சனி, 22 ஜூன், 2013

மெச்சுவேன் உங்க கடவுள் பக்தியை

பத்திரிக்கை செய்தி : கரூர் அருகே உள்ள ஸ்ரீசதாசிவ பிரேமிந்திராள் ஜீவ சமாதியில், எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

#அட மடையர்களே ... எச்சில் இலையில் உருண்டா சட்டையில் (சட்டை போடவில்லையெனில் உடம்பு) அழுக்கு (சோறு) மட்டும் தான் ஒட்டிக்கும். இதை தவிர என்னடா நடந்துவிடும். எந்த பகவானாவது கொஞ்சம் நேரில் வந்து எனக்கு விளக்கம் சொல்ல வருவாரா? 

#கடவுளே  நீ எப்படி நேரில் வருவாய்? (இருந்தால்தானே வருவதற்கு), நீ வராவிட்டாலும் பரவா இல்லை, தயவு செய்து உன் பக்த கோடிகளை அனுப்ப வேண்டாம். பக்த கோடிகள் நம்பிக்கை,தும்பிக்கை ன்னு சொல்லுவாங்க...

#எச்சில் இலையில் உருளுவது சரிதான். தார், கீரிஸ் போன்ற அழுக்கு ஒட்டுனா போகாத பொருட்கள் மீது உருளுங்கடா, அப்போ நான் மெச்சுவேன் உங்க கடவுள் பக்தியை....

யார் செயல்?

உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?

நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?

குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?

எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?

எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?

அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?

அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?

முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?

ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?

மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?

நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?

எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?

அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?

பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?

சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?

தந்தை பெரியார்

எண்ணிப்பார் கோபியாமல்!


சரசுவதி பூசை ஆயுத பூசை நமக்குப் பலன் தந்ததா? எண்ணிப்பார் கோபியாமல்!

எலக்ட்ரிக், இரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து, ஆப்ரேஷன் ஆயுதங்கள்

தூரதிருஷ்டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன் டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம் ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு இயந்தரம், இரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை உச்சி ஏற மெஷின், சந்திர மண்டலம் வரைபோக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின், இன்னும் எண்ணற்ற புதிய, பயன் தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகிய வைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும், கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பவர் எல்லாம் ஆயுத பூசை சரசுவதி பூசை கொண்டாடாதவர்கள்!

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடாகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுத பூசை செய்தவர்களல்லர் நவராத்திரி கொண்டாடினவர்களல்லர்

நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே சரசுவதி பூசை ஆயுத பூசை இல்லை! ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

ஓலைக் குடிசையும் கலப்பையும் ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண்குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள். தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை. கற்பூரம்கூட நீ செய்ததில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூசை அறியாதவன் கொடுத்துதான் நீ கொண்டாடுகிறாய்.

ஒருகணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்குத் தந்தோம், என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை. அப்படித்தான் கொஞ்சம் நெஞ்சை உறுத்தும். மிரளாமல் யோசி. உன்னையும் அறியாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சு இயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!

மேனாட்டான் கண்டுபிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவிக் கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அக மகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த இரயிலில் ஏறிக் கொண்டு உன் பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!

அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாட வைத்து மகிழ்கிறாயே!

எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்.

சரசுவதி பூசை - விமரிசையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அது நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட் அல்லது இராய்ட்டர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில்லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை. சிபி, சினிமா பார்த்ததில்லை! தருமராசன், தந்திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம், அவர்கள்

சரஸ்வதி பூசை ஆயுத பூசை செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே இராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்கரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கிறோம். இது முறைதானா?

பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த சரசுவதி பூசை ஆயுத பூசை

நமக்குப் பலன் தரவில்லையே, அந்தப் பூசைகள் செய்தறியாதவர், நாம். ஆச்சரியப்படும் படியான அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருடர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக்கும். அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும்.

யோசித்துப் பார் - அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

-------------------------------- பேரறிஞர் அண்னா 'திராவிட நாடு', 26.10.194

கடவுள் குழப்பம்

கடவுள் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்ட மனிதன் கடவுள் நம்பிக்கைக்காரர்களில் ஒருவருமே இல்லை. ஒரு வஸ்து இருந்தால்தானே அது இன்னது என்று புரிந்து கொள்ள முடியும். அது இல்லாததனாலேயே கடவுள் நம்பிக்கைக்காரர்கள் ஆளுக்கு ஒருவிதமாய் கடவுளைப் பற்றி உளறிக்கொட்ட வேண்டியிருக்கிறது. அதற்கு பெயரும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் எண்ணிக்கையும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் உருவமும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் குணமும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் செய்கையும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த இலட்சணத்தில் கடவுளைப் பற்றிப் பேசும் பெரிய அறிவாளிகள் பெயரில்லான் - உருவமில்லான் - குணமில்லான் என்பதாக உண்மையிலேயே இல்லானை இல்லான் - இல்லான் - இல்லான் என்றே அடுக்கிக் கொண்டே போகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகிறவர்களே பல பெயர், பல உருவம், பல குணம், பல எண்ணிக்கை முதலியவற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம்விட கடவுள் நம்பிக்கைக்காரர்களிடம் இருக்கும் ஒரு அதிசய குணம் என்னவென்றால், எந்த கடவுளைக் கும்பிடுகிறவருக்கும் கடவுள்கள் யார்? தேவர்கள் யார்? இவர்களுக்கு ஒருவருக்கொருவருள்ள வித்தியாசம் என்ன என்பதில் ஒரு சிறு அறிவும் கிடையாது. மற்றும் ஒரு அதிசயம் - கடவுள் என்பதற்கு ஒரு சொல் வடமொழியிலும் கிடையாது, தமிழிலும் கிடையாது.

தமிழில் சொல்லப்படும் கடவுள் என்கின்ற சொல்லுக்கு உண்டான கருத்துக்கு தமிழிலும் ஒரு சொல் காணப்படுவதற்கு இல்லை

------------------தந்தைபெரியார் - "விடுதலை" 7.10.1962

பகத் சிங் - சில குறிப்புகள்

வெள்ளையரின் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் முதல் கட்டமே. இறுதிப்போராட்டம் சுரண்டலுக்கு எதிராக நடக்க வேண்டியுள்ளது.
சமூக, பொருளாதார சுதந்தரமில்லாமல் கிடைக்கும் வெறும் அரசியல் சுதந்தரம், ஒரு சிலர் பலரைச் சுரண்டும் சுதந்தரமாகவே இருக்கும்.
(பகத்சிங் தன் நண்பர்களுடன் விவாதித்தவை).
..............

எனது உயிர் அந்த அளவுக்கு அருமையானது அல்ல. எனது கோட்பாடுகளை விலையாக கொடுத்து வாங்குமளவுக்கு அது ஒன்றும் அத்தனை மதிப்புடையது அல்ல. (1930 அக்டோபர் 4ல் பகத்சிங் அவரது தந்தைக்கு எழுதிய கடிதத்திலிருந்து --- சாண்டர்ஸ் கொலைக்கும் என் மகனுக்கும் தொடர்பில்லை என அவரது தந்தை தீர்ப்பாயத்துக்கு கடிதம் எழுதியமைக்கு பகத்சிங் எழுதிய பதில் கடிதம்).
...............

செவிகளுக்கு கேட்பதற்காகவே குண்டு வீசப்படுகிறதேயன்றி எவருடைய உயிரையும் பறிப்பதற்காக அல்ல.( பகத்சிங் மற்றும் தோழர்கள் பாராளுமன்றத்தில் வீசிய பிரசுரத்தில் இருந்து)
...............

எனக்கும் வாழ்க்கையின் கவர்ச்சிகளை அனுபவிக்கவேண்டும் எனும் ஆசை நிரம்பவே உண்டு. ஆயினும் தேவைப்படும் நேரத்தில் அனைத்தையும் என்னால் துறந்துவிடவும் முடியும்.( 1929 ஏப்ரல் 5 அன்று பகத்சிங் சுகதேவுக்கு எழுதிய கடிதத்திலிருந்து)

மடை மாற்றம் செய்யலாமே?

பத்திரிக்கை செய்தி : உத்தர்காண்ட் பெரும் வெள்ளத்தில் கேதர்நாத் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.மேலும் கேதார்நாத் கோயில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கராச்சாரியாரின் சமாதியும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இது 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அங்கு இருந்த சிலைகள், லிங்கம் என எதையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை. பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளம் வெடித்துக் கிளம்பி எதிர்பட்டதையெல்லாம் அள்ளிச்சென்றது.

# பாய்ந்து வரும் வெள்ளத்துக்கு சிலைன்னு தெரியுமா? கல்லுன்னு தெரியுமா? சமாதின்னு தெரியுமா? லிங்கமாவது, சிவனாவது, பார்வதியாவது எதிரே உள்ள எல்லாத்தையும் அள்ளித்தான் செல்லும். லிங்கம் தான் சக்தி வாய்ந்ததே, தன் சக்தியின் மூலம் ஓடி வந்த வெள்ளத்தை "வேறு வழியில் போ, என் குறுக்கே வராதே" என்று சொல்லி இருக்கலாமே

பக்தி பகுத்தறிவை முடக்கும்

நேற்று ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் இறை நம்பிக்கையாளர். நான் இறை மறுப்பாளன். ஆனால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டவர்கள். நான் பலமுறை அவரையும், இறை நம்பிக்கையையும், கையாலாகாத கோடிக்கணக்கான கடவுள்களையும் கேலி பண்ணும் போது, அவர் சில மறுப்பும் சொல்லுவார் பல நேரங்களில் பதில் இல்லாமல் சிரிக்கவும் செய்வார். இப்படியே கடந்த காலங்கள் பல. அந்த வகையில் நேற்று வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தை பற்றியும் பேசினோம். 
நான்: அடேய் நண்பா, உங்கள் கடவுள்தானே, இந்த உலகத்தை, ஆறுகளை, மலையை, மழையை மற்றும் மக்களை எல்லாம் உருவாக்கினார், பின்பு ஏன் இந்த மாதிரி பெருவெள்ளம் வந்து இலட்ச கணக்கான மக்களை துன்பத்தில் ஆழ்த்துவதை உங்கள் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்? அதுவும் இன்று வெள்ளத்தில் சிக்கி கொண்டோர் பலர், அகில உலகையும் அடக்கி ஆளும் இறைவனை தரிசிக்க தானே இமய மலைக்கு யாத்திரை சென்றனர். கடவுளை தரிசிக்க வந்தவர்களையே, கடவுள் என் கை விட்டு விட்டார்?

நண்பர் : அவர்களுக்கு கடவுள் முக்தி கொடுத்து விட்டார் . மோட்சம் அடையவே இவ்வாறு செய்துள்ளார்

நான் : உங்க அப்பா இறக்கும் போதும் இவ்வாறு சொல்வாயா?

நண்பர் : நீ எவ்வாறு என் தனி மனித வாழ்க்கையில் தலையிடலாம்? இவ்வாறு அநாகரிகமாக எவ்வாறு நீ பேசலாம்? ஏன் நீ இவ்வாறு கீழ்த்தரமாக பேசுகிறாய்? நீ என்னுடன் இனிமேல் பேசாதே, நான் இப்போது உன்னை பார்க்க விரும்ப வில்லை, இங்கு இருந்து சென்று விடு (இவை அனைத்தும் உரக்கப்பேசினார்)

நான்: (சிரித்து கொண்டு) டேய் , நிப்பாட்டுடா, அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி, உனக்கு வந்தா இரத்தமாடா?

நண்பர் : (அது பலரும் கூடி இருந்த இடம்) நான் உன்னை பார்க்க விரும்பவில்லை, நீ இங்கிருந்து போகிறாயா அல்லது நான் கிளம்பவா? (அனைவரும் எங்களையே பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்)

நான் : அமைதி, அமைதி, அமைதி!!!  நான் இப்போது என்ன அப்படி மோசமாக பேசிவிட்டேன். நீ இவ்வளவு கோபமாக பேச? 

நண்பர் : நான் கீழ்த்தரமானவர்களுடன் பேச மாட்டேன் (செருப்பை போட்டு இருந்த இடத்தில இருந்து கிளம்ப எத்தனிக்கிறார்)

நீதி : கடவுள் பக்தி என்பது பகுத்தறிவுடன் சிந்திக்க அனுமதிக்கவே விடாது. நான் அவர் தந்தை இறந்து விட்டால் என்ன சொல்வாய் என்று கேட்பதின் மூலம் எவ்வாறு அவர் தந்தை இறக்க முடியும் என்று அவர் யோசிக்கவே இல்லை, அவ்வாறு ஒருவர் இறக்க வேண்டும் என்று மற்றவர் சொல்வதால் ஒருவர் இறந்து விடுவாரா என்ன? அப்படி நடக்குமானால் கலைஞர் கருணாநிதி ஆயிரம் முறை அல்லவா இறந்திருக்கவேண்டும்


பக்தர்களே,யோசிப்பீர்!!!