாக இருக்காதுன்னு நான் தப்பு கணக்கு போட்டுவிட்டேன்.

இவைகளை தவிரவும் பெண்களுக்கு பணியிடங்களில் இழைக்கப்படும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான விசாகா குழுவின் பரிந்துரைகள் போன்றவைகள் இருக்கின்றன. நான் தவற விட்ட மேலும் பல்வேறு குற்றப்பிரிவுகள் இருக்கலாம். நான் சட்டத்துறை வல்லுநர் அல்ல.

இப்போது தேசிய குற்ற பதிவு துறையின் புள்ளிவிவரங்கள்:

முதல் படத்தைப் பாருங்கள்மேலே உள்ள அட்டவணையில் இருந்து 2012 ஆம் ஆண்டில் மொத்தம் 244,270

புகார்கள் பெண்கள் மீதான குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் (106,527+ 8,233+9,038) = 123798 புகார்கள் அனைத்தும் குடும்ப உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்டவை. ஆக குடும்பமும் குடும்ப அமைப்பும் தான் பெண்ணுக்கு முதல் எதிரி. ஆனால் ரேவதியும், பானுவும் பெண்கள் குடும்பத்திற்குள் பாதுகாப்பாக இருப்பதாகவும் சொல்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல பெரும்பாலானோர் கருத்தும் அதுவே. நான் ஒரு சக ஆணாக இருந்து சொல்கிறேன். தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கையில் எந்தப்பெண்ணையும் உடனடியாக அவர்களுடன் புணர்வு செய்து விடவேண்டும் என்று எனக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. ஆனால் தெரிந்த பெண்கள் என்ற வகையில் பார்க்கும் போது நான் இதில் மாறுபடுகிறேன். ஒருவேளை நான் சரியான விதத்தில் அணுகினால் அவர்களை என் வலைக்குள் வீழ்த்திவிடலாம் என எனக்குள் எண்ணங்கள் தோன்றியுள்ளன என்பதை நான் இங்கே தெளிவு படுத்த வேண்டும். நானும் கல்லூரியில் படித்தவன் தான், பெண்களுடன் ஒருசேர பணியிடங்களில் வேலை பார்த்தவன் தான். எனக்கு தெரிந்து ஒரு முறை கூட அங்கே வன்புணர்வு நடந்தது இல்லை. ஆனால் என் கிராமத்தில், வாழிடங்களில் இது போன்ற நிறைய நடந்துள்ளன.
சுசிந்த்ரா சொன்னது போல் ஒரு பெண்ணைக் கண்டவுடன் அவள் மார்பைத் தான் ஆண் நோக்குகிறான் என்பது உண்மையே (அனைத்தும் ஆண்களும் இதில் உடன்படுவார்கள் என்பது என் எண்ணம்). ஆனால் அவன் உடனடியாக பாய்ந்து விடுவதில்லை. திட்டம் போடுகிறான். பழகுகிறான். அவள் எனக்கானவள் என நோக்கம் கொண்டு செயல்படுகிறான். மேற்கண்ட குற்றங்களை ஒப்பிட்டு அளவில் பார்த்தால் குடும்ப உறுப்பினர்களால் தான் அதிக குற்றம் நடைபெறுவதையும் பார்த்தோம். அதை தற்போது வரைபடம் ஊடாக பார்ப்போம்.

இரண்டாவது படத்தைப் பாருங்கள்


இந்த குற்றங்கள் ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டு வருகின்றன என்பதை பின்வரும் அட்டவணை காட்டுகிறது. உண்மையில் தற்போது அதிகப்படியான பெண்கள் புகார் அளிக்கின்றனர் என்பதே மிகச்சரியாக இருக்கும் என்பது என் கணிப்பு.

மூன்றாவது படத்தைப் பாருங்கள்இப்போ நாம் ரேப்புக்கு வருவோம்.

முறையற்ற உறவினர் மீதான கற்பழிப்பு (அதாவது மகள்/அம்மா/அக்கா/தங்கை/அத்தை) வழக்கில் 2012 ஆம் ஆண்டில் 392 புகார்கள் பதிவாகியுள்ளன.

2012 ஆம் ஆண்டில் பதிவான 24,923 புகார்களில் 24,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிச்சம் எட்டுப்பேர் தவறான புகார் கொடுத்து இருக்கலாம். அல்லது ஒருவர் ஒரு புகாருக்கு மேலாகவும் பதிவு செய்து இருக்கலாம். கற்பழிக்கப்பட்டவர்களில் 12.5 விழுக்காட்டினர் அல்லது 3,125


பெண்கள் 14 வயதுக்கு உட்பட்டோர். அதாவது கற்பழிக்கப்பட்ட 100 பேரில் 12.5 பேர் குழந்தைகள். இவர்கள் குழந்தைகள் அதிலும் 902 பேர் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். இவர்களுக்கு என்ன உடைக்கட்டுப்பாடு போட? அடுத்து கற்பழிக்கப்பட்டவர்களில் 23.9 சதவிதமானோர் அல்லது 5,957 பேர் 14-18 வயதுக்கு இடைப்பட்டோர். இவர்களும் சட்டப்படி குழந்தைகளே. இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி செல்லும் குழந்தைகள். அதாவது கற்பழிக்கப்பட்ட 100 பேரில் 24 பேர் கொஞ்சம் பெரிய குழந்தைகள். 125 பேர் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்.

அடுத்து குற்றவாளி பட்டியலுக்கு வருவோம்

மொத்த குற்றவாளிகளில் 98.2 விழுக்காட்டினர் அல்லது 24,923 பேரில் 24,470 குற்றவாளிகள் பெண்ணுக்கு தெரிந்தவர்கள் தான். இன்னும் விளக்கமாக பார்த்தோமானால் 393 குற்றவாளிகள் பெற்றோர் உட்பட நெருங்கிய உறவினர்கள், இவர்கள் 1.6 விழுக்காடு. பக்கத்துக்கு விட்டுக்காரங்க, தெரிஞ்சவங்க 34.7 விழுக்காட்டினர் அல்லது 8,484 பேர்கள். அதாவது மூணுல ஒருத்தன் பக்கத்துக்கு வீட்டுக்காரன்தான்.
அடுத்து சொந்தகாரர்கள் 6.5 விழுக்காட்டினர் அல்லது 1,585 பேர்கள். மற்றபடி 13652 குற்றவாளிகள் கொஞ்சம் தெரிஞ்சவங்க, அதாவது எதாவது ஒரு வகையில் பெண்ணுக்கு தெரிந்தவர்கள்தான். உடையைப் பார்த்து உடனடியாக மேகி நூடுல்ஸ் மாதிரி பாய்ந்தவர்கள் அல்ல. திட்டம் போட்டு கற்பழித்தவர்கள் தான் அதிகம்.
5-6 மணி நேரம் கல்லூரியில் இருக்கும் போது கோணிப்பைக்குள் பெண்களை உக்கார வச்சா கற்பழிப்பு குறைஞ்சுரும் சொன்னா, மிச்ச நேரம் யாரு காப்பாத்துவது? சொன்னாக் கேளுங்கப்பா வீட்டுக்குள்ளதான் அதிக கற்பழிப்பு நடக்கு. மேற்கண்ட கற்பழிப்பு குற்றங்கள் அனைத்தும் கணவனால் செய்யப்படாதவைன்னு நினைக்கிறேன், Marital Rape ன்னு எதுவும் பதிவாகிருப்பது போல எதுவும் தெரியவில்லை. முதலில் Marital Rape சட்டமாக்கபடவேண்டும். வர்மா குழு இந்த பரிந்துரையை சொன்னது. என்ன நிலைமையில் இருக்குன்னு தெரியல.

நான்காவது படத்தை பாருங்கள், மாநில வாரியாக


இன்னொரு விஷயம் மாநிலங்களில் மத்திய பிரதேசம் தான் இதுல முதல் இடம். நகரங்களில் டெல்லிக்கு முதல் இடம். மும்பைக்கு இரண்டாவது இடம். அதற்குபின் மத்திய பிரதேச மாநிலங்கள் வருது. சென்னை கொஞ்சம் பரவாயில்லை. அதே மாதிரி தமிழ்நாடும் பரவாயில்லை, குறைவுதான். தேனாறும் பாலாறும் ஓடக்கூடிய மோடியின் குஜராத்தும் இந்த பட்டியலில் வருது.

பதிவு ரொம்ப பெருசா போகுது, முடிக்கணும். ஆகவே ஆண்களின் கண்களையும் கைகளையும் கால்களையும் மற்ற எல்லாவற்றையும் அடக்க நாம் கற்றுகொடுக்க வேண்டும். பாலியல் சமத்துவம் பற்றியும் பாலியல் சுதந்திரம் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும். முதலில் பெண் என்பவள் உன்னைப்போல் ஒரு சக உயிர் என ஆணுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அதுக்கெல்லாம் பெரியார் சொன்னவற்றை அனைத்தையும் சட்டமாக்கவேண்டும். கல்விமுறையில் மாற்றவேண்டும், குடும்ப, சமுக அமைப்பு முறையில் மாற்றம் வேண்டும். ஊடகங்களில் குறிப்பாக திரைப்படங்கள் பெண்ணை போகப் பொருளாக காட்டுவதை நிறுத்த வேண்டும். இப்படி நிறைய மாற்றம் வேண்டும் அப்போதுதான் இந்த குற்றங்கள் நிற்கும்.

அடுத்தபடி வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மாணவிகள் கட்டுப்பாட்டோடுதான் உடை அணிகிறார்கள் எனச் சொன்னார்கள், எனக்குத் தெரிந்து முழுக்க முழுக்க தவறு, சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் நேரில் பார்த்தவன் நான். எனக்கு ஒருமுறை பாடம் எடுக்க வந்த ஒரு பேராசிரியை முழங்கால்வரை தெரியும் ஸ்கர்ட்(Skirt) போட்டு தான் பாடம் எடுக்கவே வந்தார். பேராசிரியையே இவ்வாறு என்றால் மாணவிகள் எவ்வாறு என்று நீங்கள் கற்பனை பண்ணிக்கொள்ளலாம்.

ஆக சிந்தனை மாற்றம் தேவை. மாறுங்கள் ஆண்களே. பெரியாரைப் படியுங்கள், தன்னாலே மாறிவிடலாம்.

ஆகமொத்தம் கற்பழிப்பு தெரியாதவனால் கொஞ்சம் தான் நடக்கின்றன. ஒட்டுமொத்த கற்பழிப்பும் தெரிஞ்சவர்களால் தான் நடக்கின்றன என்பது மேற்கண்ட புள்ளிவிவரங்கள் மூலம் வெட்ட வெளிச்சம்.

இது தவிர சொந்தக்காரன், மன்னிச்சு விட்ருவோம், அல்லது புகார் கொடுக்காமல் நிறைய பேர் இருக்காங்க என்பதயும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் தலித் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எவிடென்ஸ் கதிரை கேட்டால் மிகத் தெளிவாக சொல்வார்.

2 கருத்துகள்:

  1. நல்ல பதிவு..புள்ளிவிவரம்.. சட்டங்கள்,நகைச்சுவை கலந்து எழுதிய விதம் சிறப்பு..

    பதிலளிநீக்கு