சனி, 22 ஜூன், 2013

மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டவை?

ஆத்திகன்: மதங்கள் கடவுள்களால் உண்டாக்கப்பட்டவை
பகுத்தறிவுவாதி: அல்ல; அவை மனிதர்களால் உண்டாகியவை.
பகுத்தறிவுவாதி: மதங்கள் எத்தனை உண்டு?
ஆத்திகன்: பல மதங்கள் உண்டு
பகுத்தறிவுவாதி: உதாரணமாகச் சில சொல்லும்.
ஆத்திகன்: எடுத்துக்காட்டாக இந்து மதம், புத்தமதம், கிருத்துவ மதம்,
முகமது மதம், சீக் மதம், பார்சி மதம், சவுராட்டிர மதம் முதலியவைகளும்
இவற்றுள் பல உட்பிரிவுகளும் உண்டு.
பகுத்தறிவுவாதி: கடவுள்கள் எத்தனை உண்டு?
ஆத்திகன்: ஒரே கடவுள்தான் உண்டு
பகுத்தறிவுவாதி: இவ்வளவு மதங்களும் யாருக்காக உண்டாக்கப்பட்டவை
ஆத்திகன்: மனித வர்க்கத்துக்காகத்தான்.
பகுத்தறிவுவாதி: மதத்தால் ஏற்படும் பயன் என்ன?
ஆத்திகன்: மனிதன். கடவுளை அறியவும், கடவுளுக்கும், தனக்கும் சம்பந்தம்
ஏற்படுத்திக் கொள்ளவும், ஆத்ம ஞானம் பெறவும் கடவுள் கருணைக்குப்
பாத்திரனாகவும் பயன்படுவதாகும்.
பகுத்தறிவுவாதி: அப்படியானால் ஒரே கடவுள் மனித வர்க்கத்துக்கு இத்தனை
மதங்களை ஏற்படுத்துவானேன்?
ஆத்திகன்: அது மிகவும் சிரமமான கேள்வியாக இருக் கிறது. பிறகு பதில் சொல்லுகிறேன்.
பகுத்தறிவுவாதி: அதுதான் போகட்டும். இந்துமதம் என்பது என்ன? அது கடவுளால்
எப்படி ஏற்படுத்தப்பட்டது.
ஆத்திகன்: இந்து மதம் என்றால் வேதமதம் என்றும் பெயர்.
பகுத்தறிவுவாதி: வேதம் என்றால் என்ன?
ஆத்திகன்: ரிக், யசுர், சாமம், அதர்வணம் என 4 வேதம் உண்டு. அவ்வேத
முறைதான் இந்து மதம் என்பது.
பகுத்தறிவுவாதி: இவ்வேதங்கள் யாரால் ஏற்படுத்தப் பட்டவை?
ஆத்திகன்: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை
பகுத்தறிவுவாதி: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்வை என்று யார்
சொன்னார்கள்?
ஆத்திகன்: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை என்று வேதம் சொல்லுகிறது.
வேதம் கடவுள் வாக்கு என்று வேதம் சொல்லுகிறது.
பகுத்தறிவுவாதி: இதற்கு ஏதாவது சாட்சியோ ஆதாரமோ உண்டா?
ஆத்திகன்: வேதத்துக்கும், கடவுள் வாக்குக்கும் ஆதார மோ, சாட்சியோ கேட்பது
என்றால் அது பாபமான காரியமேயாகும்.
பகுத்தறிவுவாதி: அது பாபமாக இருக்கலாம். ஆனால் ஆதாரம் ருசு இல்லாமல்
ஒன்றை ஒருவர் நம்புவது என்றால் அது குற்றமாகாதா?
ஆத்திகன்: இதுவும் கடினமான பிரச்சினையாகத்தான் இருக்கின்றது.
பெரியவர்களைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.
பகுத்தறிவுவாதி: புத்தமதம் என்றால் என்ன?
ஆத்திகன்: புத்தர் என்கிறவர் காலத்தில் ஏற்பட்டது.
பகுத்தறிவுவாதி: அதற்கு என்ன ஆதாரம்?
ஆத்திகன்: புத்தர் என்கிறவர் சொன்னதாகச் சொல்லப் படும் வாக்குகள்தான்.
பகுத்தறிவுவாதி: புத்தர்தான் சொன்னார் என்பதற்கு ஆதாரம் என்ன?
ஆத்திகன்: புத்தர் சங்கதி சரித்திரத்தில் பட்டதாய் இருக் கிறது.
அன்றியும் அதில் இன்றைய நிலையில் மற்ற மதங் களைப் போலக் கடவுள், கடவுள்
வாக்கு, பல அற்புதங்கள் முதலியவை இல்லை என்பதோடு ஆலோசனைக்கும்,
அறிவுக்கும் பொருத்தமானதை எடுத்துக் கொண்டு மற்றவைகளைத் தள்ளி விடுவதில்
பாவமோ, குற்றமோ, கடவுள் தண்டனையோ இல்லை. ஆகையால், அதற்கு ஆதாரம் தேடிக்
கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
ப-தி: சரி மிக நல்ல மாதிரி சமாதானம் சொன்னீர்கள். அப்படியானால்
அம்மதத்தைப் பற்றி நமக்குக் கவலை இல்லை.
ப-தி: கிருத்துவ மதம் என்பது என்ன?
ஆ-ன்: கிருத்துவ மதம் என்பது கிருத்துவால் சொல்லப்பட்ட கொள்கை.
ப-தி: அது எது?
ஆ-ன்: பைபிள்
ப-தி: கிருத்து என்பவர் யார்?
ஆ-ன்: கிருத்து கடவுள் குமாரர்.
ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?
ஆ-ன்: கிருத்து சொல்லி இருக்கிறார்
ப-தி: ஒருவர் தன்னை இன்னான் என்று நிரூபிக்க அவரது வாக்கு மூலமே
போதுமா?
ஆ-ன்: ஏன் போதாது?
ப-தி: அப்படியானால் இப்போது ஒருவன் வந்து உம்மிடம் தான் கடவுள் என்று
சொன்னால் ஒப்புக் கொள்ளுவீரா?
ஆ-ன்: இதுவும் கடினமான பிரச்சினைதான் பெரியவர் களைக் கேட்க வேண்டும்!
முகமதிய மதம்
ப-தி: முகமதிய மதம் என்றால் என்ன?
ஆ-ன்: முகமது நபி என்பவரால் சொல்லப்பட்ட கொள்கைகள்.
ப-தி: அதற்கு என்ன ஆதாரம்?
ஆ-ன்: குரான் என்னும் வாக்கியம்.
ப-தி: அது யாரால் சொல்லப்பட்டது?
ஆ-ன்: கடவுள்களால் முகம்மது நபி அவர்கள் மூலம் வெளியாக்கப்பட்டது.
ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?
ஆ-ன்: நபி அவர்கள் சொன்னார்.
ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?
ஆ-ன்: குரான் வாக்கியங்களில் இருக்கிறதுடன், வேறுபல
சாட்சியங்களுமிருக்கின்றன.
ப-தி: வேறு பல சாட்சியங்கள் என்பது எவை?
ஆ-ன்: அந்தக் காலத்தில் நபி அவர்களுடன் இருந்த பல பெரியவர்கள் வாக்கு
இருக்கிறது.
ப-தி: அவை உண்மை என்பது ஆதாரம் என்ன?
ஆ-ன்: அந்தப்படி இருக்கும் ஆதாரங்களை நம்ப வேண்டியது தான்.
ப-தி: மற்ற மதங்களும் இதுபோல் தானே?
ஆ-ன்: ஆம்!
ப-தி: அனேகமாக கடவுள் வாக்கு. கடவுளால் அனுப்பப் பட்டவர்கள். கடவுள்
அவதாரங்கள் என்பவர்கள் அவர் களது வாக்குகள் சம்பந்தப்பட்ட மதங்கள் ஆகிய
எல்லோரையும், ஒரே கடவுள் சொன்னார் சிருட்டித்தார் என்பதும் நியாயமாகுமா?
ஆதலால் இதுமாதிரி மதம் என்பது வியாபாரம் மதகர்த்தர் வேதம் புராணம் என்பவை
வியாபாரச்சரக்குகள் என்பது பகுத்தறிவுக்காரர் களுக்கும் படும் விடயம்.
இது ஒரு சமயம் தப்பாக இருந்தாலும் இருக்கலாம்.
ஆ-ன்: ஆம் எல்லாம் இப்படிப்பட்டதுதான்.
ப-தி: அப்படியிருக்க இவ்வளவு மதங்களையும் ஒரே கடவுள் உண்டாக்கி இருப்பார்
என்று நீரே நம்புகிறீரா? அதனால் தான் இவை ஒவ்வொரு
சீர்திருத்தக்காரர்களால் அறிவாளி களால் முன்பின் ஆராய்ந்து பார்த்து மனித
சமூகத்துக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற கவலை கொண்டவர் களால்
(மனிதர்களால்) உண்டாக்கப்பட்டது என்று எண்ண வேண்டியிருக்கிறது.
அப்படிக்கில்லாமல் ஒரே கடவுள் இருந்து அவரே இவ்வளவு மதத்துக்கும்,
மதகர்த்தருக்கும் ஆதார புருடர் என்றால் அப்போது கடவுளின் மேன்மைக் குணம்
பாதிக்கப்படவில்லையா? யாரோ சில மனிதர் களுக்கு மேன்மை கொடுப்பதற்காகக்
கடவுளை முட்டா ளாக்குவதும் பல கடவுள்களைச் சிருட்டிப்பதும் பல வேதங்
களைச் சிருட்டிப்பதும் சரியா?
நாம் இருவரும் இவ்விசயங்களில் ஒரே கருத்துடையவர் களாகி இவை எல்லாம் சற்று
நேரத்துக்கு உண்மை என்றே ஒப்புக் கொள்வோம். அதாவது இந்துமதம் கடவுளால்
உண்டாக்கப்பட்டது என்பதையும், வேதம் கடவுள் வாக்கு என்பதையும், முகமது
நபி கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதையும், குரானையும் மற்ற மதத்தையும்
ஒப்புக் கொள்வோம். ஆனால் அவை எல்லாம் இன்று ஒன்றாய் இல்லாமல் வேறு
அபிப்பிராயங்களாகவும் சில முரணானவையாகவும் ஒரு மத தத்துவத்துக்கும்
மற்றத் தலைவருக்கும் மாறாக இருப்பானேன்? ஒன்றுக்கொன்று இன்றைய
அனுபவத்தில் அதிருப்தி: வெறுப்பு துவேசம் உடையவைகளாக இருப்பானேன்?
ஆ-ன்: இதுவும் சிரமமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. பெரியவர்களை கேட்க
வேண்டும்.
ப-தி: சாவகாசமாய்ப் பெரியவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால்
இன்று நாம் எதை நம்பி எப்படி நடந்து கொள்வது?
ஆ-ன்: இவை எல்லாம் உண்மை என்றோ அல்லது உண் மை அல்லது என்றோ எப்படியோ
இருக்கட்டும். அதற்கு ஆக நாம் கவலைப்பட வேண்டா. உலகில் மனிதன் உயி
ருள்ளவரை நல்லது எண்ணு நல்லது செய் அவ்வளவு தான்.
ப-தி: நல்லது எது? தீயது எது? என்பதற்கு அளவு கருவி என்ன?
ஆ-ன்: இது மிகவும் கடினமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. ஆனாலும்
பெரியவர்கள் நடந்து காட்டியது, சொல்லியிருப்பது இவைகளைக் கொண்டு தெரிந்து
கொள்ள வேண்டியதுதான்.
ப-தி: பெரியவர் யார் என்பதற்கு அளவு கருவி என்ன? ஒருவர் ஒருவரைப்
பெரியவர் என்றால் மற்றொருவர் அவரை ஒப்புக் கொள்வதில்லை. அவருக்கு மாறாக
அல்லது வேறொன்றைச் சொன்னவர்களைப் பெரியவர் என்கிறான் இதற்கு ஒரு பரீட்சை
குறிப்பு வேண்டுமே?
ஆ-ன்: இதுவும் கடினமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. இதற்கெல்லாம்
உம்முடைய சமாதானம்தான் என்ன சொல்லு பார்ப்போம்.
ப-தி: என் சமாதானம் என்ன? நான்தான் மதத்துவேசி. பார்ப்பனத்துவேசி,
நாத்திகன், சுயமரியாதைக்காரன் என்றெல்லாம் பெயர் வாங்கினவனாய் விட்டேனே,
என் பேச்சை யார் கேட்பார்கள். நீர் ஆத்திகராயிற்றே. உமக்குத்
தெரியுமென்றும், தெரியாவிட்டாலும் உம்முடைய உள்ளத் தில் சதா
குடிகொண்டிருக்கிற கடவுள் உணர்த்துவார் என்றும் கருதி உண்மையான
சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காகக் கேட்டேன். நல்ல வேளையாக நீர்
பதில் சொல்லாவிட்டாலும் என்னை வையாமல் பெரியவர்களைக் கேட்டுச்
சொல்லுகிறேன் என்று சொன் னீரே. அதுவே எனக்கு மிகவும் திருப்தி
ஆத்திகர்களில் இப்படிப்பட்டவர்கள் அருமை மிக மிக அருமை: சந்தேகம்
கேட்டால் அடி, உதை, நாத்திகன், பிராமண துவேசி, ஆரிய துவேசி என்றெல்லாம்
வெறி பிடித்தவர்கள் போல் ஆடுவார்கள். ஆதலால், உம்மைப் பற்றிக் கூட எனக்கு
சந்தேகம்தான்.
ஆ-ன்: என்ன சந்தேகம்?
ப-தி: நீர் ஆத்திகரோ என்னவோ என்று.
ஆ-ன்: நான் உண்மையில் ஆத்திகன்தான். அதாவது ஒரு கடவுள் இருப்பார் என்று
நம்புகிறவன். ஆனால் இத்தனை மதங்களையும், மத கர்த்தாக்களையும், அந்தந்த
மதவேதங்களையும், அவையெல்லாம் கடவுளால் சொல்லப் பட்டவை என்பதிலும்
அவ்வேதக்கதைகள், புராணங்கள் ஆகியவை உண்மை என்பவைகளையும் பற்றி அவ
நம்பிக்கை கொண்டவன்தான்.
ப-தி: அப்படியானால் நீர். இருப்பார் என்ற கடவுள் நம்பிக்கையை யார் எந்த
ஆத்திகர் இலட்சியம் செய்வார்? ஒரு குறிப்பிட்ட கடவுள் அல்லது ஒரு
குறிப்பிட்ட மதகர்த்தா அல்லது ஒரு குறிப்பிட்ட மதம் என்பவைகளை ஏற்றுக்
கொள்ளாதவர் நம்பாதவர் எல்லோரும் மற்ற மதக் காரனுக்கு நாத்திகனே -
நம்பிக்கை யற்றவனே யாவான் நாத்திகம் என்பதும் நம்பிக்கையற்றது என்பதாக
எல்லாம் ஆத்திகர்களுக்கும் ஒரே பொருள்தான்.
ஆ-ன்: யாரோ எப்படியோ போகட்டும் எனக்கென்ன? என் புத்திக்கு சரி என்று
பட்டதை செய்து விட்டு செத்துப் போகிறேன்.
ப-தி: ஏன் சாகிறீர். உயிருடன்தான் இருமே உமக்கு சரி என்று பட்டதைத்தான்
செய்யுமே எனக்கென்ன கவலை? எப்படி இருந்தாலும் ஆத்திகர்கள் வைது கொண்டு
தானிருப்பார்கள்.
---------------- தந்தைபெரியார் -- ”குடிஅரசு”, 20.3.1938

எவரும் சிந்திப்பதில்லை

கோவில்களில் கருவறைக்குள் மூல விக்கிரகம் என்று கூறி பொம்மைகளை(கடவுள்களாம்!) வைத்து ஏமாற்றும் வேலை இந்த 2011ஆம் ஆண்டிலும் தொடர்கிறதேஎன்பதை எண்ணும்போது ரத்தம் கொதிக்கிறது.

கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்பதை ஒப்புக் கொள்வதற்குத் திறந்த மனமும்,பகுத்தறிவும், துணிவும் தேவையாகும்.
ஆத்திகர்கள் என்று சொல்லப்படுபவர்கள்கூட நடைமுறையில் எந்தக் கடவுளிடம்எந்தப் பொறுப்பை ஒப்படைத்து நிம்மதியாகத் தூங்கச் செல்கின்றனர்? 

எல்லாவற்றையும் இவர்களே செய்துவிட்டு, தேவையில்லாமல் கடவுள் கருணை என்று 
நம்பித் தொலைக்கின்றனர். நல்லது நடந்து விட்டால் பார்த்தீர்களா?

கடவுள் சக்தி என்று கம்பீரமாகக் குரல் கொடுப்பார்கள். நல்லது நடக்காமல் வேறுவிதமாக நடந்தால், அப்பொழுது என்ன சொல்லுவார்கள் தெரியுமா?

கிரகம் சரியில்லை, கோவிலுக்கு 30 நாள் எண்ணெய் ஊற்றி விளக்குப் பூஜை செய்ய
வேண்டும். நேர்த்திக் கடன் கழிக்க வேண்டும் என்று நினைப்பார்களே தவிரகடவுளைக் கும்பிட்டோமே, ஒன்றும் நடக்கவில்லையே - இவ்வளவு தான் கடவுள்சக்தியோ என்று எவரும் சிந்திப்பதில்லை

நாகரிகம்

இது இக்காலத்து இளைஞர் சமுகம் அறிந்து, புரிந்து, தெளிந்து பின்பற்ற வேண்டிய ஒரு விஷயம் .

ஒரு மூன்று நாட்களுக்கு முன்னர் வாடகை மகிழுந்தில் (taxi) செல்லும் போது, நானும் ஓட்டுனரும் பேசிக்கொண்டிருந்தோம் , அப்போது ஓட்டுனர் சாலையோர உணவகங்களில் மக்கள் கையினால் உணவு உண்டு கொண்டிருப்பதை பார்த்த அவர், நீங்கள் ஏன் கையினால் உணவருந்துகிறீர்கள் ? ஸ்பூன் வைத்து சாப்பிடுவதே நாகரிகமானது என்று கூறினார். நான் அவரிடம் பதிலுக்கு " இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று இந்த உலகிற்கே நாகரிகம் கற்று கொடுத்தவர்கள் நாங்கள். நாகரிகம் என்பது உன் உடையிலோ, நடையிலோ , உணவருந்தும் முறையிலோ இல்லை, அவை எல்லாம் நம் வசதிக்காக (comfortablity) மட்டுமே, நாகரிகம் என்பது நம்முடைய செயலில், பேச்சில், எண்ணங்களில் இருக்கிறது என்றேன்.

அவர் இதைகேட்டு ஆம் என்று ஒப்புக்கொண்டார், அவர் சொன்னார் நாங்கள் ஸ்பூனை பயன்படுத்தி பழகி கொண்டோம். நான் "நாங்கள் கையினால் உணவு உண்டு பழகிவிட்டோம்" என்று கூறி இவையெல்லாம் நம்முடைய பழக்கத்தில் வருவது ஒழிய நாகரிகம் எனப்படாது என்று பதிலுரைத்தேன்.

நடந்த இடம் : சிங்கப்பூர்

ஓட்டுனர் : சிங்கப்பூர் சீனர்

நான் : தமிழன்

பெரியார் என் ஆழ்மனத்தின் அடிக்குரல்


எனக்கு வயது இருபத்தி ஏழு. சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒரு பொதுவான சக இளைஞனை போன்று திரைப்படங்களில் காட்டுவதையும், கிரிக்கெட்டையும் பார்த்துகொண்டு தான் இருந்தேன். பின்பு தான் பெரியார் எனக்கு அறிமுகம் ஆனார். அதன் பின்னர் நான் கேள்வி கேட்க ஆரம்பித்தேன்.  பகுத்தறியும் சிந்தனை என் மனதில் ஆழமாக புகுந்தது. என்னை நானே கேள்வி கேட்டு சீர்தூக்கி பார்க்க ஆரம்பித்தேன்.  இந்த சமுகத்தின் மீதான என் பார்வை மாற ஆரம்பித்தது. நானும் மாறினேன்.இன்னும் பெரியாரை ஆழமாக , நுட்பமாக படிக்க, கேட்க ஆரம்பித்தேன். அவரை படிக்கும் போதும், கேட்கும் போதும் அந்த நினைவில் இருந்து வெளிவர பல மணிநேரங்கள் ஆகும், ஒரு சிலநேரகளில், அந்த நினைவுகளில் இருந்து வெளிவராமலே தூங்கி விடுவேன். இப்போது மீண்டும் ஒருமுறை பெரியாரை பற்றி கேட்டேன். தூங்கி எழுந்து வேலைக்கு செல்ல இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. தேர்வுக்கு படிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. ஆனாலும் பெரியார் என்னை தூங்க செல்ல அனுமதிக்கவில்லை. அவருடைய சிந்தனைகள் என்னை தூங்கவிட வில்லை. சமுகத்தின் மீது கோபம் அதிகரிக்கிறது. எனக்கு உள்ள பொறுப்பு அதிகரிக்கிறது, என் கண் முன்னே உள்ள வேலைப்பழுளு கூடுகிறது.

ஆம் அவர்தான் பெரியார். பெரியார் என் ஆழ்மனத்தின் அடிக்குரல். என் சகாக்களே, நண்பர்களே பெரியாரை படிங்கள். உங்களையும் தூங்க விட மாட்டார் அவர். நான் இப்போது எப்படி தூங்க போகிறேன் என்று யோசித்துக் கொண்டே எழுதுகிறேன் இதை.

பெரியார் ஏன் முதல்வர் ஆகவில்லை? சீமான் கண்டு பிடிப்பு


பெரியாரைத் தேடி இரண்டு முறை தமிழ் நாட்டு முதல் அமைச்சர் பதவி வந்தது, ஆனால் தந்தை பெரியார் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

# ஏனெனில் தந்தை பெரியார் பச்சை தமிழர் இல்லையாம். சீமானின் புதிய கண்டுபிடிப்பு.. 
அட மடையா, பதவியில் இருப்பவன் அயோக்கியன் ஆக மாறிவிடுவான் அப்படின்னு தானே பெரியார் முதல் அமைச்சர் ஆகல.. பெரியாருடைய எந்த பேச்சில் இருந்து இப்படி ஒரு கருத்தை கண்டுபிடித்தாய். என் அருமை தலைவா சீமான் அவர்களே.

# திருக்குறளுக்கு பரிமேழகர் உரை எழுதி இருக்கார், நம்ம கலைஞர் உரை எழுதி இருக்காக, நம்ம சாலமன் பாப்பையா கூட உரை எழுதி இருக்காக, அய்யா மு.வ எழுதி இருக்காக. அவரவர் அவரருக்கு தெரிஞ்ச அர்த்தத்தை பொருளாக எழுதி இருக்காங்க, திருவள்ளுவர் திரும்பி வந்து கேக்கவா போறாரு ஏன்டா தப்பா உரை எழுதினாய் என்று.

# இன்னைக்கு நம்ம அண்ணன் தலைவர் சீமான் பெரியாருக்கு உரை எழுதுறார்.. நல்லது, எழுதுங்க, பெரியாரை படிங்க. என்ன ஒரே ஒரு வேறுபாடு வள்ளுவனுக்கும் பெரியாருக்கும் . வள்ளுவர் கொஞ்சம் கஷ்டமான வார்த்தைகளில் குறள் எழுதினார். ஆனால் நம்ம பெரியார் , எல்லாருக்கும் புரியற மாதிரி, உச்சி மண்டையில் ஏறுகிற மாதிரி , நமக்கு புரியுற மாதிரி எழுதி /பேசி தொலைசுட்டார் .

# நல்லவன் எல்லாம் அரசியலுக்கு வாங்கப்பா. அயோக்கியன் ஒளிஞ்சுக்கோ . இதுதானே பெரியார் சொன்னது. அயோக்கியபயகள தோலை உரிச்சிக் காட்டியவர் அல்லவரல்லவா பெரியார். போய் பிள்ளை குட்டி இருந்தா படிக்க வையுங்கப்பா ...

# கலைஞர் மேல் கடுப்பு இருந்தா நேரடியா திட்டு. கேள்வி கேளு, நானும் உன் பின்னாடி நிக்கிறேன். நான்கூட கலைஞர் ரொம்ப நல்லவர் ன்னு சொல்லல . தப்பு பண்ணி இருக்காரு, பெரியாரை பயன்படுத்தி இருக்காரு. அதை எதிர்த்து கேள்வி கேளு. அதை விட்டுட்டு புதுசு புதுசா பெரியாருக்கு உரை எழுதுற வேலையை விட்டுருங்க தலைவா. பெரியார் எங்களுக்கு பகுத்தறிவை ஊட்டிட்டுத்தான் செத்து போயிருக்கார்

சாவேஸ்

ஒரு மனுஷன் இறந்தால், அவரை தெரிந்த அனைவரும் இரங்கல் தெரிவிப்பார்கள். துக்கம் விசாரிப்பார்கள். அதுவும் ஒரு நாட்டின் பிரதமரோ, குடியரசு தலைவரோ இறந்து விட்டால், மற்ற நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவிப்பார்கள். அவருடைய சாதனையை,ஆட்சியை புகழ்வார்கள்

அடுத்த நிலையில் இருக்கும் தலைவர் , தொலைக்காட்சியில் தோன்றி மக்களை அமைதியாக இருக்க சொல்லுவார். அந்த நாட்டின் பங்கு சந்தை வீழ்ச்சி அடையும். மற்ற நாடுகளின் பங்கு சந்தைகள் கூட வீழ்ச்சி அடையலாம். ஆனால் வெனிசுலா அதிபர் சாவோஸ் இறந்த போது வளரும் நாடுகளின் பங்கு சந்தை உட்பட அனைத்து பங்கு சந்தைகளும் ஏற்றம் கண்டன , ஏன்?

See few reactions below to chavez death..

Is Post-Chavez Venezuela an Opportunity for U.S.?

Emerging Stocks Rise as Chavez Death Sinks Venezuela Debt

U.S. President Barack Obama said his government seeks a “constructive relationship with the Venezuelan government.”

he may need to soften his criticism of private corporations after he wins, Eduardo Porcarelli, executive director of investment promotion council Conapri, said.
“Reactivating dialog with Venezuela’s private sector will be a necessity,” Porcarelli said. “Business development must be made viable in the country,

business leaders such as Ronald Pantin, chief executive of Bogota-based oil producer Pacific Rubiales Energy Corp. (PRE), expressed optimism that relations with Venezuela eventually will improve. “Things will change,” Pantin, who was born in Venezuela, said in an interview before Chavez’s death. “Twelve years ago nobody invested in Colombia and now it’s a favorite.”


அப்படி என்ன செய்தார் சாவோஸ் , மற்ற நாடுகளும், தனியார் வங்கிகளும் ஒரு நாட்டின் தலைவர் இறந்த போது ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும் ?

1) தனியாரிடம் இருந்த 1000 க்கும் மேற்பட்ட எண்ணைக்கிணறுகளை நாட்டுடமை ஆக்கினார் 

2) Chevron (அமெரிக்க எண்ணெய் நிறுவனம்), British Petroleum(இங்கிலாந்து எண்ணெய் நிறுவனம்), Total (பிரான்ஸ் எண்ணெய் நிறுவனம்) உட்பட பல தனியார் எண்ணெய் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த எண்ணெய் சுரங்கங்களை அரசுடைமை ஆக்கினார் 

3) வெனிசுலா நாட்டின் வறுமையை குறைத்தார்.

4) நாட்டு மக்களுக்கு நல்ல உணவும் வீடும் கிடைக்க மானியங்கள் கொடுத்தார்

5) கல்வியையும், மருத்துவ வசதிகளையும் பெருக்கினார், மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வண்ணம் செய்தார் 

6)மின் மற்றும் மின்னணு நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்கினார்

7) Bank of Venezuela வை நாட்டுடைமை ஆக்கினார்  சிமென்ட் நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்கினார்

8) நாட்டின் பெரிய ஈரும்பு-எக்கு (Steel company) நிறுவனத்தை நாட்டுடைமை ஆக்கினார் 

9) ஐநா சபையில் பேசும்போது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை பேய் (டெவில்) என்று கூறினார் 

10) வெனிசுலாவில் இருந்த அமெரிக்க தூதரை மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வெளியேற சொன்னார்

11) தன்னை கொல்ல அமெரிக்க அரசாங்கம் செய்த சதி வேலைகளை சதிவேலைகளையும் முறியடித்ததுடன், ஆதாரத்துடன் நிருபித்தார்

12) பன்னாட்டு நிதியம் (International Monetary Fund) என்ற அமைப்பின் ஏக போக கட்டுப்பாட்டை உடைக்க அர்ஜென்டினா,பொலிவியா பிரேசில் போன்ற நாடுகளுடன் இணைந்து Bank of the South என்ற வங்கியை, IMF க்கு மாற்றாக நிறுவினார் .

இந்த வேலைகளை செய்த காரணத்தினால், அமெரிக்கா உட்பட்ட பல வல்லாதிக்க நாடுகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்துகின்றன.

மெச்சுவேன் உங்க கடவுள் பக்தியை

பத்திரிக்கை செய்தி : கரூர் அருகே உள்ள ஸ்ரீசதாசிவ பிரேமிந்திராள் ஜீவ சமாதியில், எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

#அட மடையர்களே ... எச்சில் இலையில் உருண்டா சட்டையில் (சட்டை போடவில்லையெனில் உடம்பு) அழுக்கு (சோறு) மட்டும் தான் ஒட்டிக்கும். இதை தவிர என்னடா நடந்துவிடும். எந்த பகவானாவது கொஞ்சம் நேரில் வந்து எனக்கு விளக்கம் சொல்ல வருவாரா? 

#கடவுளே  நீ எப்படி நேரில் வருவாய்? (இருந்தால்தானே வருவதற்கு), நீ வராவிட்டாலும் பரவா இல்லை, தயவு செய்து உன் பக்த கோடிகளை அனுப்ப வேண்டாம். பக்த கோடிகள் நம்பிக்கை,தும்பிக்கை ன்னு சொல்லுவாங்க...

#எச்சில் இலையில் உருளுவது சரிதான். தார், கீரிஸ் போன்ற அழுக்கு ஒட்டுனா போகாத பொருட்கள் மீது உருளுங்கடா, அப்போ நான் மெச்சுவேன் உங்க கடவுள் பக்தியை....

யார் செயல்?

உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?

நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?

குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?

எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?

எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?

அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?

அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?

முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?

ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?

மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?

நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?

எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?

அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?

பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?

சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?

தந்தை பெரியார்

எண்ணிப்பார் கோபியாமல்!


சரசுவதி பூசை ஆயுத பூசை நமக்குப் பலன் தந்ததா? எண்ணிப்பார் கோபியாமல்!

எலக்ட்ரிக், இரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து, ஆப்ரேஷன் ஆயுதங்கள்

தூரதிருஷ்டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன் டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம் ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு இயந்தரம், இரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை உச்சி ஏற மெஷின், சந்திர மண்டலம் வரைபோக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின், இன்னும் எண்ணற்ற புதிய, பயன் தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகிய வைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும், கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பவர் எல்லாம் ஆயுத பூசை சரசுவதி பூசை கொண்டாடாதவர்கள்!

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடாகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுத பூசை செய்தவர்களல்லர் நவராத்திரி கொண்டாடினவர்களல்லர்

நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே சரசுவதி பூசை ஆயுத பூசை இல்லை! ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

ஓலைக் குடிசையும் கலப்பையும் ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண்குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள். தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை. கற்பூரம்கூட நீ செய்ததில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூசை அறியாதவன் கொடுத்துதான் நீ கொண்டாடுகிறாய்.

ஒருகணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்குத் தந்தோம், என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை. அப்படித்தான் கொஞ்சம் நெஞ்சை உறுத்தும். மிரளாமல் யோசி. உன்னையும் அறியாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சு இயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!

மேனாட்டான் கண்டுபிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவிக் கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அக மகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த இரயிலில் ஏறிக் கொண்டு உன் பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!

அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாட வைத்து மகிழ்கிறாயே!

எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்.

சரசுவதி பூசை - விமரிசையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அது நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட் அல்லது இராய்ட்டர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில்லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை. சிபி, சினிமா பார்த்ததில்லை! தருமராசன், தந்திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம், அவர்கள்

சரஸ்வதி பூசை ஆயுத பூசை செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே இராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்கரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கிறோம். இது முறைதானா?

பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த சரசுவதி பூசை ஆயுத பூசை

நமக்குப் பலன் தரவில்லையே, அந்தப் பூசைகள் செய்தறியாதவர், நாம். ஆச்சரியப்படும் படியான அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருடர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக்கும். அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும்.

யோசித்துப் பார் - அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

-------------------------------- பேரறிஞர் அண்னா 'திராவிட நாடு', 26.10.194

கடவுள் குழப்பம்

கடவுள் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்ட மனிதன் கடவுள் நம்பிக்கைக்காரர்களில் ஒருவருமே இல்லை. ஒரு வஸ்து இருந்தால்தானே அது இன்னது என்று புரிந்து கொள்ள முடியும். அது இல்லாததனாலேயே கடவுள் நம்பிக்கைக்காரர்கள் ஆளுக்கு ஒருவிதமாய் கடவுளைப் பற்றி உளறிக்கொட்ட வேண்டியிருக்கிறது. அதற்கு பெயரும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் எண்ணிக்கையும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் உருவமும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் குணமும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் செய்கையும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த இலட்சணத்தில் கடவுளைப் பற்றிப் பேசும் பெரிய அறிவாளிகள் பெயரில்லான் - உருவமில்லான் - குணமில்லான் என்பதாக உண்மையிலேயே இல்லானை இல்லான் - இல்லான் - இல்லான் என்றே அடுக்கிக் கொண்டே போகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகிறவர்களே பல பெயர், பல உருவம், பல குணம், பல எண்ணிக்கை முதலியவற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம்விட கடவுள் நம்பிக்கைக்காரர்களிடம் இருக்கும் ஒரு அதிசய குணம் என்னவென்றால், எந்த கடவுளைக் கும்பிடுகிறவருக்கும் கடவுள்கள் யார்? தேவர்கள் யார்? இவர்களுக்கு ஒருவருக்கொருவருள்ள வித்தியாசம் என்ன என்பதில் ஒரு சிறு அறிவும் கிடையாது. மற்றும் ஒரு அதிசயம் - கடவுள் என்பதற்கு ஒரு சொல் வடமொழியிலும் கிடையாது, தமிழிலும் கிடையாது.

தமிழில் சொல்லப்படும் கடவுள் என்கின்ற சொல்லுக்கு உண்டான கருத்துக்கு தமிழிலும் ஒரு சொல் காணப்படுவதற்கு இல்லை

------------------தந்தைபெரியார் - "விடுதலை" 7.10.1962

பகத் சிங் - சில குறிப்புகள்

வெள்ளையரின் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் முதல் கட்டமே. இறுதிப்போராட்டம் சுரண்டலுக்கு எதிராக நடக்க வேண்டியுள்ளது.
சமூக, பொருளாதார சுதந்தரமில்லாமல் கிடைக்கும் வெறும் அரசியல் சுதந்தரம், ஒரு சிலர் பலரைச் சுரண்டும் சுதந்தரமாகவே இருக்கும்.
(பகத்சிங் தன் நண்பர்களுடன் விவாதித்தவை).
..............

எனது உயிர் அந்த அளவுக்கு அருமையானது அல்ல. எனது கோட்பாடுகளை விலையாக கொடுத்து வாங்குமளவுக்கு அது ஒன்றும் அத்தனை மதிப்புடையது அல்ல. (1930 அக்டோபர் 4ல் பகத்சிங் அவரது தந்தைக்கு எழுதிய கடிதத்திலிருந்து --- சாண்டர்ஸ் கொலைக்கும் என் மகனுக்கும் தொடர்பில்லை என அவரது தந்தை தீர்ப்பாயத்துக்கு கடிதம் எழுதியமைக்கு பகத்சிங் எழுதிய பதில் கடிதம்).
...............

செவிகளுக்கு கேட்பதற்காகவே குண்டு வீசப்படுகிறதேயன்றி எவருடைய உயிரையும் பறிப்பதற்காக அல்ல.( பகத்சிங் மற்றும் தோழர்கள் பாராளுமன்றத்தில் வீசிய பிரசுரத்தில் இருந்து)
...............

எனக்கும் வாழ்க்கையின் கவர்ச்சிகளை அனுபவிக்கவேண்டும் எனும் ஆசை நிரம்பவே உண்டு. ஆயினும் தேவைப்படும் நேரத்தில் அனைத்தையும் என்னால் துறந்துவிடவும் முடியும்.( 1929 ஏப்ரல் 5 அன்று பகத்சிங் சுகதேவுக்கு எழுதிய கடிதத்திலிருந்து)

மடை மாற்றம் செய்யலாமே?

பத்திரிக்கை செய்தி : உத்தர்காண்ட் பெரும் வெள்ளத்தில் கேதர்நாத் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.மேலும் கேதார்நாத் கோயில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கராச்சாரியாரின் சமாதியும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இது 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அங்கு இருந்த சிலைகள், லிங்கம் என எதையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை. பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளம் வெடித்துக் கிளம்பி எதிர்பட்டதையெல்லாம் அள்ளிச்சென்றது.

# பாய்ந்து வரும் வெள்ளத்துக்கு சிலைன்னு தெரியுமா? கல்லுன்னு தெரியுமா? சமாதின்னு தெரியுமா? லிங்கமாவது, சிவனாவது, பார்வதியாவது எதிரே உள்ள எல்லாத்தையும் அள்ளித்தான் செல்லும். லிங்கம் தான் சக்தி வாய்ந்ததே, தன் சக்தியின் மூலம் ஓடி வந்த வெள்ளத்தை "வேறு வழியில் போ, என் குறுக்கே வராதே" என்று சொல்லி இருக்கலாமே

பக்தி பகுத்தறிவை முடக்கும்

நேற்று ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் இறை நம்பிக்கையாளர். நான் இறை மறுப்பாளன். ஆனால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டவர்கள். நான் பலமுறை அவரையும், இறை நம்பிக்கையையும், கையாலாகாத கோடிக்கணக்கான கடவுள்களையும் கேலி பண்ணும் போது, அவர் சில மறுப்பும் சொல்லுவார் பல நேரங்களில் பதில் இல்லாமல் சிரிக்கவும் செய்வார். இப்படியே கடந்த காலங்கள் பல. அந்த வகையில் நேற்று வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தை பற்றியும் பேசினோம். 
நான்: அடேய் நண்பா, உங்கள் கடவுள்தானே, இந்த உலகத்தை, ஆறுகளை, மலையை, மழையை மற்றும் மக்களை எல்லாம் உருவாக்கினார், பின்பு ஏன் இந்த மாதிரி பெருவெள்ளம் வந்து இலட்ச கணக்கான மக்களை துன்பத்தில் ஆழ்த்துவதை உங்கள் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்? அதுவும் இன்று வெள்ளத்தில் சிக்கி கொண்டோர் பலர், அகில உலகையும் அடக்கி ஆளும் இறைவனை தரிசிக்க தானே இமய மலைக்கு யாத்திரை சென்றனர். கடவுளை தரிசிக்க வந்தவர்களையே, கடவுள் என் கை விட்டு விட்டார்?

நண்பர் : அவர்களுக்கு கடவுள் முக்தி கொடுத்து விட்டார் . மோட்சம் அடையவே இவ்வாறு செய்துள்ளார்

நான் : உங்க அப்பா இறக்கும் போதும் இவ்வாறு சொல்வாயா?

நண்பர் : நீ எவ்வாறு என் தனி மனித வாழ்க்கையில் தலையிடலாம்? இவ்வாறு அநாகரிகமாக எவ்வாறு நீ பேசலாம்? ஏன் நீ இவ்வாறு கீழ்த்தரமாக பேசுகிறாய்? நீ என்னுடன் இனிமேல் பேசாதே, நான் இப்போது உன்னை பார்க்க விரும்ப வில்லை, இங்கு இருந்து சென்று விடு (இவை அனைத்தும் உரக்கப்பேசினார்)

நான்: (சிரித்து கொண்டு) டேய் , நிப்பாட்டுடா, அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி, உனக்கு வந்தா இரத்தமாடா?

நண்பர் : (அது பலரும் கூடி இருந்த இடம்) நான் உன்னை பார்க்க விரும்பவில்லை, நீ இங்கிருந்து போகிறாயா அல்லது நான் கிளம்பவா? (அனைவரும் எங்களையே பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்)

நான் : அமைதி, அமைதி, அமைதி!!!  நான் இப்போது என்ன அப்படி மோசமாக பேசிவிட்டேன். நீ இவ்வளவு கோபமாக பேச? 

நண்பர் : நான் கீழ்த்தரமானவர்களுடன் பேச மாட்டேன் (செருப்பை போட்டு இருந்த இடத்தில இருந்து கிளம்ப எத்தனிக்கிறார்)

நீதி : கடவுள் பக்தி என்பது பகுத்தறிவுடன் சிந்திக்க அனுமதிக்கவே விடாது. நான் அவர் தந்தை இறந்து விட்டால் என்ன சொல்வாய் என்று கேட்பதின் மூலம் எவ்வாறு அவர் தந்தை இறக்க முடியும் என்று அவர் யோசிக்கவே இல்லை, அவ்வாறு ஒருவர் இறக்க வேண்டும் என்று மற்றவர் சொல்வதால் ஒருவர் இறந்து விடுவாரா என்ன? அப்படி நடக்குமானால் கலைஞர் கருணாநிதி ஆயிரம் முறை அல்லவா இறந்திருக்கவேண்டும்


பக்தர்களே,யோசிப்பீர்!!!

கடவுள் சுற்றுலா சென்று விட்டாரா?


பகுத்தறிவாதி : அய்யா நண்பரே, வட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குகிறதே, புண்ணிய பூமியான இறைவன் இருக்கும் இடத்தை தேடித்தானே பக்த கோடிகள் அனைவரும் யாத்திரை சென்றனர். ஏனப்பா அவர்களுக்கு இந்த சங்கடங்கள். இப்போது மக்களை காக்க வேண்டிய உங்கள் கடவுள் எங்கேயப்பா இருக்கிறார்?


ஆன்மிகவாதி : அவருக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.


பகுத்தறிவாதி : உங்கள் கடவுள் "வட இந்தியாவில் மழை அதிகம் பொழிகிறது, குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கிறது" என எண்ணி தென் இந்தியாவுக்கு இன்ப சுற்றுலா வந்து விட்டாரா?


பக்தர்களே,யோசிப்பீர்!!!

எயிட்ஸ் கர்ம வினைப்பயனா?

பகுத்தறிவாதி : அகிலமும் ஆளும் இறைவனை தரிசிக்க இமய மலைக்கு யாத்திரை வந்த பக்த கோடிகளை, கடவுள் ஏன் கை விட்டு விட்டார்? 

ஆன்மிகவாதி : அவர் அவர்களின் கர்ம வினைப்பயன் 


பகுத்தறிவாதி : கர்ம வினையென்றால் என்ன?


ஆன்மிகவாதி : அதாவது அவர்கள் தங்களுடைய முன் ஜென்மத்தில் செய்த செயல்களின் வினைப்பயனை இப்போது அனுபவிக்கிறார்கள்.


பகுத்தறிவாதி : சரி அய்யா, உங்களுக்கு உயிர்கொல்லி நோயான எயிட்ஸ்(AIDS) வந்தாலும் இப்படியே தான் சொல்வீரா? அதற்கு காரணம் கடந்த பிறவியில் நீங்கள் செய்த பாவத்தின் வெளிப்பாடா? அல்லது இந்த பிறவியில் நீங்கள் ஆடிய ஆட்டமா? எது காரணம் ?


பக்தர்களே,யோசிப்பீர்!!!


பின் குறிப்பு : எயிட்ஸ் நோய் 1981 ஆம் ஆண்டுதான் கண்டு பிடிக்கப்பட்டது.