சனி, 22 ஜூன், 2013

எண்ணிப்பார் கோபியாமல்!


சரசுவதி பூசை ஆயுத பூசை நமக்குப் பலன் தந்ததா? எண்ணிப்பார் கோபியாமல்!

எலக்ட்ரிக், இரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து, ஆப்ரேஷன் ஆயுதங்கள்

தூரதிருஷ்டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன் டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம் ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு இயந்தரம், இரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை உச்சி ஏற மெஷின், சந்திர மண்டலம் வரைபோக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின், இன்னும் எண்ணற்ற புதிய, பயன் தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகிய வைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும், கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பவர் எல்லாம் ஆயுத பூசை சரசுவதி பூசை கொண்டாடாதவர்கள்!

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடாகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுத பூசை செய்தவர்களல்லர் நவராத்திரி கொண்டாடினவர்களல்லர்

நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே சரசுவதி பூசை ஆயுத பூசை இல்லை! ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

ஓலைக் குடிசையும் கலப்பையும் ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண்குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள். தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை. கற்பூரம்கூட நீ செய்ததில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூசை அறியாதவன் கொடுத்துதான் நீ கொண்டாடுகிறாய்.

ஒருகணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்குத் தந்தோம், என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை. அப்படித்தான் கொஞ்சம் நெஞ்சை உறுத்தும். மிரளாமல் யோசி. உன்னையும் அறியாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சு இயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!

மேனாட்டான் கண்டுபிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவிக் கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அக மகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த இரயிலில் ஏறிக் கொண்டு உன் பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!

அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாட வைத்து மகிழ்கிறாயே!

எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்.

சரசுவதி பூசை - விமரிசையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அது நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட் அல்லது இராய்ட்டர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில்லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை. சிபி, சினிமா பார்த்ததில்லை! தருமராசன், தந்திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம், அவர்கள்

சரஸ்வதி பூசை ஆயுத பூசை செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே இராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்கரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கிறோம். இது முறைதானா?

பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த சரசுவதி பூசை ஆயுத பூசை

நமக்குப் பலன் தரவில்லையே, அந்தப் பூசைகள் செய்தறியாதவர், நாம். ஆச்சரியப்படும் படியான அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருடர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக்கும். அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும்.

யோசித்துப் பார் - அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

-------------------------------- பேரறிஞர் அண்னா 'திராவிட நாடு', 26.10.194

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக